புதன், 12 ஏப்ரல், 2017

சாமி நாத அய்யரும் சமயக் காழ்ப்புணர்வும்

இப்போதெல்லாம், இந்துக் கோயில்களில் சிவனுக்கு உபயம் செய்கிறவரே
விட்ணுவுக்கும் மாலை அணிவித்து வணங்குவதைக் காண்கிறோம். இவர்
சிவ வணக்கம் செய்பவர், இவர் விட்ணு வணக்கம் செய்பவர் என்று பேதப்படுத்துவதில்லை. (பெயர்தல்> பே> பேதம்).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேதம் தலைதெறிக்க எழுந்து நின்றது. சிவனைப் பாராட்டிய வாழ்த்து நூல் தொடக்கத்திலிருந்தால், அதை
நீக்கிவிட்டு, விட்ணு பாடல் எழுதி நூலை அச்சிட்டனர். பழம்பாடலை வீசுவதால், அதிலுள்ள சொல்வளம் அறியாதவர்கள் ஆவோம்; வரலாறு தொலையும்; உண்மை அறியார் ஆவோம் என்று நினைத்தனரில்லை. புதுப்பாடலைப் பழம்பாடல் போல் முன்வைப்பது ஓர் ஏமாற்று என்பதையும் அவர்கள் உணர்ந்தனரில்லை. ஆசிரியர்களும் வேறு மதத்தாருக்குப் பாடம் ஓத மறுத்தனர்.

இப்படியேதான், சாமிநாத ஐயருக்கு, மீனாட்சி சுந்தரனார் பாடம்சொல்ல‌
மறுத்துவிட்டார். அப்புறம் வெங்கட்ராமன் என்ற அவருடைய வைணவப்
பெயரைச் சாமிநாதன் என்று மாற்றி, சிவமதத்தவரானபின், முறைப்படி
மாணவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாததனால், பல நூல்களும் கைவிடப்
பட்டன. அவை அழிந்தன.

இவை நிகழாமல் இருந்திருந்தால், நமக்கு இப்போது பல சான்றுகளும்
கிடைத்து நம் ஆய்வுகள் உயர்ந்து நிற்கும் என்பது காண்க.

சாமி நாத அய்யரும்  சமயக் காழ்ப்புணர்வும்

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மூச்சிருத்தல்

மூர்ச்சை என்ற வழக்கில் உள்ளதாகும். இப்போதெல்லாம் இதற்கு
ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு மனிதன் தன் நினைவிழந்து சாய்ந்தபின், மூச்சு இருக்கிறதா
என்று பார்ப்பார்கள்.மூச்சிருந்தால், அவன் மரணமடையவில்லை, வெறும் நினைவிழப்புத்தான் என்று  அறிந்துகொள்வர்.

மூச்சிருத்தல் என்பது மூர்ச்சித்தல் என்று மாறியமைந்தது. இதில்
நிகழ்ந்த மாற்றம்,  ருகரம் ரகர ஒற்றாகி, மூகாரத்துக்கு அடுத்து
வந்ததுதான்.  மூச்சிருத்தல் > மூருச்சித்தல் > மூர்ச்சித்தல்..
இது ஒலி இடமாற்றுத் திரிபு ஆகும். நாவொலிக்க நயமானது
காணலாம்.

இப்படித் தமிழுக்கொரு புதிய சொல் கிட்டிற்ற்று.


வித்துதல் சொல்லிலிருந்து எழுந்திருப்பினும்........வித்தகர்

வித்தகர் என்ற சொல் காண்போம்.

இது முன்பு சிறிது விளக்கம் பெற்றுள்ளது.

விதைத்தல் என்ற வினைச்சொல்லுடன், வித்துதல் என்ற வினைச்சொல்லும் தமிழிலேயே உள்ளது.

வித்துதலும் விதைத்தலே ஆகும்.

கல்வியையும் கருத்துகளையும் ஒரு பெரு மரம்போல் வளர்க்கத்தக்க விதையைத் தம்முள் வைத்திருப்பவர் ‍‍==  ஓர் ஆசிரியர் == வித்தகர்
ஆவர். பேரறிவாளர் என்பது பொருளாம்.

வேதம் என்பது வேய்தல் அடிப்படையில் எழுந்தது என்பது எம்
முடிபு ஆகும். ஆயினும் வித் (வித்துதல்) என்பதனடிப்படையிலே
எழுந்தது என்று மேலையர் கூறுவதால், வித்துதல் என்ற சொல்லிலிருந்து எழுந்திருப்பினும்   அதுவும் தமிழ் மூலமே ஆகும்.

வித்தகர் என்பது: வித்து + அகம் + அர் எனப்புணர்ந்து, வித்து+அக+ ர்
என்றாகி, சொல் அமைந்தது. அர் என்ற விகுதி, அகரம் கெட்டு ரகர‌
ஒற்று மட்டும் நின்றது. வித்து என்பதன் உகரமும் கெட்டது. எனவே
வித் + த் அ + அ +  கர் என்பதில் வித் (த்+) (அக)ர் = வித்தகர்
ஆனது. ஒழிந்த ஒலிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அகம்+அர் என்பது அகமர் என்று முடியாமல் அகர் என்றே வந்தது
காண்க. மகர ஒற்றுக் கெட்டு, அக+ வ் + அர் எனப்பொருந்தி, அகவர்
என்றும் வரவில்லை.

கல்வி, கலை ஆய இவற்றை வளர்க்கும் பெரு வித்தினை உடையவர்
என்று பொருளுரைக்கலாமே.