நாம் வரலாற்றில் ஓராயிரம் ஆண்டுகட்கும் சற்று கூடுதலாகப் பயணித்தோமானால், அக்காலத்தில் தமிழரசர்கள் ஆட்சி நடாத்திக்கொண்டிருந்தனர். அன்றைய அரசுகள் பெரிதும் தமிழையே பயன்படுத்தியதால் இன்று நாம் எதிரிகொள்ளவியலாத பல
தமிழ்ச் சொற்கள் வழக்கிலிருந்தன. தமிழரசுகள் மறைய மறைய அச்சொற்களில் பல வழக்கிழந்து போயின. அவற்றை முதலில் மறந்தவர்கள் தமிழகத் தமிழர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. இவற்றில் சில சொற்கள் பிறமொழிகளிற் குடியேறின. அப்படிக் குறியேறித் தமிழில் முற்றும் அழிந்துவிட்ட சொற்களை, மொழியில் சொல்லாய்வின்மூலம் மீட்டுருவாக்கம் செய்தல் இயலக்கூடியதே ஆகும். அப்படிச் செய்யும்போது தமிழில் இப்போது காணக்கிடைக்காதமையினால் அவை தமிழ் அல்லவென்று சிலராற் கொள்ளப்படுதலும் இயல்பானதே ஆகும். இதன் காரணம் அவை இங்கு இல்லாமற் போனமைதான். எனினும் அத்தகு சொல்லின் மூலத்தை ஆய்வதன்வழி அதனை அடையாளம் கண்டுகொள்ளலாம்.
சேவகர்கள்
மேலாளர் இட்ட வேலைகளைச் செய்தவர்களே சேவகர்
கள். இச்சொல்லில் இரண்டு துண்டுச்சொற்கள் உள்ளனவாகையினால் இதன் இறுதித்துண்டு அகர் என்பதே. ஆனால் "சே" என்பது சிவப்பு என்பதே இப்போது காணக்கிடைக்கும் பொருளாகும். சிவப்பு அகர் என்று பொருள்கூறினால் பிழைபடுகிறது, சேவகன் ஒருவன் செய்யும் வேலைக்கும் சிவப்பு அகத்துக்கும் தொடர்பில்லை ஆகிறது. ஆயின், செய்தல் என்பதனடிப் பிறந்த செய்தி என்ற சொல்லும் சேதி என்று திரிவதால், தி என்ற விகுதியை நீக்க. மீதமிருப்பது சே ஆகிறது. எனவே செய்தி என்பதுதான் சேதி என்று திரிந்தது என்பதையும், செய் என்பது சொற்களில் சே என்று திரியும் என்பதையும் உணர்ந்துகொள்கிறோம். இவ் வுணர்வினை சேவகன் என்ற சொல்லுக்குள் செலுத்த, சேவகன் எனல் உண்மையில் செய்வகன் என்று அமைந்து பின் சேவகன் என்று திரிந்தபின், மூலத்தை இழந்துவிட்ட பற்றுக்கோடற்ற சொல் என்பது புரிகிறது,
இதனை:
செய் > செய்வு > செய்வகன் > சேவகன்
என்று விளக்கலாம். ~வகன் என்ற ஒட்டு, புணர்ச்சித் திரிபை உள்ளடக்கிய
ஒன்றாதலின், செய் > சே என்பதே இங்கு அறிதற்குரிய திரிபு ஆகும்.
ஆனால் செய் என்பது சை என்றும் திரியும். செய்கை > சைகை. இங்கனமே
புன்செய் எனற்பாலது புஞ்சை என்று ~சை ஆகவும் திரியும்.
சொற்களை நன் கு ஆய்ந்தாலே இது அகப்படும்,
உடைவாள் அல்லது இடைச்சுரிகை
பண்டைக் காலத்தில் சேவகர்கள் அல்லது படைவீரர்கள், உடைவாள் அணிந்துகொண்டனர். இதை இடையில் சொருகிக்கொண்டனர். சொருகு என்ற சொல்லும் சுருகு என்ற பேச்சு வழக்கில் இன்னும் உள்ளது. இடையில் சுருகிக்கொண்டமையால் இடைச்சுருகு+ஐ = இடைச்சுருகை> இடைச்சுரிகை
என்ற சொல் அமைந்தது. இதில் இடைச்சுருகை என்பது வழக்கற்றதுடன் அதன் திரிபாகிய இடைச்சுரிகை என்பதை விட்டுச்சென்றுள்ளது. ரு > ரி திரிபு பிறசொற்களிலும் காணப்படும் திரிபேயாம்.
இப்போது உடைவாள் அல்லது இடைச்சுரிகை என்பது ஒரு வரலாற்றுப் பொருளாகிவிட்டபடியால் இச்சொல்லும் வழக்கில் அருகிவிட்டது என்` க.
திருத்தம்பின்