சனி, 18 பிப்ரவரி, 2017

செய்வம் > சைவம்

சிவம் என்ற சொல் "சைவம்," என்று மாறி, சிவக் கொள்கைகளைக்
குறிக்கும். இங்ஙனம் மாறுவது, இந்தோ ஐரோப்பியத்தில் மிகுதி.
பைபிள் (பெயர்ச்சொல்) > பிப்ளிக்கல் (பெயரடை). ஆனால் சிவம், சைவம் என்ற இரண்டும் பெயர்வடிவங்கள்.

உணவு வகைகளில், "கவிச்சி" இல்லாத உணவு :  சைவ உணவு என்பர். சைவ உணவினை உண்போன், சிவத்தை வணங்குவோனாகவோ, நாராயணனை வணங்குவோனாகவோ, அம்மனை வணங்குவோனாகவோ இருக்கலாம். மேலும் சில சாதியார் இறைச்சி மீன் முதலிய உண்பதில்லை என்பதால், சிவக்கொள்கைக்கும் உணவுமுறைக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். தொடக்கத்தில் சிவத்தை வணங்கினோர், சைவ உணவு உண்டனர் என்று  கூறிச்   சமாளிக்கலாம்.

ஆனால் இப்படிக் கூறுவதினும் ,விலங்குணவு உண்ணாராய், நன்செய், புன்செய் விளை உணவுகளை உண்போரே  சைவ உணவினர்  என்பதே பொருந்துவது.

செய் > செய்வம் > சைவம். எனவே உணவுமுறை பற்றிய சைவம்
என்றசொல் வேறு. கடவுள் கொள்கை பற்றிய சைவம் என்பது வேறு
என்று கூறலாம்.

2009 வாக்கில் வெளியிடப்பட்ட இது அழிந்து மீட்டுருவாக்கம் பெற்றது.


வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சைவ உணவு

சரிதானா சொல்வதெலாம் சாமீ நீங்கள்
சண்டையில்தான் பெரும்பாலோர் சாவார் என்றீர்.
அறியீரோ மாமிசமே ஆகும் தேகத்
தரிதான காப்புணவென் றயின்றார் பல்லோர்.

மாதமாறு மோதலின்றி வீரர் மாண்டார்
மாரடைப்புக் கூரலகால் மாநி லத்தில்!
சாதல்குறைத் தாதலுக்கே காய்கள் மிக்க‌ச்
சைவஉண விகத்தினிலே சரியென் பீரே.


tmdate

அரும்பொருள்

அயின்றார் ---  உண்டார்.
மாமிசம் ---- இறைச்சி .  
மா=   விலங்கு  .  மிசைதல்  = உண்ணுதல்.   ஆக   மா+மிசை +அம்  =  மாமிசம்.
இதில் ஐகாரம் கெட்டுப்  புணர்ந்தது.    "விலங்குணவு "

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சந்தேகம், சந்தேகித்தல்

சந்தேகம், சந்தேகித்தல் முதலிய சொற்கள் நம்மிடை வழங்குவன.
இறுதி ~தேகம் என்பதில்  கவுக்குப் பதில் ஹவும் எழுதப்படுவதுண்டு.

இச்சொல்லின் தேகம் என்பது உடல் என்ற பொருளில் முன் ஈண்டு
விளக்கம்பெற்றது.

தேகம் , இதன் சொல்லமைப்புப் பொருள்: தேய்வது, திறனழிவது என்பது
 இவ்  வடிவில்  அது உடலென்றும் பொருள்படும்.

சந்தேகம் என்பதில் நம்புதலாகிய உணர்ச்சியின் தேய்வு குறிக்கப்படுகிறது.  சம் என்பது சேர்தல், கூடுதல்.  இதுவும் இங்கு
விளக்கப்பட்டுள்ளது.

எனவே  சந்தேகம் ‍  நம்பிக்கையின் தேய்வு .  .  தமிழ் மூலங்கொண்டு
புனைவுற்ற சொல்லாகும். நாட்டு மக்களிடையும் வழங்குவதால்,
இது தமிழில் தோன்றிப் பிறவிடங்கட்குத் தாவிய சொல் என்பது
தெரிகிறது. ஐயப்பாடு,  அயிர்ப்பு என்பன தமிழுக்குரிய சொற்கள். இலக்கிய வழக்கினவாகும்.