ஞாயிறு, 10 ஜூன், 2018

சேனை என்னும் சொல்.

சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதே என்பதை ஆய்ந்தறிவோம்.

சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் என்பது முன்னர்ப்  பொருளாகும்,  அல்லது பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம்,

"இந்த ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து சேனை நாட்கள் ஆகிவிட்டன."  இந்த வாக்கியத்தை வாசித்தால் சேனை என்பது பல என்று பொருள்படுதல் தெரியும்.  இது பேச்சு வழக்கில் உள்ள சொல். இன்று மறக்கப்பட்டு வருதல் அறியலாம்.

சந்தையையும் சிலர் சேனை என்பதுண்டு என்று அறிகிறோம்.  "சேனைக்குப் போய் வந்தாள்"  என்பது காண்க.

 சேனை என்பது உறவினர் நட்பினரையும் குறிக்கும்.  "  அந்தத் திருமணத்துக்கு அவர் தம் சேனையுடன் போயிருக்கிறார்"  என்பது இப்பொருளது ஆகும்.

இப்பொருளில் இது கம்பராமாயணத்திலும் வந்துள்ளது.   ( கம்ப. தைலமா.8)

பிங்கலந்தையில் இது தெரு என்று பொருள் தெரிக்கப்படுகின்றது.

சேனை என்பது படையையும் ஆயுதத்தையும் குறிக்கும்.

இருபது கவளி வெற்றிலைக்கு ஒரு சேனை என்பதுமுண்டாம்.

சேனை என்பது நண்பர்கள் என்றும் பொருள்படுதலால்  "கூடாச்சேனை"  என்பது கூடாநட்பு என்றும் பொருள்படும்.

சேனை என்ற சொல் தமிழிலக்கியத்தில் இடம்பெற்ற சொல்லே ஆகும். இதன் அடிச்சொல் சேர்தல் என்பதே.  இது பலர் என்றும் சேர்க்கப்பட்டவர்கள் என்றும் நன்  கு பொருள்தருவது ஆகும்.

சேர் >  சே+ன் + ஐ என்று அமைந்துள்ளது.  ரகர ஒற்று வீழ்ந்து சே ஆனது. பின்  -0னகர ஒற்று இடைநிலையாய் நின்று ஐகாரம் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்றது.

இதைப் பானை என்ற சொல்லுடன் ஒப்பு நோக்குக.  பா என்பது விரிவு குறிக்கும் சொல். வாய் விரிந்த வனை ஏனத்துக்குப் பானை என்று சொல்கிறோம்.  விரித்துப்போடும் ஓலைப் பின்னலுக்குப் பாய் என் கிறோம்,
படுக்கைவாட்டத்தில் உள்ளதைப் பட்டை என் கிறோம். ப> படு > பட்டை.
பலகை என்பது விரிந்து சப்பட்டையாக உள்ள மரத்தின் அறுத்த பகுதி.
அதாவது ப > பா என்ற வரிசையில் இப்படி பரந்து விரிவுடைய பல பொருள்களின் பெயர்கள் வருகின்றன.  பார்த்தல் (see ) என்ற வினை,  பொதுவாக கண்ணால் புலப்படுத்திக்கொள்வது.  நோக்குதல்   (look  ) என்பது குறுக்கமாக ஒன்றைக் கட்புலப்படுத்திக்கொள்வது ஆகும்.   பா> பார் என்பதையும் பார் என்று பொருள்படும் விரிந்த உலகையும் சிந்திக்கவும்.

பா> பானை;   சே> சேனை.  இரண்டிலும் இடைநிலை 0னகர ஒற்று ஆகும்.

சேர் என்பது ரகர ஒற்று இழத்தலை சே  >  சேமி என்பதில் அறிக.1


எனவே பலர் என்றும்  கூடுதலென்றும் சேர்க்கப்படுதல் என்றும் பொருள்படும் சேனை  என்பதன் சொற்பிறப்பு அறிந்து மகிழ்வீராக.

