வெள்ளி, 10 மார்ச், 2017

வீழருவி ஆயிற்றே

என்னநே ரம்மையா இந்த நேரம்
என்னறையில் யானெழுதிக் கொண்டி ருந்தேன்!
என் தலைக்கு  மேலிருந்த  தண்ணீர்த் தாங்கி
என்னவென் றறியாத கார ணத்தால்
விண்மலையில் நின்றிற‌ங்கு நேர்த்தி போல‌
வீழருவி ஆயிற்றே விரைந்த  கன்றேன்
கண்ணிமைக்கும் நேரத்தில் கலைந்த நேர்ச்சி.
காலையிலே நாளைக்குச்  சரிசெய் வார்கள்.

களைப்புடனே சிங்கைவந்த எனக்கே  இங்கு
கவியொன்றும் வரவில்லை புவி என்  செய்வேன்.

The fibreglass tank has split/////


விண் மலையில் == விண் போலும் உயர்ந்த மலையில் . இது உவமைத்தொகை .

புவி  :  புவியில் .  இல் உருபு  தொக்கது.
புவி : பூத்ததாகிய  இவ்வுலகு   பூத்தல் -  தோன்றுதல். விரிதல் . வி:  விகுதி .
சாவு > சவம்   போல  பூவி  > புவி என்று சுருங்கியது .

புதன், 8 மார்ச், 2017

கொடுவா மீன். கொடுவாய் மீன்

கொடுவாய் என்பது புலியையும் குறிக்கும். பிற பொருளும் உள.

மீனைக் குறிக்குங்கால்  இச்சொல் இருவிதமாக வரும்.

கொடுவா  மீன்.
கொடுவாய் மீன்.

sea bass

ஈண்டு யாம் சுட்டிக்காட்ட விழைவது:  வாய் என்று வரும் சொல்
யகரம் நீங்கி வா  (கொடுவா) என்றும் வரும் என்பதே. வழக்கில்
கொடுவா என்பதே மீனின் பெயர் என்பர் சிற்றூர் மக்கள்.

வாய் அதிகம் பேசுவோன் வாய்ப்பட்டி எனப்படுவான்.  இச்சொல் "வாப்பட்டி" என்று பேச்சில் வரும். மலையாளத்திலும் வாய் என்பது
வா என யகர ஒற்று மறையும்.



வாக்கு என்பது வாய்மொழி தருதல் என்று பொருள்தரும்.  வா+கு. இது
வாக்கு ஆனது.  கு என்பது விகுதி.  இது வினையாக்க விகுதியாகவும்
வரும்.  மூழ்கு, அடுக்கு என்பன காண்க.

எனவே, வாக்களித்தல், வாக்குமூலம், வாக்காளர் யாவும் தமிழே.


வேற்றுமை உருபு   ஏற்குங்கால்  வாய் என்பது வா என்று  வாராது.  வாய்க்கு என்பது வரும்.  வாக்கு என்று வருதல் இல்லை. 

தொல்காப்பியம் பெயர்க்காரணம்

தொல்காப்பியம் என்ற கூட்டுச் சொல்லில் இரு சொற்கள் உள்ளன.
ஒன்று தொல் என்பது. மற்றொன்று காப்பியம் என்பது.
தொல்காப்பியம் என்பது  சிலப்பதிகாரம்  மணிமேகலை போன்ற காப்பியம் அன்று. எனவே  இந்தச் சொல்  வடமொழியிலுள்ள காப்யா  என்ற சொல்லினின்று வந்ததென்பது  தவறு ஆகும்.
இது காப்பு +இயம்  என்ற சொல்லும் விகுதியும் சேர்ந்தமைந்த சொல்லாகும். இதன்  முன் நிற்கின்ற "கா" என்பது  காத்தலென்னும் வினைச்சொல்.  பு  என்னும் விகுதி பெற்றுக் காப்பு ஆகி மீண்டும் இயம் என்னும்  விகுதி பெற்றுக் காப்பியம் ஆனது.  
இதை யாம் முன்னரே எம் இடுகைகளில் சொல்லியிருந்தோம்.  சில ஆண்டுகட்கு முன்னர்!
பிறரும் இணயக் கட்டுரைகளில் சொல்லியிருந்தனர்.
காப்யா என்ற வடசொல்லை இங்கு ஆராயவில்லை.  அது நிற்கட்டும். அதைப்பற்றியும் முன்பு எழுதியதுண்டு.  ஆங்குக் காண்க.
தொல் பழங்காலத்தில் "காப்பியக் குடி" என்றொரு குடி ( குலத்து உட்பிரிவு)   இருந்தது.  அவர்களின் தொழில், பழைய இலக்கணங்களைக் கற்று, இலக்கியங்களையும் அறிந்து, அவற்றைக் காப்பது ஆகும்.
இப்படியும் இருந்திருக்குமா என்று வியந்து கேட்போருக்கு,  நாம் வரலாற்றையும் சற்று எடுத்துக்காட்டுவோம்.  பழங்கால யூதரிடை
"ச்cரிபெச்" என்றோரு பிரிவினர் இருந்தனர் என்பதை நீங்கள் விவிலிய நூலிலிருந்து கண்டுகொள்ளலாம்.  அரபியர்களிடை "அல் காத்தீபு" என்ற குடிபெயருடையவர்களும் இருந்தனர். சிறிது வரலாறு படித்து இதனை உறுதிப்படுத்திக்கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படக்  லாரணங்கள்  இரா.
காப்பியக்குடி பற்றி  பேராசிரியர் கா . சு. பிள்ளை அவர்களும்
எழுதியுள்ளார்.
காப்பியாற்றுக் காப்பியனார் என்ற காப்பியக் குடிப் புலவரும் சங்க காலத்தில் இருந்தமை உணரவேண்டும்.
பல்காப்பியர் என்ற ஓர் இலக்கணப் புலவரும் இருந்தார். அவரின் சில நூற்பாக்கள் யாப்பருங்கலக் காரிகையில் காட்டப்பெறுகின்றன.
இது காறும் சுருங்கக் கூறியவற்றால்,தமிழரிடை காப்பியக் குடியினர் இருந்ததும் அக்குடிப் பிறந்த அறிஞரே தொல்காப்பியர் என்பதும் இனிது விளங்கும்.
-----------------------

மீள்பதிவு:  2015.

தொல்காப்பியம்  பெயர்க்காரணம்