இன்று கௌரவித்தல் என்ற சொ ல்லின் அமைப்பினை ஆய்வு செய்வோம்.
முன்னா ளாய்வுகளின்படி இது குரு ( கற்பிப்போன்) என்னும் சொல்லினின்று வருகிறதென்பர். இருக்கலாம்! முன்னோர் கூறியதை மதிப்போம், மாண்பென்று காண்போம். இது நம் கடனே ஆகும்.
ஆயினும் ஆய்வதும் அறிவுடைமையே. இல்லையேல் இறக்கையற்ற மனிதன் ஒலிமிகைப் பறவூர்தியில் விண்ணிற் செல்வதெப்படி?
குரு என்னும் சொல்லைப் பார்ப்போம்.
குரு என்ற சொல் அடிப்படையில் ஒலி என்று பொருள்படுவது.
குர்ர் குர்ர் என்று ஒலி எழுப்பும் சிறு பறவை குருவி ஆனது.
குர்+ வி = குருவி. வி என்பது விகுதி. உகரம் ஒரு சாரியை. இடைநிலை எனினுமாம். (கல்> கல்வி. வி: விகுதி).
குர் > குரங்கு. ( குர் என்ற ஒலியெழுப்பும் விலங்கு).
இது வலித்துக் குரக்கு என்றுமாகும்.
குர் > குரம் (ஒலி).
குர் > குரல். (தொண்டையொலி, வாயொலி.)
குர் > குரைத்தல். (நாயொலி)
குர்> குரவை: ஒலி. ( ஒலியுடன் மகளிர் ஆடுவது).
முற்காலத்து ஆசிரியன்மாரெல்லாம் மிகுந்த ஒலி எழுப்பியே மாணவர்க்குக்
கற்பித்தனர் என்பது அறிக. ஆகையால் சொற்கள் இவ்வாறு எழுந்தன.
வாய்> வாய்த்தி > வாய்த்தியார் > வாத்தியார். வாய் என்பது ஒலியுறுப்பு.
குர் > குரவர் = ஆசிரியர்.
குர் என்பது உகர ஈறு பெற்றும் பெயராயிற்று..
உகர ஈறு பெற்ற வேறு சொற்கள்:
பரு, உரு, மரு என்பவும் பிறவும்.
குரு என்பது பின் அயலொலி ஏற்றது.
நல்ல அறிவாளியை ஓர் ஆசிரியனுக்கு நிகராய் மதித்து அதை வெளியிடுவதே
கௌரவித்தல் எனலாம். பிற வகையின பின் வந்தவை என்பது தெளிவு. ஒப்புமைகள் பின்னர் தோன்றுவன.
அரசன் தன் பாதுகாப்பும் துணையாகும் வலிமையும் கருதி யாரையும் கவுரவிக்கலாம். இதில் ஒருவர் ஆசிரிய நிலைக்கு மேலெழும்பினார் என்பது
அவ்வளவு பொருத்தமானது என்று கூறுவதற்கில்லை. அவர் உண்மையில்:
கா+ உறவு + இ = காவுறவி > கவுரவி : கவுரவிக்கப்பட்டார் என்பதே சரி.
முதலெழுத்துக் குறுக்கம்.
றகரத்துக்கு ரகரம்.
இத்தகு திரிபுகள் பற்பல நாம் முன் காட்டியுள்ளோம்.
அரசன் அன்னாரைக் காக்கவும் அன்னார் அரசனைக் காக்கவுமான உறவு ஏற்பட்ட நிலையே கவுரவித்தல்.
சிந்தித்து மகிழ்வீர்.