அடிக்குறிப்பு:

1  சேகரன் :  அடிச்சொல்:  சேர் > சே.  சேர் + கரன்  =  சேகரன்.  பொருள்:  நிலவைச் சேர்த்துவைத்திருப்பவன்.  சே என்பது சிவப்பு என்றும் பொருளாம்.  சிவந்தான் ,  சிவன்.  இருபிறப்பிச் சொல்.    சேர்  + கு + அரன் =  சேகரன் எனினுமாம். ரகர ஒற்று  வீழ்ச்சியும் கு இடைநிலையும் காண்க .

2  சேர் + நர்  = சேர்நர் >    சேர்நை>  சேனை .  This accounts for the appearance of the intermediate ந் ( ன் ) resulting in  னை .    








மோடியைக் கொல்லத் திட்டம்,

மோடியைக் கொல்லவோர் திட்டமாம் --- ஓர்
மூலை நகரத்தில் கொட்டமாம்!
ஓடியும்  ஓடி உழைக்கிறார் --- இந்தியா
ஒட்டுக்கும் பல்லோர் பிழைக்கிறார்.

பல்லோர் பிழைக்க நலம்நண்ணும் ---இந்தப்
பாரிலூ ழல்கெடப்  பலம்பண்ணும்,
நல்லோனாம் மோடியைக் கொல்வதோ?---இது
நல்லோர்தம் நெஞ்சமும் சொல்வதோ?

செய்தநன் மைகளை மாய்ப்பதா?  --- பாரில்
சீரில் இடுக்கண்கள் சேர்ப்பதா,
உய்தநற் பாரதம் தேய்வதா ---  நலம்
ஓங்கிய பின்பின்னே போவதா?


https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwj69N66hMnbAhVHVrwKHd0uCYIQqUMILjAA&url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2Fanother-rajiv-gandhi-type-incident-maoist-letter-exposes-plan-to-kill-pm-modi%2Farticleshow%2F64505905.cms&usg=AOvVaw3gUXuR_hQo4_JkxlDWg8z8 

வெள்ளி, 8 ஜூன், 2018

இல் மற்றும் அல் என்னும் சொற்கள்.

இன்று இரு சிறு சொற்களை ஆய்ந்து அவை எப்படி மாற்றமடைந்து புதிய பொருண்மை பெற்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இல் என்பது ஓர் அடிச்சொல். இதற்குப் பொருள் பலவாகும்,  இல் என்றால் வீடு என்றொரு பொருள் இருக்கின்றது.  இது அம் விகுதி பெற்று இல்லம் என்று வடிவு கொள்ளும். இல்லம் என்பதும் வழக்கில் குடியிருக்கும் வீட்டையும் குறிக்கும்.  முதியோர் இல்லம், அனாதை இல்லம் என்று சற்று வேறுபட்ட இல்லங்களையும் குறிக்கும் என்றாலும்,  அவையும் மக்கள் தங்கும் இடங்களே  ஆகும்.

இல் என்பது இவற்றினின்று வேறுபட்ட பொருளையும் குறிக்கும்.  அது என்னவென்பது உங்களுக்குத் தெரியும்.  அது இல்லை என்ற பொருள்.   ஒன்றை இல்லை என்பதானால் அப்பொருளின் பெயரைச் சொல்லித்தான் அதை இல்லை என்று சொல்லவேண்டும்.  வெறுமனே இல்லை இல்லை என்றால் எது இல்லை,  என்ன இல்லை என்ற கேள்விகள் எழுகின்றன.  ஆகவே பேய் இல்லை, பிசாசு இல்லை என்று சொன்னால் நீங்கள் சொல்வது என்ன என்பதைப் பிறர் புரிந்துகொள்ள முடிகிறது.

