இன்று சண்டாளன் என்ற சொல்லினை அறிந்தின்புறுவோம்.
சண்டாளன் என்பவன் ஓர் இறைவணக்கத் தொழிலுடையார் பெண்ணுக்கும் பிற குலத்திற் பிறந்த ஆண்மகனுக்கும் பிறந்தவன் என்று பழைய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆபிடியூபா முதலான அறிஞர்களும் இச்சொல்லை ஆய்ந்துள்ளனர். நாம் இச்சொல்லை சில ஆதாரங்களுடன் காண முற்படுவோம்.
இச்சொல்லில் உள்ள " ஆளன்" என்ற சொல் உண்மையில் இது தமிழில் உண்டான ஒன்று என்பதைத் தெரிவிக்கின்றது.. பண்பாளன் என்ற சொல்லில் ஆளன் வருவது போலவே இங்கும் வந்துள்ளது. ஆளன் என்பதைப் பிரித்தெடுக்க, முன் இருப்பது சண்டு என்ற சொல்தான்.
சண்டி, சண்டு என்பna இடக்குகள் செய்தலைக் குறிக்கிறது. கடுங்கோபமுடையவன், சண்டன் எனப்பட்டான். ஒருவேளை இத்தகு பிறப்பில் வந்தோரை இழிவாக நடத்தியதால் அவர்கள் கோபக்காரர்களாய் மன்பதைக்குள் வளர்ந்து திரிந்தனர் என்றும் நாம் எண்ணலாம். இவர்களை எமனுக்குப் பிறந்தவர்கள் என்று பிறர் பழிப்பது வழக்கமாய் இருந்தது என்று எண்ண இடமுண்டு.
பெரும்பாலும் சண்டைகள் அண்டையிலிருப்போரிடையே தாம் பெரிதும் ஏற்படுகின்றன. இன்றும் இது உண்மை. தென் கிழகாசியாவில் உள்ள ஒருவருக்கு ஆர்க்டிக் துருவவாசியுடன் சண்டை ஏற்படும் வாய்ப்பு இன்றுமே மிக்கக் குறைவுதான். சண்டை என்ற சொல்லை அமைக்குங்கால் அண்டையில் இருப்போரிடை ஏற்படுவதென்பதை மொழி ஆக்கியோர் நல்லபடி கவனித்துக்கொண்டுதான் செய்துள்ளனர். சொல்லியலின்படி, அண்டு > அண்டை > சண்டை என்று வருவது ஏற்புடையதே ஆகும். அகர வருக்கம் சகர வருக்கமாய்த் திரியும். நீர் ஆடும் அல்லது உள்ளிருக்கும் கலம் ஆடி > சாடி ஆனது. அடுப்பில் அட்டு ( சமைத்து ) உணவு செய்யும் கலம் அட்டி > சட்டி ஆனது, அமணர் சமணர் ஆனார். ஆ என்று வாயைப் பிளந்து இறப்பதால் ஆ> சா என்று வந்ததா என்பது ஆய்வுக்குரியது ஆகும். ஆ > சா. " நான் வாயைப் பிளந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளை யார் பார்ப்பது ?" என்பது பேச்சு வழக்கில் வரும் வாக்கியம். இதுவரை சாய் > சா என்பதே சொல்லியலார் தெரிவித்திருப்பது ஆகும். அகர சகரத் திரிபுகள் பழைய இடுகைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆங்குக் காண்க.
ஒருவனை அண்டி இருந்துகொண்டு அண்டினவனையே ஆள நினைப்பவன் அண்டு ஆளன் அல்லனோ? அது முனையும்கால் அவன் இடக்கு மடக்குகளும் செய்வான். எனவே அண்டு ஆளன் என்பதே சண்டாளன் என்றானது. பெரிதும் ஒரு பூசாரியை அண்டி இருந்துவிட்டு பூசாரியின் மகளை அடைந்துவிட்டுப் பிள்ளை பெற்றுக்கொண்டமையினால் பிறந்த மகற்குச் சண்டாளன் என்று பெயர் வருதல் ஒன்றும் வியப்புக் குரியதன்று.
இவர்களிற் சிலர் நாய் வளர்த்துக்கொண்டு அதற்குச் சமைத்து உணவு கொடுத்தனர் என்று தெரிகிறது. இவர்களுக்கு "நாய்க்கெரிப்போன்" என்ற பெயர் வந்தது. இது கடைக்குறைந்து "நாய்க்கெரி" என்று வரும். இதை மேலும் தொடராது விடுவோம். நாய்க்கெரிகளும் சண்டாளரே ஆயினர்/
சண்டாளர் என்ற பகுப்பினில் வந்தோர் பிறர் உளர். பின்பொருநாள் காண்போம்.
மெய்ப்பு பின்.