புதன், 7 ஜூலை, 2021

அம்மா - சொல் வடிவங்கள்.

 அம்மா என்ற சொல் தமிழர்க்கு  வீட்டில் வழங்கும்  ஒரு சொல் ஆகும். இச்சொல் தமிழ்நாட்டைத் தவிரப் பிற இடங்களிலும் வழங்குகிறது.  மேலும் அம்மா என்றே வழங்காமல் திரிந்தும் வழங்குகிறது.

உம்மா என்றும் இது சில இடங்களில் வழங்கும்.  இச்சொல்லே இடைக்குறைந்து உமா எனவும் வழங்கும்.    அம்மை >  உம்மை > உமை என்றும் இடைகுறைந்து வழங்குதலும் உண்டு.

இந்தியாவிலே இது சில மாநிலங்களில் இ-மா என்றும் வழங்கும்,   குறிப்பாக கிழக்கு இந்தியாவில் இதைச் செவிமடுக்கலாம்.

போலினிசிய மொழியாகிய மலாய்மொழியில் இ-மாக்  என்று வழங்கும்.  இதுதவிர,  ஈபு  என்ற சொல்லும் வழங்குகிறது.

சமஸ்கிருதத்தில் மாதா என்ற சொல் வழங்குகிறது.  இச்சொல்லில்  அம்மா என்ற சொல்லின் இறுதி  முதலாகவும்,   தாய் என்ற சொல்லின் முதலெழுத்து  அதில் இறுதி எழுத்தாகவும் இருப்பதால்,   மாதா என்பது பகவொட்டுச் சொல் .

இலத்தீனில் இது மாற்றர் (mater)  ஆகிறது.  (அல்மா மாற்றர் என்ற தொடர் காண்க).

வயதான பாட்டியைச் சீன மொழியில்  "அம் "  என்று பணிவுடன் சொல்வர். அம்மாவை  Mǔqīn (மூச்சின்) என்று சொல்வர் எனினும் லாபு என்ற சொல்லும் உள்ளது (கிளைமொழியில்).  இது சிலவேளைகளில் "நாபுவே" என்று திரித்தும் உச்சரிக்கப் படுவதுண்டு.

பாரதிதாசன் தமிழ்ப்பற்று

பாவேந்தர் என்று பாராட்டப்பெற்ற பாரதிதாசன்:

"அமைவாம் உலகின் மக்களை எல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய்  அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு"

----  என்று பாடி,  தமிழரே மூத்த இனத்தினர் என்று இசைக்கிறார். பாரதியாரும் இவ்வாறே "தொடக்கம் அறிய முடியாதவள் எங்கள் தாய்"  என்று தமிழைப் புகழ்கிறார்.    அம்மா என்பது தமிழ் வார்த்தை என்று கவியரசர் கண்ணதாசான் சொல்கிறார். பல மொழிகளையும் ஈன்றது தமிழ் என்று சொல்வதால் அம்மா என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கலாம். மேலும் சிவனுக்கு அம்மையப்பன் என்ற பெயரும் உள்ளது. புறநனூறு என்ன சொல்கிறது என்பதை நம் அன்பர்கள் அறிந்துள்ளனர்.  தமிழ்ச்சொற்கள் உலகெங்கணும் வழங்குகின்றன,  நண்ணிலக் கிழக்கு ( மிடில் ஈஸ்ட்),  ஆப்ரிக்க மொழிகள்,  அஸ்திரேலியப் பழங்குடிகள் மொழி,  தென் கிழக்காசிய மொழிகள் முதலியவற்றிலும் சான்றுகள் கிட்டியுள்ளன என்பர். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

இரவெல்லாம் காக்கும் நாய்க்குட்டி ( தூங்கும் படம்).

