வெள்ளி, 29 செப்டம்பர், 2017

காக்கையைத் தேடி



காக்கையைத் தேடி…….
(புதுக்கவிதை)

காக்கையே காக்கையே
காலை மணி ஐந்தேதான்;
காலையிலே என்ன இரைச்சல்
உனக்கே உற்றதென்ன கரைச்சல்?

பார்க்கிறேன் எங்குள்ளாயோ
படு இருட்டில் தெரியவில்லை!
சேர்க்கலாம் உன்வசமாய்
சீராக உண்ணக் கொஞ்சம்
ஏக்கமின்றி உண்கவென்றால்
இருக்குமிடம் மறைவிடமோ!
ஆக்கமின்றிக் கரைந்திடாமல்
அருகினில்வா இதையுண்பாய்……..

புதன், 27 செப்டம்பர், 2017

ஏளனம் என்ற சொல்லின் அமைப்பு.



இன்று ஏளனம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்து இன்புறுவோம்,
இதற்குரிய வினைச்சொல் எள்ளுதல் என்பதாகும்.

சில தொழிற்பெயர்கள் முதனிலை நீண்டு அமைபவை. அதாவது வினைச்சொல் சுடு என்றிருந்தால் சூடு என்று நீண்டு பெயர்ச்சொல் ஆகும், அப்புறம் ஒரு விகுதி பெற்றுத் தொடர்புடைய பொருளையோ அதே பொருளையோ குறிக்கும்.   தொடர்புடைய பொருளைக் குறிப்பதற்கு எடுத்துக்காட்டு:  சூடு > சூடம் அல்லது அல்லது சூடன் என்பது. சூடன் என்பது நாம் பூசையின்போது கொளுத்தும் சூடன்,  சூடுதல் என்ற வினைச்சொல் வேறு.   சுடு என்பதிலிருந்து அமைந்த சூடு (வெம்மை) என்பது வேறு.

இதுபோலவே எள்ளுதல் என்ற வினைச்சொல்லும்.

எள் என்பது வினைப்பகுதி அல்லது ஏவல்வினை.

எள் என்பது எள்ளு என்று உகரச் சாரியை பெற்றும் வழங்கும்.  எள்> எள்ளுதல்.  கொள் > கொள்ளுதல் எனல்போல.

எள்> ஏள்+அன்+அம் = ஏளனம் என்றானது.

அன் : விகுதி அல்லது சொல்லிடைநிலை.

அம் :  விகுதி.

விகுதி என்பது மிகுதி என்பதன் திரிபு. சொல் இறுதி மிகுந்து நிற்றல்.  ம- வ திரிபு.

அன் அம் என்பவை மிகுதிகள்.  மிகுதி என்பதே விகுதி என்று திரிந்தது.

திரிபுக்கு முந்திய வடிவம் காணாமற் போய்விடுவதும் உண்டு.  அது வழக்கற்றுப் போவதும் அது பயன் கண்ட நூல்கள் அழிந்துவிட்டமையும் காரணங்கள். எடுத்துக்காட்டு:  

மனிதன்

   இதன் பெண்பால் வடிவம் மனிதை. இது  வனிதை என்று திரிந்தபின் 
(    ம  - வ திரிபு )அதையே மக்கள் விரும்பிப் பயன்படுத்த, மனிதை என்ற வடிவம் ஒழிந்தது. மனுசி (மனுஷி) என்ற வடிவமும் உள்ளது.. இதைப் பின் வேறோர் இடுகையில்  காண்போம்.

எள் என்பது ஒரு சிறிய தானியவகை.  எள் என்பதன் கருத்து சிறுமை என்பது.  எள்ளுதல் -   சிறுமைப்படுத்தல்.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும்" என்பது நாயனார் வாக்கு.  எள்ளுதல் என்பதன் எதிர் எள்ளாமை. 

Some errors keep recurring. Will review.


செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சென்னை சேர்ந்த ரோகிங்க்யாக்கள் பெருமகிழ்ச்சி.



சென்னைக்கு உரோகிங்கியா வரவு.

கவிதை.


சென்னைக்கு ரோகிங்கியா வந்து  சேர்ந்தார்;

சீரான மறுவாழ்வால் உந்தப் பெற்றார்;

தொன்னைக்குள் கஞ்சிகண்ட நெஞ்சம் கொஞ்ச,

தொல்லையிலா இங்குதானே தூய வாழ்வே;

இந்நாளே போலஇனி எந்நா  ளேனும்

இனிவருமா என்றுரைகள் மலர்ந்த வாய்கள்;

மண்ணுலகில் இங்குபோல்முன் மகிழ்ந்த தில்லை!

மகிழ்தலமேல் துன்பமிலை மான்கள் துள்ளும்.



அதுதானே தமிழர்தம் விருந்தே ஓம்பல்;

அதற்கீடாய் அகிலத்தில் நாடொன் றில்லை.

----------------------------

மகிழ்தலமேல் :   மகிழ்வுக்குரிய  இடமானால் அது 
மேலானது என்பது  பொருள்.  -  மகிழ் தலம்: 
வினைத்தொகை. 
மகிழ்தலமேல் என்ற தொடரில்  மகர ஒற்று (தல(ம்) )  
தொக்கது.



(குறிப்பு:  இவர்கள் இங்கேயே வைக்கப்படுவரோ - 
தெரியவில்லை.
நல்லபடி சாப்பிட்டு நன்றாக இருக்கட்டும்.) 

இலக்கணக்குறிப்பு:


"இங்குதானே" :   தமிழாசிரியர் சிலர் “இங்குத்தானே” 
என்று வல்லெழுத்து மிக்கு வரவேண்டும் என்று 
வேண்டுவர்.  அதுவே இலக்கணம் என்றாலும் 
இவ்விடத்து இங்கனம் மிகின் ஒலி கெடும்; ;   
இங்குத்தானே என்பது நாலசைச்சீராய் வந்து 
பாட்டும்  கெடும் என்று அறிக. ஆதலின் 
“இங்குதானே” என்பதே சரியாகும். மேலும் 
பாட்டில் வேண்டும்வழி தொகுக்கலாம் 
(ஓலிகளைக் குறைக்கலாம்) என்பதே  யாப்பின் முறை.  
 அந்த இலக்கணம் உரைநடைக்கு உதவும்.  
 இங்கு பொருந்தாது.
மேலும் பேச்சு வழக்கில் “ இங்குத்தானே”  
 என்று யாரும் பேசுவதில்லை. ஆகவே அவ்விலக்கணம் 
இப்போது பொருந்தவில்லை. எனினும் “இங்குத்தானே” 
என்பதுபோலும் தொடர்கள் பயன்படும் இடங்களும் 
பாட்டில் உளவென்று அறிக.  இங்குப்போல் என்று 
ஈண்டு வராமையும் அன்னதே.