வெள்ளி, 30 ஜூலை, 2021

அவசியம் என்பது உணவுத்தேவைக் குறிப்பு.

 மனிதன் ஓரிடத்தில் இருந்து வாழாத நிலையில் (nomad),  எங்கு சென்றாலும் இடும்பை கூர் அவன் வயிறு அவனுடனே சென்று அவனை வெகுவாக வதைத்தது.  அவன் எல்லாச் செல்வங்களும் பெற்று இருந்து(settled) வாழத் தொடங்கிய போதும் அவன் வயிறு அவனை விடவில்லை.  அதற்கு வேண்டியதைக் கேட்டு வயிறு அவனை வாட்டத் தொடங்கியது. இதனின்று விளைந்த ஒரு மக்கள் சொல்தான்   " அவசியம்" என்பது.

அகத்திய இலக்கணம் தமிழுக்கு இன்றியமையாதது என்ற நிலையில்,  அகத்தியம் என்ற சொல்லே அவசியம் என்று திரிந்தது என்றார் சொல்லறிஞர் தேவநேயப் பாவாணர்.  இதுவும் நல்ல விளக்கமே யாயினும், உணவின் தேவை அடிப்படையில் இச்சொல் விளைந்தது என்று முடித்தலே பொருத்தமென்று யாம் கருதுகிறோம்.  அவசியம் என்பது தமிழன்று என்றனர் சிலர்.

இதுபற்றிய எம் ஆய்வு வருமாறு:

அவசியம் என்பதன் முந்துவடிவம் ஆவசியம் என்பதே.  

மனிதனின் தேவையெல்லாம் உணவின்பாற் பட்டதே  ஆகும்.  ஒருசாண் வயிறு இல்லாட்டா இந்த உலகினில் ஏது கலாட்டா என்பதே உண்மை.

செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று நாயனார் கூறியிருந்தாலும்,  உணவு வயிற்றைச் சென்றடைந்த அமைதிநிலையின் பின்னர்தான் மற்ற தேவைகளைத் தேடுகின்றனர் மக்கள்.  அடுத்த மண்டபத்தில் பந்தி என்பதைக் கேட்ட பற்றர்கள், கோயிலில் இடையிலிருந்த கதவைப் பேர்த்துக்கொண்டு அந்த மண்டபத்தில் நுழைந்ததை யாம் நேரடியாகவே கண்டுள்ளோம். அங்கிருந்த பூசாரி, இவர்கள் சாமி கும்பிட வந்தார்களா சாப்பிட வந்தார்களா என்று தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.   தத்துவங்கள் பேசி உண்மையை மறைப்பதில் எமக்கு உடன்பாடில்லை.

ஆவ   அசி அம் என்பதே ஆவசியம் என்றாகி அவசியம் என்று குறுகிற்று.

அசித்தல் : உண்ணுதல்.    அசியம் -  அசி+ அம் :  உணவு.   இவ்வாறு இன்றியமையாமை உணர்த்தப்பட்டது.  இங்கு ஆவன உணவே,  அதாவது உணவின்றி ஆகாது என்பது. இது பின் தன் உணவு பற்றிய பொருளை இழந்து வழங்குகிறது.

ஆவது:  இது ஒருமை.  ஆவ அல்லது ஆவன :  இரண்டும் பன்மை.  ஆ+ அ > ஆவ.  ஆ+ அன் + அ> ஆவன. இரண்டாம் வடிவத்தில் அன் இடைநிலை உள்ளது.

ஆவ அசி  அம் > ஆவசியம் என்பது குறுகி,  பின்னர் அவசியம் ஆயிற்று. 

அசியம் என்ற தனிச்சொல்  அமையவில்லை. அசித்தல் - வினைச்சொல்.  அசித்தல் என்பதன் மூலம் அயில்-தல்.   அயி -  அசி: இது யகர சகரத்  திரிபு.  இத்திரிபில் அயில் என்பதன் லகர ஒற்று வீழ்ச்சி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



வியாழன், 29 ஜூலை, 2021

கச அடிச்சொல். இரு வெளிப்பாடுகள்.

 கச என்ற அடிச்சொல் :

ஓன்று:  கச > கசத்தல் என்ற வினைச்சொல்லிலிருந்து விளைந்த சொற்கள்.  இவை முன்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இன்னொன்று:  கழிச்ச என்ற சொல். இது எழுத்தில் கழித்த என்று எழுதப்படும். நமது வீட்டுமொழி கழித்த என்று சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.  மலையாளத்தில் கழிச்சு  (ஊணு கழிச்சு) என்பதே இலக்கிய வடிவம். எது இலக்கிய வடிவம் என்பது இனமொழிகளுக்கிடையில் வேறுபடும். இலக்கிய வடிவத்தில் உயர்வுமில்லை. இலக்கியத்திலில்லா வடிவத்தில் தாழ்வுமில்லை. கருத்துக்கள் ( அபிப்பிராயம் அல்லது ஆங்கிலத்தில் ஒபினியன்) அருகியே பொருட்டாகும். பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படவேண்டியவை. இலக்கிய வடிவம் இன்சொற்களாய் மலருங்கால் ஒருவன் அவற்றை நுகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கலாம்.  அப்போது அது உயர்வு உயர்வு உயர்வு என்று உரத்துக் கூவிக்கொண்டு அதன்மூலம் அவனது இரத்த அழுத்தம் குறைந்து நன்மை நேர்கிறதா என்று கவனித்துக்கொண்டு  வாழ்க. எமக்கு எந்த மறுப்புமில்லை.  யாமும் அப்படி இலக்கியத்தைப் புகழ்வதுண்டு.  புகழாமல் இருப்பதுமுண்டு. இக்கணத்தில் அவற்றை மனித ஒலிகள் என்ற நிலைக்குத் தள்ளி திறனாய்வின்றிப் பேசுகிறோம். ஆய்வு நாற்காலியில் அமர்ந்தால் உடனே இந்த நிலைக்குத் திரும்பிவிடவேண்டும்.  அதாவது காய்தல் உவத்தல் என்பது ஆய்வுக்கு விலக்கு.

கழிச்ச என்பது இடைக்குறைந்தால் கச என்று வந்துவிடும்.

ஆகவே இரண்டு கச என்னும் வடிவங்கள் உண்டு. ஒன்று முதலாவது. இன்னொன்று அடுத்துக் கூறிய இடைக்குறை வடிவம். 

இந்த இடைக்குறை வடிவத்தைப் பயன்படுத்தி எந்த இடுகையும் இன்னும் இடவில்லை.  தக்க தருணத்தில் அது செய்யப்படும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 


வாழ்வில் பொம்மை அவசியம் (படம் ) நாய்க்குட்டி




 சோறும் கிடைத்து

நீரும் கிடைத்தாலும்

நேரம் இருந்தால்

பொம்மைகள் வைத்த

புதுமை விளையாட்டு!

இல்லை என்றால்

இல்லையே இன்பம் வாழ்வில்!

சின்னஞ்  சிறுகுட்டி  எனக்கு

என்னதான் வாழ்வில் இனி?


கவிதை தந்தவர்: சிவமாலை.

படம் தந்தவர்: திரு ரோஷினி அவர்கள்.

சின்ன நாயின் பெயர்:  யூகி.


 சோறு என்று கவிதையில் சொன்னாலும்

நீங்கள் எங்களின் சிறப்புணவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

சோறு தின்னமாட்டோம்  

எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால்

நான் கைகொடுத்து வரவேற்பேன்


இப்படிக்கு  உங்கள் யூகி.  

.