ஞாயிறு, 18 டிசம்பர், 2016

விண்செலல் துயரதே.


பேறென்று சொல்வன அனைத்தும் பெற்றுத்   தரும்பதி
னாறோடே ஆயிரம் ஈரான இவ்வாண் டிறுதியில்
ஆறோடுங் கண்ணீர் எனும்படி தலைவர் பெரியோர்
வீறாடும் தமிழகம் நீங்கி விண்செலல் துயரதே.

நிறைசுரந்து நிமிர்ந்துநின்ற

நிறைசுரந்து நிமிர்ந்துநின்ற அரசுபின்னிட=== ‍  இன்று
நிலைதளர்ந்து பலவுழந்த பாவமென்னவோ?
கறைகறந்து முகத்துவீசும் காலம்வந்ததோ === எண்ணக்
கலைவளர்ந்து மலையினுச்சி நிலையுமீளுமோ


இது வேறு நாட்டின் ஒரு மாநில அரசு ஆட்சியின்போது நடைபெற்ற‌
ஒரு நிகழ்வினைப் பற்றி வரைந்த கவி. முன் பதிவு செய்ததாக ஞாபகம்.அதைத் தேடிப்பிடிக்கவில்லை. பல அழிந்துவிட்டபடியால்
எதையும் மறுபதிவு செய்வது வேண்டற்பாலதே. ஒன்றை விடமிகள்
அழிப்பினும் இன்னோரிடத்தில் அது கிடைக்குமே.  அதனால்.

சனி, 17 டிசம்பர், 2016

ஆதங்கம் என்ற சொல்லை...

கொஞ்ச நேரம் உடம்பு வெப்பமடைந்தால், அது தங்காதது. வெப்பம் கூடுதலாகித் தொடருமானால் அது காய்ச்சல் என்கிறோம். ஜுரம் என்று சிலர் சொல்வர்.

ஒரு பாத்திரத்தில் நீரூற்றினால் அது தங்க வேண்டும்.  நீர் வடிந்துவிடுமானால் அது தங்கவில்லை. தங்கி நிற்பதையே கலம்
என்கிறோம்.

மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் தங்கித் துன்புறுத்துகின்றன. தங்கித் துன்பம் தராதது ஒரு துன்பமன்று. ஒரு முறை இருமினால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. தொடர்ந்து இருமல் வருமானால் அது தீமை. தங்கிவிட்ட துன்பம்.

நோயும் நீங்கும்வரை தங்குவதே ஆகும்.

பயம், துக்கம் எல்லாம் தங்கிச் சிலகாலம் துன்புறுத்துபவை.

இவைபோல்வன தங்குவது சில நிமையங்கள் ஆகலாம் . பல வருடங்கள்
ஆகலாம்.  கால அளவு சிறிதாகவோ நீண்டதாகவோ இருக்கலாம்.

இப்போது ஆதங்கம் என்ற சொல்லைப் பார்க்கலாம்.

தங்கி நடைபெறுவதே ஆ+தங்கம் = ஆதங்கம் ஆகும்.  ஆ= ஆகுதல்.
தங்கம் என்பது தங்கு அம் ஆகும். அம் என்பது விகுதி.

தங்கி ஆகுவது .

இதன் பொருள்:  ஆபத்து, தொல்லை, கலம், காய்ச்சல், தீமை , நோய் ,அச்சம்  துக்கம்.

இவற்றுள் எதுவும் தங்கினாலே  தொல்லை.  தங்கம் என்ற பகுதிச்சொல்  இதையே தெரிவிக்கிறது. ஆ . தங்கம்.

பொன்  எனும் தங்கம் வேறு.