பிசாசு என்ற சொல்லை எப்படி உருவாக்கி உலவ விட்டனர் நம் முன்னோர் என்பதை இங்குக் காணலாம்:

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_20.html

பேய் என்ற சொல் பே பே என்றும் உளறும் அச்சக்குறிப்பு ஒலியினின்று அமைந்தது என்று தமிழறிஞர் பிறர் கூறியுள்ளனர்.  அது சரியாகவே தெரிகிறது.

இன்று இல்லை என்ற சொல் ஒரே முற்றுச்சொல்லாக வழங்குகிறது. எடுத்துக்காட்டாக:

அது இல்லை;
அவள் இல்லை;
அவன் இல்லை;
அவர்கள் இல்லை;
அவர் இல்லை;
கந்தன் இல்லை

என்று எல்லாவற்றுக்கும் பொருந்திவருகிறது.  பழந்தமிழில்  அது இலது;
அவள் இலள்; அவன் இலன்; அவர் இலர்; அவர்கள் இலர்; கந்தன் இலன் என்று பல முற்றுக்கள் வழக்கில் இருந்தன.  தமிழ் மொழியானது இப்போது மிக்க எளிமை அடைந்துள்ளது.  வேறு சில இறந்த மொழிகளில் இக்கடுமை இன்னும் தொடர்கிறது.

ஒன்று இல்லாமற் போவதானால் அது முடிவை எட்டியபின்புதான் இல்லாதது ஆகும்.  கஞ்சி இல்லை என்றால் கஞ்சி அளவில் தன் இறுதியை அடைந்து விட்டது என்று பொருள். இறுதி என்பது முடிவு.  இறு + தி = இறுதி.  இந்த இறு என்பது முடி ( முடிதல் ) என்ற பொருள் உடைய சொல்.  தன் முடிவுநிலை எய்தி இல்லாமல் போய்விட்டதைக் குறிக்கிறது.

சொல்வளர்ச்சியில் இல் என்பதிலிருந்து இறு என்ற சொல் வந்துள்ளது.

இருக்கும் ஒரு பொருள் இல்லாமலாவதென்றால் இது இற்றது;  அல்லது இறுதி அடைந்தது என்பது நாம் அறிதற்குரியதாகும்.

பாட்டி பழைய சட்டியை எடுத்துவைத்துக்கொண்டு பேசுகையில் சட்டியில் தூர் இற்றுப்போய் விட்டது என்று சொன்னால்  இறு > இற்று ( வினை எச்சம்)  என்பதை உணரவேண்டும்.  பாட்டியிடம் தமிழைப் படித்துக்கொள்ள வேண்டியது கடனே.

" இற்ற மூவசைச்சீர்"  என்று இலக்கணப்பாவில் வந்தால் " அவ்வண்ணம் முடிந்த மூவசைச்சீர்"  என்று பொருள்.

இல் என்பதிலிருந்து இறு என்ற சொல் வளர்ந்து தோன்றிற்று.

இல் > இறு.

இதில் சொல் வளர்ச்சியும் கருத்து வளர்ச்சியும்  அறிந்து மகிழலாம்,.

இறு என்பது முதனிலை திரிந்து அதாவது இங்கு நீண்டு ஈறு என்றானது.
ஈறு எனினும் இறுதியாகும்.  ஈற்றசை:  கடைசி அசை.

இல் இறு என்பன சுட்டடிச் சொற்கள். இதனை பின்னொருகால் விளக்குவாம்.
( விளக்குவோம் என்பதை விளக்குவாம் என்றும் சொல்வோம்.  ஆம் ஓம் என்பன விகுதிகள்).

விளக்குவாம் என்று எழுதினால் தெரியாதவன் எழுத்துப்பிழை என்று எண்ணக்கூடும்.

இனி,  அல் என்பதும்  இல் போன்றே வடிவுகொள்ளும் சொல்லாகும்.

அல் என்பது இல்லை என்னாது மறுப்பது ஆகும்.   அது அல்ல நான் சொன்னது என்று இன்று புலவர் சொல்லலாம்.  ஒருவாறு இதுவும் ஒத்துக்கொள்ளப்படுகிறது.  பழந்தமிழில் அது அன்று என்றுதான் சொல்லவேண்டும்.

