ஞாயிறு, 29 டிசம்பர், 2019

வெளியிடாத சிறு கவிதை

முன் எழுதி வெளியிடாத ஒரு கவிதையை இப்போது பதிவு செய்கிறேன்.  படிதது  மகிழுங்கள்.


கலகம் செய்யும் மனப்பாங்கு
கல்லெடுத் தெறியும் குள்ளமனம்
உலகம் வியந்த சுதந்திரத்தை
ஒதுக்கி வீசுதற்  கொப்பாகும்.

நிலவும் வேற்றுமை  எதுவேனும்
 கலந்து நின்று   முடிவெடுத்தே
அல்லன மாற்றி நல்லனவே
ஆக்கும் நெறியே அடைந்திடுவீர்





சனி, 28 டிசம்பர், 2019

விபுலாந்த அடிகள். பேராசிரியர்.

விபுலானந்த அடிகள் சிறந்த தமிழறிஞர்.
(1892 - 1947)
அவர் மேற்கொண்ட இது துறவுப் பெயர்.  இதுவும் சிறந்த பெயரே.இங்குக் கூறிய சொல்லாய்வு இடுகைகளைப் படித்துவரும் நேயர்களுக்கு இப்பெயர் எப்படி அமைந்தது என்று தெரிந்திருக்க வேண்டுமே!

இப்போது அதைக் கூறுவோம்.


விழுமிய புலம்  =  சிறந்த நாடு.  விழுமிய புலம் என்பது செந்தமிழ், தனித்தமிழுமாம்.

இதைச் சுருக்கி  விழுபுலம் எனல்.

அப்போதும் இது ஒருசொன்னீர்மைப் பட்டுவிடவில்லை.

விழு , புலம் என்றிரு சொற்கள் உள்ளன.  இன்னும் இது ு  சொற்றொடர்தான்.

விழுபுலம் >  விபுலம்.  இப்போது ஒரு சொல்லாய் விட்டது.  இங்கு ழுகரம் தொக்கு நின்று இடைக் குறை ஆனது.

ஆனந்தம் என்ற சொல்லை ஆய்ந்தால் அது:

ஆ+ நன்று + அம்  என்பவற்றை உள்ளடக்கியது என்று அறியலாம்.

நன்று என்பது நல்+ து >  நன்+து  என்பதுதான்.

நல்+து என்பது நன்று என்றுமட்டும்தான் தமிழில் வருமோ? இல்லையே.  நல்+து = நற்று  என்றுகூட வருவதற்குச் சந்தி இலக்கணம் இடம்தரும். நாம் இன்று  நற்று என்ற சொல்லை மறந்தோம். அவ்வளவுதான்.

நன் து என்பது  நந்து அல்லது நன்-து என்றும் வரலாம்.  முந்து பிந்து என்ற சொற்கள் அப்படி அமைந்தன.  சிந்து என்பதும் அதுபோல.   சின்= சிறிய.  து விகுதி.  சில் > சின் ( ந்  ).  சந்தித் திரிபிலும் அல்லாத திரிபிலும்  ல் -ந் ஆகும்.

நன்று -  நற்று போல சிற்று  என்றும் ஒரு சொல் உள்ளது.  சில்+ து = சிற்று.

எனவே  ஆனந்தம் என்பது  ஆ + நல்(நன்) + து +அம்  அன்றி வேறில்லை.
ஆக அல்லது இறுதியான அல்லது மிக்க நன்றான மகிழ்வுநிலை. நன்மை அல்லது நன்றில் உண்டாவது மகிழ்வு.  உறுபொருள்: நன்மை. அதிற் பெறுபொருளே மகிழ்வு.

விபுலானந்தர் என்பவர் விழுமிய மண்ணில் ஆனந்தமாக இருப்பவர்
என்பது  பொருள்.

நாமும்  ஆ+நன்+து+அம் காண்கிறோம்.

குறிப்பு

உறுபொருள் -  original or etymological meaning
பெறுபொருள்-  derived  meaning



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதும்போதே இடுகைகள் மறைந்து மீளாமற் போவதால் தட்டச்சுப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை, வெளியிட்ட பின் திருத்தலாம் என்றே வெளியிடவேண்டியுள்ளது. பிழைபொறுத்து நலம் நண்ணுவீராக.  எமக்குக் கரைச்சலுக்குக் குறைச்சல் இல்லை என்றாலும் தளர்ச்சி ஒன்றுமில்லை.