 இந்தச் சிறிய நாய்,  இரவெல்லாம் வீட்டுக்குள் சுற்றி சுற்றி வந்துவிட்டு,  காலை வந்தவுடன் களைத்துப் போய்ப் படுத்து உறங்கிவிடுமாம்.  வீட்டில் யாராவது இரவில் எழுந்தால் உடனே அருகில் வந்துவிடுமாம்.  பகலில் வீட்டிலிருப்பவர்கள் அங்குமிங்கும் நடமாடுவதை அது கண்டுகொள்வதே இல்லையாம்.  ( சாப்பாட்டு நேரம் தவிர )

எப்போதும் இரவுநேர வேலையிலே ஈடுபடுவதால், இந்த நாய்க்குட்டிக்குப் பெயர் -   "Night shift doggie" என்று அழகாகக் குறிப்பிடுகிறார்கள்.



அனுப்பியவர்:  திருமதி  ஓ.  ரோஷினி. ஹாங்காங்.   நன்றி/ 


திங்கள், 5 ஜூலை, 2021

இகர-ஏகாரத் திரிபு: தேதி, தேரை.

திரைதல் என்றால் நேர்மட்டமாக இல்லாமல் மேலும் கீழுமாக வளைந்து செல்லுதல்,  அல்லது உள்ளும் புறமுமாய்  நிலைகெடுதல். மனிதனின் இளமை நாட்களில் உடலின் மேல்தோல் அழகாக சுருக்கம் எதுவுமின்றிக் காட்சிக்கினிமையாக இருக்கும்.  கிழவனாகிவிட்டபின் தோலில் திரை விழும்.  அதாவது சுருக்கங்கள் தோன்றி அகவை மிகுதியைத் தெரிவிக்கும்.  முதிர்வில்  நரை, திரை, மூப்பு, மரணம் என்று துன்பங்கள் தோன்றிப் புவி வாழ்வு முடிவுறும்.  இந்நான்கனுள்  நாம் இங்கு கருதுவது திரை என்னும் நிலைமையை.  

துணி முதலியவை திரையாகத் தொங்கி  சாளரம் முதலியவற்றுக்கும் மேடையின் முகப்புக்கும் அழகு சேர்க்கும். சேலையணிதலிலும்,  கட்டும்போது அழகிய வளைவுகள் திரைபோலும் தோன்றும்படி கட்டப்படுவதுண்டு.

தவளை வகைகளில் தேரை என்பது ஒன்று.  இது கல்லினுள்ளும் வாழுமென்பர். இதன் மேல்தோல் திரைந்திருப்பதால் இது  தேரை எனப்பட்ட்து.   திரை > தேரை ஆகும்.   திரை என்பது தீரை என்று நீட்சி பெறாமல் தேரை என்று ஏகாரத்தில் தொடங்குதல் காண்க.

திகை என்ற சொல், திகைதல் அல்லது தீர்மானிக்கப் படுதலைப் பொருளாக உடையது.  திகை என்ற வினை, தி என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று,  திகைதி ஆகி,  இடையில் உள்ள ஐகாரம் குறுகி,  திகதி ஆகிவிடும்.  இது பின்னும் திரிந்து,  தேதி  ஆகும்.

இவ்விரண்டு சொற்களிலும்  ( திரை> தேரை;  திகை > திகைதி > திகதி > தேதி )  முன் நின்ற இகரம் ஏகாரமாகத் திரிந்து முடிதல் காண்க

திகதி என்ற சொல்லும் இடைக்குறைந்து திதி என்று வரும். சில சொற்களில்  பொருள் சிறிது திரிந்தும்  சில திரியாதும் வருதல் காண்க.

தேய் என்ற வினை தீ என்று திரிந்ததில் ஏகார முதலெழுத்து ஈகாரமானதும் காண்க.

இவற்றையும் அறிக:   

கத்  - ஒலி குறிக்கும் அடிச்சொல்.  கத் > கித் > கீதை;  கீதம்.  கத் > கதம், கதை.

கத்  - கதம்;  கத் >  கதி ( ஒலி). [ சங்கதி ]

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.