அது அன்று; அவன் அல்லன்; அவள் அல்லள்; அவர் அல்லர்; நீ அல்லை; ஆய் அலன்; கந்தன் அல்லன்; என்றிவ்வாறு பலவடிவு கொள்ளும்.

 அறவிலை வணிகன் ஆய் அலன்;  இரவலை புரவலை
நீயும் அல்லை என்று வந்தால் எப்படி இருக்கிறது?

பழந்தமிழில்:  நீ ஓர் இரவலன் என்று சொன்னால் தப்பு ஆகிவிடும். 

நீ இரவலை என்றால்தான் சரி.  மறுப்பதாயின் நீ இரவலை அல்லை என்று
சொல்லவேண்டும்.  இந்தக் கடுமை இப்போது இளகிவிட்டது.

அது அன்று என்பது இப்போது சரி. ஆனால் இதிலும் ஒரு குழப்பபடி உள்ளது.
அது என்பதில் து என்ற அஃறிணை விகுதி வருகிறது,  அதே விகுதி அன்று என்பதிலும் மீண்டும் வருகிறது:  அல்+து = அன்று.  ஏன் இருமுறை இந்த அஃறிணை விகுதி வரவேண்டும்?   ஓர் அஃறிணைப் பொருளைப் பற்றித்தான் பேசினேன் என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன?  உலகில் உள்ள புது மொழிகளில் இத்தகைய ஏற்பாடு இல்லை.  விகுதிகளை அம்மொழிகள் முற்றிலும் அகற்றிவிட்டன அல்லது விகுதிகள் வளர்ச்சி பெறவில்லை,

எடுத்துக்காட்டாக:  நீங்கள் அறிந்த மலாய் மொழியில்  டியா டாத்தாங்க் என்பதில் டியாவிலும் விகுதி இல்லை;  டாத்தாங்கிலும் விகுதி இல்லை.
சீன மொழி பண்டைக்காலமுதலே சொற்களை நீட்டவில்லை.

அது அன்று என்பது  அது அல் என்றே இருந்திருந்தால் இந்தக் குழப்பம் இராது. ஆனால் அல் என்பது ஒரு முற்றுச்சொல்லாகத் தமிழில் வருவதில்லை. இது மொழிமரபு ஆகும்.

நம் மொழியே சிறந்தது என்று நாம் சொன்னாலும் வேறுமொழியும் வேறு காரணங்களுக்காக உயர்ந்தே நிற்கிறது.  யாவும் வாழ்க.

அது வந்தது என்பதில் வந்தது என்று ஏன் சொல்லமைகிறது.  அதில் மீண்டும் அது ஏன் வரவேண்டும்.   வந்து+அது!   இதைப் பவணந்தியார் நன்னூல் வேறுவகையாகக் காட்டும்.   த் என்பது இறந்தகால இடைநிலை என்னும்.

அது வன்னு என்ற மலையாளத்தில் மீண்டும் அது வரக் காணோம்.

சில மொழிகள் அ  வா என்று சுருக்கமாக முடித்துவிடும்.

எல்லாம் நல்லதுதான்.

அல் என்பதிலிருந்து அறு என்று சொல்லமைந்தது.  அல்> அறு.  இது இல்> இறு போன்றதே.  அல் >  அறு > அற்ற > அற்றது.  அறு என்பது அன்மையுடன் அறுத்தலையும் உணர்த்தும்.  ஒன்றை அறுக்கும் போது அது ஒன்றாக இருந்த நிலை மாறி அறுபட்டு இரண்டாகிவிடும்.  அது அப்புறம் ஒன்று அன்று; இரண்டு ஆம். ஒன்று அற்றது.

இச்சொற்களின் வடிவங்கள் பற்றிய உரையாடலை இத்துடன் நிறுத்தி நாம் மீண்டும் சந்திப்போம்.

அனைத்து மொழிகளும் வாழ்க வாழ்க.