சனி, 12 மார்ச், 2016

சி- போதத்தின் ஏழாம் சூத்திரம்

தன்னிகரற்றுத் தானேயாய் நிலைத்தியங்கும் சிவமானது,  எதையும் நோக்கிச் செல்லாது. அது என்றும் இருந்தபடி இருப்பது.

உலகம் என்பது அச்சிவத்தினால் படைக்கப்பட்டது.  ஆனால் சடம். அதற்கு அறிவு ஏதும் இல்லை. அதுவும் எதையும் நோக்கிச் செல்வதற்குரியதன்று. அதுவும் இறைவனால் அழிவுறுங் காலம்வரை  இருப்பதுதான்.

மூன்றாவதாக உள்ளது மற்றொன்று.  அதுவே ஆன்மா. அதற்கு அறிவு உள்ளது. உலகிற்கு ‍ அதாவது உலகமெனும் சடத்துக்கு அறிவு இல்லை. ஆகவே ஆன்மா அறிவுடைமையால் சிவத்தை நோக்கிச் செல்லும் தகுதி படைத்தது. இருந்தவாறிருப்பதில்லை. மாறிச் சிவத்தை நோக்கிச் செல்வதாகும். ஆன்மா அன்றி வேறு படைப்பு எதற்கும்  அத் தகைமை இல்லை என்பது உணர்க.

ஆன்மா தவிர்த்த அனைத்துப் படைப்பும் உலகம் என்பதில் அடக்கிக் கூறப்பட்டது.

யாவையும் சூன்யம் சத்தெதிர் ஆகலின் 
சத்தே அறியா   தசத்தில  தறியா  
திருதிறன் அறிவுள  திரண்டலா ஆத்மா.


இது சிவஞான போதத்தின் ஏழாம் சூத்திரம் ஆகும். மேல் முன்னுரைத்தது பொதிந்த இந்தப் பாடலை அடுத்துப் பொருளுணர்ந்து கொள்வோம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

"சிவகவி' யில் சமய விளக்கம்

எம். கே  தியாகராஜ பாகவதர் உச்ச நிலை நட்சத்திரமாக விளங்கிய காலத்தில் ஒரு   நாள் அவர் கல்விக் கடலாகத் திகழ்ந்த  அருள்மொழி அரசர் திருமுருக கிருபானந்த வாரியாரை மிக்கப் பணிவுடனும் அடக்கத்துடனும் அணுகினாராம்.   எப்படி ?    வாரியார் அடிகள் சொற்பொழிவு நடாத்திக்கொண்டிருந்த  மேடைக்கே சென்று அவர் காலடிகளை வணங்கினாராம்.    இப்படி அவரை அணுகியதன் பயனாக  பாகவதருக்கு  ஒரு கதை  கிடைத்தது.  அந்தக் கதையே பிற்காலத்தில் " சிவகவி " என்ற திரைச் சித்திரமாக வெளிவந்து  அதில் நடித்த யாவரின் புகழையும் உயர்த்தியது.
தம் பெயரைப் படத்தில் காட்டவேண்டாம் ,  கதையை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று வாரியார் அடிகள் பாகவதரைப் பணித்தாராம்.

பெயர் சிவகவி என்றிருந்தாலும் உண்மையில்  அது முருகனைப் பாடமாட்டேன் சிவம் ஒன்றையே பாடுவேன்  என்று அடம் பிடித்த பொய்யா மொழிப் புலவரின் கதை .

இதை மக்களிடம் கொண்டு செல்ல   பாபநாசம் சிவன் எழுதிய

வள்ளலைப் பாடும் வாயால்   ---- அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ -----
வெள்ளிமலை வள்ளலைப் பாடும் வாயால்  -----   அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ ------    என் தன்
சாமியைப் பாடும் வாயால்  -------  தகப்பன்
சாமியைப் பாடுவேனோ ?

அப்பனைப் பாடும் வாயால்-------ஆண்டிச்
சுப்பனைப் பாடுவேனோ? ------ என் தன்  அம்மை
அப்பனைப் பாடும் வாயால்  ------  பழனியாண்டிச்
சுப்பனைப் பாடுவேனோ?

வள்ளியின் கண்வலை வீழ் சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ ?


அம்பிகை பாகன் எனும் -----  அகண்ட
சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் துணையால் -----  மணம்பெறும்
தம்பியைப் பாடுவேனோ?

என்பது படத்தில் காட்சிக்கேற்ற  சிறந்த பாடலாய் அமைந்துவிட்டது .

 புலவரின் தருக்கை அடக்க முருகனே  வேடனாக வந்து புலவரின் பாடலில் பொருட்குற்றம் கண்டு பொன் பற்றினின்றும் அவரை விடுத்துத்   தன்  அருள் வடிவு தெளியக்காட்டி  ஆட்கொள்ளுகின்றான்.
அப்போது பாகவதர் பாடும் :  சொப்பன வாழ்வில் மகிழ்ந்து  சுப்ரமணிய சுவாமி  உனைமறந்தார்  என்ற பாட்டு மிகவும் புகழ்ப்பெற்ற இனிய பாடல்.

சிவமும் யாமே  முருகனும் யாமே  பிற கடவுளர்களும் யாமே,  யாம் ஒருவரே ---- என்ற   இறை ஒருமையைப்  படம் விளக்கிச்  செல்கிறது.

இந்து மதத்தின் கடவுட் கொள்கை  அதுவேயாம் .இதை இராமகிருஷ்ணரும்  விவேகாநந்தரும் நன்கு நிலைநிறுத்தி யுள்ளனர்.   நம் சைவத் திருமுறைகளும்  பறைசாற்றுவதும் வேறன்று.

முருகு என்றாலே அழகு என்று பொருள். இயற்கை அனைத்தும் அழகன்றிப் பிறிதில்லை .முருகன் இவ்வியற்கை அழகின் அம்சம் அல்லது அமைப்பு என்பதை உணரவேண்டும் .சிவஞான போதம் இவ்வுலகை  -  இயற்கையை  இறைவனின் சான்றாக எடுத்துரைக்கிறது,

The lyrics amount to excellent poetry.  After all William Shakespeare was also a stage poet.




   

வியாழன், 10 மார்ச், 2016

ஏவும் அணியில் எலியும் இணைந்திடில்....

எப்போதும் வீட்டில் இலாததினால் ---- பின்னால்
எலிகள்  புகுந்து வி-  ளையாடியே  .
ஒப்பாத நாசங்கள் செய்தகதை ---- நான்
உரைத்திடில் கேட்டே இரங்குவிரோ!

அடுப்பினில்  வாயுக் குழாய்தனையே---- கடித்தே
அங்குமிங்  கும்சிதறச் செய்ததனால் 
கடுப்பினில் கம்பால் அடித்துத் துரத்துதல்
கால  மனைத்திலும்  பின்வருமோ?

மரத்துக் கதவினில் கை நுழைக்கும் ---- படி
மலைத்துக்  குலைந்திட ஓர் துளையே
அடைத்ததைச் சீர் செய ஐம்பது வெள்ளிகள்
ஆங்கவற்    றோடிணை  சேர்துயரே!

பாவம் பணிப்பெண் உழைப்பு மிகுந்தது
பண்ணினள் தூய்மை  அவட்குநன்றி
ஏவும்  அணியில் எலியும் இணைந்திடில்
என்னசெய்  வாள்  இதை   எங்க்குசொல்வோம் ?