சனி, 25 மார்ச், 2017

முதலீட்டால் முன்மைபெற்று உயர்க


A poem on international relations....


நாடுகளே நீங்களே ஒன்றுபடுங்கள்
கோடுயரப் பேட்டைகளில் தொழில்நிறுவுங்கள்!
ஒத்துழைப்பு மிக்குறவே பாடுபடுங்கள்!
சொத்துமிகு முன்முயற்சிக்கு ஈடுகொடுங்கள்.
அணுக்கமதே  ஆல்போல் இணக்கவிரிப்பால்
சுணக்கமறச் சூழ்பயனாய்ச் சுரக்கவிடுங்கள்.
தொழில்தொடங்கு நோக்குடனே வானவூர்தி
எழில்பயணம் எல்லையின்றி மேனிலையாக!
பங்காளித் தன்மையாண்டும் பரக்கவேண்டும்;
தங்காமல் எப்பணியும் சிறக்கவேண்டும்!
குமுகங்கள் புதுமையிலே குதூகலிக்க‌
குழந்தைகளும் மிகுந்தமகிழ் வதில்சொலிக்க!
புத்தாக்கம் புதுமுனைப்புப் பரிமாற்றங்கள்
பூத்துவந்தால் நாடுபெறும் உருமாற்றங்கள்!
பண்டுவந்த உறக்கத்தைக் களைந்துவிட்டுத்
தொண்டுசெய்து தூயமனம் விளைந்துவாழ்க!
சிதலரித்த சீர்கேட்டுக் கொள்கைநீங்கி
முதலீட்டால் முன்மைபெற்று உயர்க நீரே.    


அருஞ் சொற்பொருள் :
கோடு  =  வரம்பு .  தேசத்தின் செழிப்பு வரம்பு.
குமுகம்  = சமுதாயம்.
பேட்டை - தொழில் பேட்டை 
பரக்க  -  விரிவு அடைய .
குதூகலிக்க  -  மகிழ்வில் துள்ள 
சிதல்  =  கரையான் .
முன்மை  = முன் நிற்கும் தன்மை . 

அச்சமோ யாங்கள் அடையோமே.........!

பயங்கரவாதிகட்கு அரசியல் தலைவர்கள் கூற்று.

அச்சமோ யாங்கள் அடையோமே எங்களின்
மிச்ச உறுதியும் விஞ்சியே ‍‍~~~ உச்சமுறக்
கொட்டினீர் உங்கள் கொடூரத்தை; தாங்களாய்
விட்டாலும் விட்டிலோம் யாம்.

பயங்கரவாதத்தை நீங்கள் விட்டாலும் விடாவிட்டாலும் நாங்கள்
நாடுகாக்கும் எங்கள் உறுதியை விடமாட்டோம் என்பது பொருள்.
மிச்ச உறுதி =  குண்டுகள் வெடிக்கையில், முன் எடுத்த உறுதியில்
எஞ்சி இருந்த நடவடிக்கைகளைத் தொடரும் உறுதி;  விஞ்சி = மிகுதியாகி;  கொடூரம் = கொடுமை ஊர்ந்து மிகுதியான நிலை.
கொடு+ஊர்+அம் = கொடூரம். ஊர்தல் =மெல்லவே  மிக்குவரும் நிலை.
குமுகத்தில் கொடுமைச் சிந்தனைகள் மெல்ல உருவாகி, நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெரியனவாகி இறுதியில் வெடிக்கின்றன. தாங்களாய் விட்டாலும் ‍ : செய்வதைச் செய்துவிட்டு, அகன்றுவிட்டாலும். விட்டிலோம் : விட்டு இலோம் (இல்லோம்) : விடமாட்டோம் என்பது.














ரு



தீவிரவாதம் ஒழிக (இலண்டன் தாக்குதல் )

உலகுக்கு மக்களாட்சி போதித்த ஒண்நாடு;
பலகற்கப் பண்டிதன்மார் சென்றுபயன் கண்டநாடு;

நிலைகுலையா நூறிரண்டு நின்றதே ஆண்டுகளாய்;
கலைபலவும் கண்டுகரை மேவிப்புகழ் கொண்ட‌நாடு.

மதங்களின் நல்லிணக்கம் இனங்களின் ஒற்றுமைஎன்
றிதுகாறும் காத்தபடி இலங்குகிற இசைநாடு.

இதைவிட்டு வைத்தானோ இழிதீவிர வாதியென்போன்
சதைகிழித்தே உயிர்குடிக்கும் நடபடிக்கை மேற்கொண்டான்!

இலண்டனுக்கு நேரிடர்க்கே இரங்குவதே எம்மனமும்.
திரண்டதனைக் கண்டிப்போம்; தீமைகடிந் திடுவோமே.


தீவிரவாதம் ஒழிக (இலண்டன் தாக்குதல் )