திருத்தம் வேண்டின் பின்.

 

 


செவ்வாய், 24 டிசம்பர், 2019

இரத்து > ரத்து இன்னும் சில விளக்கம்.

ரத்து அல்லது இரத்து என்பதை அறிவோம்.

இறுதல் என்றால் முடிதல்.  இதிலிருந்து தோன்றிய எச்ச வினைகள்  :  இற்று :  இது வினை எச்சம்.  இற்றுப் போயிற்று என்பர்.  பெரும்பாலும் இரும்புப் பொருள் பற்றிப் பேசுகையில் இச்சொல் பயன்படும். (  சட்டியில் தூர் இற்றுப் போய்விட்டது என்பது காண்க.)   இற்ற என்பது பெயரெச்சம்.  மூவசைகளால் இற்ற இறுதியடி என்பது காண்க.  பெயரெச்சம் பெயரைத் தழுவி நிற்பது. வினையெச்சம் வினையைத் தழுவி நிற்பது.

இறு என்ற வினைச்சொல் தி  விகுதி பெற்று இறுதி என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது.   சவ  ஊர்வலம் இறுதி ஊர்வலம் எனப்படும்.   மாநிலங்கள் அவையில் இறுதிக் கூட்டம் என்பது காண்க.

ரத்து என்பது து என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உண்டாகும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.  தொழில் என்றது இங்கு வினைச்சொல்லை.

இறு+ து >  (  இறு+ த் + து )  >   இரத்து  > ரத்து.

இச்சொல் திரிபு அடைந்துள்ளது.  விகுதி வந்து புணர, ஒரு தகர ஒற்று (த்) தோன்றியது.  பகுதியின் ஈற்றில் நின்ற றுகரம் றகரமாக மாறிப் பின் ரகரமாகத் திரிந்துள்ளது.  இரவு என்பது ராவு என்று தலையிழந்து முதல் நீண்டு பேச்சு வழக்கில் வருவது போல, இரத்து என்பது தலையிழந்து நல்ல வேளையாக முதலெழுத்து நீளாமல் ரத்து என்று நின்றுவிட்டது.

இதைப் பாருங்கள்:

இரக்கமுள்ள ஆய்  (  அதாவது அம்மன் ) :  இரக்க ஆய் >  இரக்க ஆயி > ராக்காயி.  தலையிழந்து முதல் நீண்டுவிட்டது.  இரக்கமுள்ள அம்மா > இரக்க அம்மா > ராக்கம்மா.

இரவில் வந்து கடிக்கும் ஒரு சிறுவகைக் கொசு இராக்கடிச்சி > இராக்கச்சி > இராக்காச்சி.  நடுவில் வந்த டி என்னும் வல்லெழுத்து மறைவு. கச்சி காச்சி ஆனாலும் கா(ய்)ச்சுவதற்கு ஒன்றுமில்லை.  ராக்காச்சி என்பது தலையிழந்த சொல்.

கேடு > கே > கேது  (   இராசிநாதன் பெயர் அல்லது கிரகத்தின் பெயர்).
பீடுமன்(னன்)  > பீமன் > வீமன்.

கேடுது >  கேது
பீடுமன் > பீமன் என்றும் காட்டலாம்.

வல்லெழுத்து மறைவு கண்டீர்.

இரக்கம் என்பது ரட்சம் என்று மாறும்.  பக்கி என்பது பட்சி என்று மாறும்.

ரட்ச ரட்ச ஜெகன்மாதா......

அருட்பெரும் உலக அம்மை.

இரக்கம் > ரக்கம் > ரட்சம் > ரட்சித்தல்.

ரட்சகர் ஏசு என்ப.

எனவே

இறத்து > இரத்து > ரத்து.

இறு என்பது இர என்று மாறுதல்போல்  வரு + து > வரத்து (போக்குவரத்து )  என்றும் திரிதல் காண்க.

சின்னாளில் மறுபார்வை