இன்று பீரங்கி என்ற வெடியெறி கருவியைக் குறிக்கும் சொல்லினை ஆய்ந்து இன்புறுவோம்.
பீச்சுதல் என்ற சொல் தமிழில் நன்`கு பயன்பாடு கண்ட ( அதாவது வழக்குப் பெற்ற ) சொல்லாகும். இது ஒரு கடைக்குறைச் சொல். இறுதி எழுத்து மறைந்த சொல். இது முன்வடிவில் பீர்ச்சுதல் என்று இருந்தது. பீர்ச்சு என்ற வினையில் பீர் என்பதே மூலவினை. இறுதி ~சு என்ற ஒலியானது வினையாக்க விகுதி. புட்டியைத் திறந்தவுடன் உள்ளிருந்த நீர் பீரென்ற அடித்துவிட்டதென்பதைக் கேட்டிருக்கலாம். பீர் என்னாமல் பிர்ர் என்று அதை ஒப்பொலி செய்வோரும் உளர். அதுவே விரைவைக் குறிப்பதாயின் விர்ர்ர் என்று ஒப்பொலி செய்தலும் உண்டு. இதுபோன்ற உண்மை ஒப்பொலிகளும் போலி ஒப்பொலிகளும் இல்லாமல் மொழி முழுமை பெறுவதும் சிறப்பதும் இல்லை.
விர் விர்ர்ர்ர்ர் > விர்+ ஐ = விரை > விரைதல்.
இந்த ஒலிக்குறிப்பிலிருந்து விரை என்ற வினைச்சொல் கிட்ட, அதனால் மகிழ்ந்தோம்.
இதுபோலவே
பிர்ர்ர் > பீர்ர்ர் > பீரிடுதல்; பீர்தங்குதல் முதலிய சொற்கள் உருக்கொண்டிருத்தலும் அறிதலாகும்.
பீர்பீராய் வெளிவந்தது என்பதும் சொல்வதுண்டு. ஒரே நீட்சியாய் வெளிப்படுதலின்றி பல நீட்சிகளாய் வெளிவருதலையே பீர்பீராய் என்பர்.
தாய்ப்பால் பீரம் எனவும் படும். பீச்சிச் சிறிது நெட்டெறிதல் உண்டாவதால் பீர் > பீரம் என்ற சொல்லமைந்தது.
இவைகளை நல்லபடி உணரவேண்டும்.
பீர் > பீர்ச்சு > பீச்சு.
பீர் + அங்கு + இ = பீரங்கி: பீச்சி இங்கிருந்து அங்கு வீசும் கருவி பீரங்கி ஆகிறது.
அங்கம் என்ற சொல்லும் இடைக்குறைச் சொல்லே. ஏனை உறுப்புகள் எல்லாம் அடங்கிய அடக்க உருவே அங்கம். அடங்கு > அடங்கம் > அங்கம் என்று டகர வல்லெழுத்து வீழ்ந்து அங்கம் ஆயிற்று. இவ்வாறு விளக்கி ஒரு படையணியில் அடங்கிய ஒரு குண்டெறி கருவி எனினும் ஏற்கத்தக்கதே ஆகும். ஆகவே இஃது இருபிறப்பிச் சொல்.
பீர்தங்கு என்ற வினைச்சொல் சீவக சிந்தாமணியிலும் வருகிறது,
பீர்தங்கிப் பொய்யா மலரிற் பிறிதாயினாளே ( சீவகசிந். 1960 )
பீர் என்ற அடிச்சொல் பல நூல்களில் வந்துள்ள சொல்லே.
பீரிட்டது என்பதும் இயல்பு வழக்குச் சொல்லே ஆகும்.
பீரிடும்படி ஆங்கு வெடியை வீசும் சுடுதுளைவியே பீரங்கி ஆகும்.