சனி, 9 ஜூலை, 2016

ஆசையும் ஆசத்தியும்.



மனம் என்று ஒன்று எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். "ஹார்ட்" என்று ஒன்று உள்ளது.  ஆனால் அங்கிருந்துதான் மனவுணர்வுகளெல்லாம் வருகின்றனவா ?  ஆதாரம் எதுவுமில்லை.  எல்லாம் மூளையிலிருந்து வருகின்றன என்கின்றனர்  மருத்துவ அறிவியலார். "ஹார்ட்" என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்தும் தரும் ஒரு குழாயுறுப்பு.  ஈர்த்தல் அடிப்படையில் எழுந்த ஈரல், ஈருள் என்பனவும்  அதே அடிப்படை "ஈர்+து+ அ+ய்+ அம்" (ஈர்தயம் ? இருதயம்) என்பதும் இதைத் தெளிவிக்கும்.  அ= அது. ஈர் து = ஈர்ப்பது. அம் = விகுதி. யகரம் = உடம்படுமெய். ஈரலும் இருதயமும்  அக்கை தங்கைச் சொற்கள். ஈ > இ குறுக்கம். சாவு+ அம் = சவம் என்பதும் குறுக்கமே. சா> ச.

ஒன்றை நோக்கி மனம் அசைவது  ஆசை.  அசை > ஆசை.  முதனிலை  திரிந்த தொ.பெயர்.

ஆசத்தி:  அசை+ அத்து + இ = ஆசத்தி.  ஆசை.

இனி ஆசு + அத்து + இ  எனினுமாம்.

ஆக்கிரகம் -

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?  இது கூறினோம் .

இப்போது ஆக்கிரகம் என்ற சொல் அமைப்பினைக் கவனிப்போம்.

நாம் சொல்லுக்குப் பொருள் சொல்வதை நோக்கமாகக் கொள்ளவில்லை.
அகரமுதலி சொல்லும் பொருள் ஏற்கத் தக்கதாக இல்லாவிடின், அதையும் தூக்கி எறிந்துவிட்டு, உண்மையான பொருளைக் கண்டுகொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும். ஆக்கிரகம் என்பது எந்த மொழிக்குரிய சொல் என்பதும் நமக்குத் தேவையில்லை. அது எனது உனது என்று சொந்தம் கொண்டாடுவோனை நாம் கண்டுகொள்ள முனையமாட்டோம்.

இந்தச் சொல்லில் இறுதியில் நிற்கும் சொல் அகம் என்பது.  அகம்
என்பது உள்  என்று பொருள்படும். மனம் எனினும்  அமையும்.

அடுத்து முன் நிற்கும் துண்டுச் சொல் இரு என்பது. ஆகவே இரண்டையும் புணர்த்தினால் இரகம் என்று ஆகிறது. இரு+ அகம் = இரகம்.   இருவகம் என்று புணர்த்தினும் அமையும் ஆயினும், இந்தப் புணர்ச்சியில் வகர உடம்படு மெய் வரவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற சொற்களில் அறம் என்பதில் அறு+ அம் = அறம் என்று வகர உட்ம்படுமெய் எப்படி வரவில்லையோ, அப்படியே இங்கும் இரகம் என்பதில் வரவில்லை. அறு+ அம் = அற்றம் என்றும் வரும் ஆனால் அது இன்னொரு சொல். அங்கு இரட்டித்தது. அதை இங்கு மேற்கொண்டு குழப்ப வேண்டியதில்லை.  இரகம் என்பதில் இரட்டிக்க வழியில்லை. இவற்றை தெளிவின் பொருட்டுக் கூறினோம். இவை நிற்க.

இப்போது ஆக்கிரகம் என்பதன் முதல் துண்டுக்கு வந்துவிட்டோம். அது
ஆக்கு என்பது.

ஆக்கு + இரு + அகம். =  ஆக்கிரகம்.

இரண்டு வினைச்சொற்களை அடுத்தடுத்துப் போட்டான்;   இறுதியில்  அகம்  வைத்தான்.

