ஞாயிறு, 13 மார்ச், 2016

உடல் தணுப்பினால்....சிலேத்துமம்

சிலேத்துமம் என்ற சொல்லை ஆராய்வோம்.

இதன் அழகை நன்கு சுவைத்தபின் சில ஆண்டுகட்குமுன் நான் ஓர் ஆய்வு எழுதியிருந்தேன்,  அந்த வலைப்பூ மூடப்பட்டுவிட்டது. அதில் எழுதியவை அழிவுற்றனவாய்  என்னிடம் இருந்த பதிவுகளும் மீட்டெடுக்க முடியா நிலையில் உள.  அவற்றை மீட்க மிகப் பழைய சவள்வட்டு  ஓடிகள் (Floppy Drive)  தேவைப்படுகின்றன.

இனிச் சுருக்கமாகச் சொல்லைப் பார்க்கலாம்.

சளி  >   ஸ்லே.

தும்மல் .  தும்மம்.   >துமம்


ஆக, சளியும் தும்மலும்  வருநிலைதாம்   மொத்தத்தில்  சிலேத்துமம் ஆகும்

மருத்துவ நூல்களில் உடல் தணுப்பினால் வரும் நோய்கள் கூறப்படுகின்றன என்ப.  சிலேத்துமம் என்பது இதனைக் குறிப்பது.

இச்சொல் மலாய் மொழியில் ஸெலஸெம  என்று வழங்குகிறது. சளியைக் குறிக்கும்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய  மூன்று.    (திருக்குறள் ).
  

தத்துவம் என்ற சொல்லை............

இன்று தத்துவம் என்ற சொல்லை அலசுவோம்.

இது தத் + துவம் என்று பிரித்தற்குரியது போல் தோன்றுகிறது. என்றாலும் உண்மை அதுவன்று.

இதில் தத் என்பது தன் என்பதன்  (புணர்ச்சித்)  திரிபு.

தன் என்பது கடைக்குறைந்தால் த என்று  னகர ஒற்று இழந்தியலும்.

ஆகவே த = தன் என்றுணரற்பாற்று.

அத்து என்பது சாரியை. இந்தச் சாரியை, தன் தலையை இழக்க து என்று மட்டும் மிஞ்சி நிற்கும். அன்றி அஃறிணை  ஒன்றன்பால் விகுதியும் இதுவாகும்.  அது இது என்பன வந்த சொற்களை முன்பு
விளக்கியிருந்தோம்.  அத்து என்பது உண்மையில் அது என்பதில் து
இரட்டித்த நிலையே.  அது > அத்து.   சாரியையாய் உருவெடுத்த அத்து அது என்பதனின்று தோன்றியதே.

இறுதி நிலை  ‍அம் என்பது.  இஃது விகுதி.

த + து + அம் = தத்துவம் ஆயிற்று.

தத்துவமாவது பிற சார்பின்றித் தானே நின்றியலும் ஒரு கொள்கை,வரைவு, உள்ளீடு, தன்மை, பொருளின் தன்மை


தன் என்ற சொல்லடிப் பிறந்ததால்,  இது எளிதின் உண‌ரற்பாலதே.

சி- போதத்தின் 7ம் பாடலைப் பொருளுணர்.......

இனி சிவ ஞான போதத்தின் 7ம்  பாடலைப்  பொருளுணர்ந்து கொள்வோம். 



யாவையும் சூன்யம் சத்தெதிர் ஆகலின்
சத்தே அறியா தசத்தில தறியா
திருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா.


சத்து எதிர் ‍: சிவத்தின் முன்னிலையில் (சன்னிதானத்தில்)

யாவையும் சூன்யம் : எல்லாமும் ஒன்றுமின்மையே.

சத்தே அறியாது : ஆகவே சிவம் எதையும் அறியாது.
அதாவது, சிவம் அறிந்துகொள்வதற்கு சிவத்தின் முன்னிலையில் எதுவுமே இல்லை.( சூன்யமான நிலை)

நாம் அறியவேண்டியது :   சிவம் உலகைப் படைக்குமுன் ஒன்றுமில்லை ஆதலால் சிவம்   அறிதற்குப்  பொருள்   எதுவும் இல்லை.

அசத்து அறியாது: சிவத்தின் வேறான இவ்வுலகமும் சடமாதலின்
சிவத்தால் படைக்கப்படினும் சிவத்தை அறித   லாகாது;

இலது: இவ்வுலகிற்கு அறிவு என்பது இல்லாததனால்.

உலகில் படைக்கப்பட்டவை சடம்; சிவத்தை  அறியாது;
ஆன்மாவின் நீங்கிய மனித உடலும் சடமே: அதுவும் சிவத்தை அறிய முடியாது.
மாயையும் சடமே: அதுவும் சிவத்தை அறியாது.
சடமென்பது அறிதிறம் அற்ற ஒன்று என்பதாகும்.

இரண்டலா ஆன்மா: சிவமும் உலகமும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவதாகிய ஆன்மாவானது;

இரு திறன் அறிவு உளது : சிவமும் உலகமும் ஆகிய திறத்தன இரண்டையும் அறியும் அறிவாற்ற‌ல் உள்ளதாகும்.

ஆண் பெண் என்னும் பாலியல் வேறுபாடு மனித உடலுக்கும் விலங்குகட்கும் வேறு உயிரினங்கள் சிலவற்றுக்குமே ஆதலின்,
சிவம் என்பதே இங்கு ஏற்ற சொல்வடிவம் என்க. சிவன் சிவை
என்பன மொழிமரபு காரணமாக புழங்கும் வடிவங்கள். அல்லா, God -the usual pronoun being He with a capital H, என்பன போலும் பிறமொழிச் சொற்களும் அவ்வம் மொழிமரபுகளால் அறியப்படுவன என்பதுணர்க.

சிவத்தை ஆணாக  (சிவனாக) வழிபடினும் பெண்ணாக  ( பார்வதி ,துர்க்கை . சிவை ​ ....  இன்ன பிற ​ ) வழிபடினும் ஒன்றுதான். காரணம் சிவம் ஆணுமில்லை, பெண்ணுமில்லை.  உயிரினங்களுள்  இனப்பெருக்கத்துக்காக ஏற்பட்டவை இப் பாகுபாடுகள். இறைமைக்கு இனப்பெருக்கமில்லை. இறை தனித்திருந்து இலங்கும் தவமணி.   இங்கு தவமாவது இயல்பில் தீமை இலாமை.  சிவஞான  போதம்  சிவத்துக்கு  ஆண்பால் விகுதியோ  பெண்பால் விகுதியோ கொடுத்துப் பாடவில்லை.  "ஞானம்"    என்று  வரும்போது இதில் கவனமாக  இருந்துள்ளனர் பண்டை  ஞானாசிரியன்மார் 

பொருள் அறிக  ; இன்புறுக .

will edit later.