சனி, 18 மார்ச், 2017

சில் > சல் > சன் என்பவற்றின் தொடர்பு

அகர இகரத் தொடக்கத்தினவாகிய சொற்களில் சில கண்டோம். அவற்றிடைப் பொருள்நெருக்கம் உள்ளமையும் அறிந்தோம். இப்போது
சில் > சல் > சன் என்பவற்றின் தொடர்பு காண்போம்.

சில்: இதன் கருதற்குரிய பொருளாவன:

      அற்பம்; வட்டம்,  உருளை,  ஒட்டு, சிறுதுண்டு, சில.

சில் என்ற சொல் சல் என்று திரியும்:

      (சல் )  :

      சல்லுதல்:   அரித்தல், சல்லடையில் சலித்தல்.

      சல்லிவேர் :   ஆணிவேருக்கருகில்  இருக்கும் சிறுவேர்

      சல்லித்தல்: துண்டாக்குதல்.

      சல்லிசு (>சல்லிது  ஒப்பு நோக்குக: மெல்லிது>                 மெல்லிசு).எளிமையானது.

      சல்லிக்கல் = சிறுகல்.


      சல்லடை : சலித்துத் தூள் எடுக்கப்பயன்படும் கைக்கருவி.

      சல்லாபித்தல் = சல் ஆகுவித்தல் > சல்லாவித்தல் >     சல்லாபித்தல்.  ( சிறுசிறு விளையாடல்கள்; சரசம் ).

      சல்லாவு+ அம் >  சல்லாவம் > சல்லாபம்).

இனி, சல் என்பது சன் என்று திரியும்.

    சன்னம் :  சிறுமை; நுண்மை;  மென்மை;  நுண்ணியபொடி

    அதே சிறுமை, நுண்மை என்ற கருத்துகள் பொருள்மாறாமல் வந்தன.

    சன்னம் >  சன்னல்.

    உண்மையில் சுவரில் உண்டாக்கப்பட்ட சிறு காற்றுவருவதற்கான‌
துவாரத்தைக் குறித்தது.  இதன் சொல்லமைப்புப் பொருள் சிறுமை, குறுமை என்பன. கதவை நோக்க, சன்னல் சிறியதே அன்றோ.  கம்பிகள் கண்ணாடிகள் இல்லாத அல்லது கிட்டாத முன்காலத்தில்
ஓட்டைகள் பெரியனவாய் இருப்பின், திருடர் அல்லது வெளியார்
புக எளிதாகிவிடும். சிறு ஓட்டைகளே பாதுகாப்பு.

சில்  என்ற  மூலத்திலிருந்து  சன்னல்கள் வட்டமாய் இருந்தன  என்பதறிந்தோம்.

எனவே சன்னல் என்பதன் பொருளமைப்பு  அறிந்தோம்  மகிழ்ந்தோம்.

will edit.




   

     

அகர இகரச் சொற்கள் பொருள்நெருக்கம்

இன்று நாம் ஆய்ந்தறியவிருக்கும் சொற்கள் அகர  இகரச் சுட்டுச் சொற்கள். இவை ஒரு பொருளனவல்ல ஆயினும் இவற்றிடைப்  பொருள் நெருக்கம் உளவென்பதைச் சற்று விளக்குவோம்.

இடி :  அடி.

இடிப்பது வேறு; அடிப்பது வேறு. எனினும் இரண்டும் மோதுதலே. நுட்ப‌
வேறுபாட்டினவாம்.

இகலுதல் :  அகலுதல்.

இகலுதல் என்பது வேறுபடுதல். எனினும், பகையுணர்ச்சியால் அவ்வாறு வேறுபடல்.  அகலுதல், நீங்கிச் செல்லுதல், ஆனால் இதில்
பகையுணர்ச்சி இருந்தும் இல்லாமலும் இருக்கக்கூடும்.

இணைதல் : அணைதல்.

இரண்டும் ஒன்றுசேர்க்கையாகும். பெரும்பாலும் இரண்டு இணைதல் அல்லது சேர்தல். அணைதல், நீர் கரையை அணைதல்; காதலால்
ஒருவரை ஒருவர் அணைதல் அல்லது அணைத்தல் எனப்  பலவகை.

இடுதல் :  அடுதல்,

இடுதல் என்பது வைத்தல்; அடுதல் என்பது நெருப்புவைத்தல். அடுத்தல் என்பது நெருங்குதல். இவைமூன்றும் நெருங்கினாலே
செய்ய ஒண்ணுபவை.

இவற்றிலுள்ள பொருள் அண்மைநிலையைக் கருத்தில் கொண்டு
சில்,> சல் > சன் என்பவாகிய அடிச்சொற்களிலிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சொற்களை அடுத்து ஆய்வுசெய்வோம்.

தயாராகுங்கள்.


ஈட்டி (எறிதல்)

ஈட்டி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இதன் அடிச்சொல் இடு என்பது.  இது பலபொருளுடைய சொல். இதன்
பொருளாவன: அணிதல், (பிச்சை முதலியன ) ஈதல்,  எறிதல், சொரிதல், வைத்தல் என்பன.

"இட்டார் பெரியார்"  :    ஈதல் செய்தவரே பெரியோர்.
பொட்டு இட்டுக்கொண்டாள் :  இங்கு அணிதல் பொருள்.
இதைப் பெட்டியிலிட்டுப் பூட்டு:    வெறுமனே வைத்துப் பூட்டுக என்பது.

எறிதல் என்பதும் பொருளாதலின், இடு + இ = இட்டி என்றும்  ஈட்டி
என்றும் வரும். பின்னது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இகரம்
ஈகாரம் ஆனது.  கெடு > கேடு என்பதும் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  கேடு + இ = கேடி என்று போக்கிரியைக் குறித்தது.


இட்டி என்பது உலக வழக்கில் இல்லை. செய்யுளில் வந்தவிடத்துக்
காண்க.  ஈட்டி என்பதே உலகவழக்குச் சொல்.

ஈட்டுதல்  (சம்பாதித்தல் ) என்பது வேறு சொல் .