ஆக்கிரகம் என்பதற்கு 1 உறுதி,    2.சினம்,    3.விடாப்பிடி,    4.  வீரம், 5  மேற்கொள்ளுதல் என்பன வா(ய்)த்தியார்கள் கூறும் பொருள். இவை எல்லாமும் மனவுணர்ச்சி வகைகள் என்பர். மனிதன் ஆக்கிக்கொள்ளும் இவ் வுணர்ச்சிகள் அகத்தில் இருப்பவை.  ஆகவே ஆக்கு இரு அகம் என்பதைக் கண்டுபிடித்து இன்புற்றீர்.

தமிழா? ...... இது தமிழில் பெரும்பாலும்  வழங்க‌வில்லை போலும்.

---------------------------------------------------------------------------------------------------------
குறிப்புகள் 
நம் ஆய்வின்படி இரு என்ற சொல் பல புனைவுகளில் பயன்பாடு கண்டுள்ளது.  இரு+அக(ம்)+சி+அம்;  இரு+ அவி (ழ்) + க் + கை;  இரு+ ஆசு + இ; இவ்வாறு பல எண்ணிக்கை உள்ளன. பழைய இடுகைகள் பார்க்க .



பராக்கிரமம்

பரத்தல் என்ற‌ சொல்லை நாம் இங்கு பார்ப்பது இது முதல்முறை அன்று. பர என்ப‌திலிருந்து பரமன் என்ற அழகான சொல் வருகிறது.

பர > பரத்தல்.
பர > பரமன் (பர+அம் = பரம்; பரம்+அன் > பரமன்.)
பரம் > பரம்பொருள் 


பரம் என்றாலே எங்கும் பரந்தது என்று பொருள். இறைவன் எங்கும் இருப்பவன் என்று சொல்லப்படுவதால், பரத்தல் என்ற அடியிலிருந்து அவனுக்குப் பெயரமைத்தது அறிவுடைமை ஆகும்.

"பரந்த" நீர்ப்பரப்பு எனப்படும் கடலும் பரவை எனப்படும். பறவை வேறு.

பர என்பதன் தொடர்பில் இன்னொரு சொல்லைப் பார்ப்போம்.

அது பராக்கிரமம் என்ற சொல்.

ஒரு மனிதனின் வலிமை  எங்கும் விரிந்து யாவராலும் உணரப்படுமாயின் அது பராக்கிரமம் ஆகும். இதை:

பர+ ஆக்கு+ உரம் + அம் என்று பிரிக்கவேண்டும்.

உரம் என்பது வலிமை. அது எங்கும் விரிய உணரப்படுதல் பர என்ற‌
அடியாலும் ஆக்கு என்ற வினையாலும் கொணரப்படுகிறது. அம் என்பது சொல்லாக்க விகுதி.

பராக்கு உரமம் என்ற சொல்லை அமைத்தபின், அதில் ஒரு சிறிய மாற்றம் செய்யவேண்டும். அதுதான், பராக்கு+ உரமம் = பராக்குரமம்
என்பதை பராக்கிரமம் என்று "எளிதாக்குவது". இது உரம் என்ற சொல் உள்ளிருப்பதை மறைத்துப்  பொருளை ஒருவழிச் செல்லச் செய்கிறது.
பராக்கிரமம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோன், உரம் என்ற சொல்லை நினைவு கூர வேண்டியதில்லை. நினைவு, பொருட் சிதறாமை ஆயவற்றை இது உறுதிப்படுத்துகிறது. இது ஒரு மூல மறை திறமை ஆகும்.

இது நாளடைவில் திரிந்ததா அல்லது புனைவுபெற்றதா என்பது கால இடைவெளியால்  திட்டவட்டமாகச் சொல்லற்கில்லை. எனினும் உகரத்திற்கு இகரம் போலியாக அல்லது மறுதலையாக (vice versa) வருதலுண்டு. எடுத்துக்காட்டுகள்  பழைய இடுகைகளில் காண்க. எளிய காட்டாக,  இதழ் <> உதழ் என்ப  காண்க.

எனவே இந்தச் சொல்லை நோக்குந்தோறும் அதன் தமிழ் மூலங்கள் உங்கள் சிந்தையில் வந்து தெளியும் என்பதை  இங்குக்   கண்டின்புறுவீர்.

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?


குறிப்பு:  பராக்குரமம்  என்பதை  பராக்ரம என்கையில்  இந்தத் தொல்லை இல்லை. இதுவே பிற மொழியிற் கையாளப் படுவது.  குகரம் களைதல் .