வியாழன், 18 பிப்ரவரி, 2016

விருத்தி.

விருத்தி என்பது உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அவ்வப்போது வழங்கும் சொல். " மரம் நட்டு உரமெல்லாம் போட்டுப் பார்த்தாகிவிட்டது, ஒன்றும் விருத்தி ஆகவில்லை" என்று பேசுவது கேட்டிருக்கலாம். "குடும்பம் ஒன்றும் விருத்திக்கு வரவில்லை" என்றும் சொல்வர். இப்போது ஆங்கிலம் கலந்து பேசும் பழக்கம் பரந்து காணப்படுவதால், விருத்தி என்ற சொல்வழக்கு சற்று மறைந்துவருகிறது என்று தெரிகிறது.

விருத்தியுரை என்ற வழக்கும் காணலாம்.  விரித்து எழுதப்பட்ட உரை விருத்தியுரை.  அகலவுரை என்ற பயன்பாடும் உளது. An elaborate commentary or gloss.

விரி >  விரு >  விருத்தி.

விரி > விரித்தி >  விருத்தி.

இரண்டும் ஒன்றே.  இதன் அடிப்படைக் கருத்து விரிவு என்பது.

விருத்தி என்பது விரித்தி என்ற பேச்சு வழக்கிலிருந்து வந்தது ஆகும்.  நாளடைவில் அது பல்வேறு  கருத்துவளர்ச்சிகளை உள்ளடக்கி விரிப்புற்றது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அந்நியன் ஒரு மறுபார்வை

அந்நியன்  என்ற  சொல்லுக்கு முன் விளக்கம் எழுதியுள்ளோம்.  அதை இங்கு சுருங்கச் சொல்வதானால்      அ  என்பது தமிழில் ஒரு சுட்டு,   அங்கு என்று படர்க்கையை  அது சுட்டும்,   ஆனால்  அ  என்பது  அன்மை என்றும் பொருள் படுவது,   அன்மையாவது  அல்லாமை;  அல்லாதது.  அல்லாதன;  அல்லாதவன்  என விரியும் . இதுவன்று   அவை அல்ல   என வரும்.  அல் திணை >  அஃறிணை ;  அல்வழி '  அன்மொழி என்பவை பழஞ்சொற்கள்

அல்  தன்  லகர ஒற்றை இழந்து  அ என்றும் நிற்கும்.   மங்கலம் >  அமங்கலம் போல.  அதாவது  மங்கலம் அல்லாதது.

அல்  + நீ  + அன் =  அன்னியன்    (  நீ  அல்லாதவன் ;   அடுத்தவன்;  பிறன் )
இங்கு  நீ  என்பது  நி  என்று   குறுகியது.  நீ  சிலவிடத்து   நி  என்று  குறுகும்.   நின்  என்ற சொல்லில்  அது குறுகியது காண்க.   நின்  புகழ்  =  உன் புகழ்.

அல்  என்பது   அ  என்றும் குறையும்  என்பதால்     அ + நீ + அன் =  அந்நியன்
என்றும்   ஆகும்.  நகரம் இரட்டித்தது. மற்றும் முன் கூறியதுபோல   நீ  குறிலாகிற்று.

நீ  என்பது நீக்கப் பொருளது என்பதை முன் இடுகையில் விளக்கியுள்ளேன்,
http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_13.html
அதையும் மறுபார்வை செய்துகொள்ளுங்கள்.   நிவாரணம் என்ற சொல்லில்
நீ  குறுகியுள்ளது.   நீ +  வரு+   அணம்  >  நிவாரணம் .    நீங்கி வருதல்.   நீக்க நிலை  அண்மி வருதல் என்று விரிக்கலாம் எனினும்   ஒன்றே.     இந்தச்     சொல் எங்கும் பரவிப் புகழ் பெற்ற  சொல்.  நீ . என்பதே நீங்குதல்

அடுத்து  அயல் என்பது காண்போம்.

குறிப்பு:
பழனி  என்பதில்  பழம் நீ  என்பது  நி என்று  குறுகிற்று என்ப


செடியிற் பூத்ததொரு சிறுபூ‍‍‍‍

ஒரு வலைத்தளத்தைப்  புகழ்ந்து எழுதியது,

செடியிற்  பூத்ததொரு சிறுபூ‍‍‍‍----  அதன்
செழுமைஎன் சொல்வது
வளமையில்  வெல்வது
அடியில் இருந்து நுனி வரையில் ‍‍--- பார்க்கின்
அதுவொரு தேனடை
அழகாம்  தமிழ் நடை,

பழுத்து  விளைந்தபல  கருத்து ----  அது
பயன்மிகத் தந்தது
பளிங்கென்  றொளிர்ந்தது
தழுக்கும் தமிழுணர்வும் உலகில்  ---- பெறும்
தகுந்த  ஊக்கமினி
தகைத்தல் நீக்கும்கனி  .



சொற்குப்  பொருள் காட்டும்   ஆடி ---- தமிழ்
சொந்தம்  எனவு ணர்த்தும்
சோர்வில்  நிலைஇ  ணர்த்தும் ;
தெற்கில்  இலகு தமிழ்  உலகை ---  எந்தத்
திக்கும்  புகழ்ந்திடவே
தக்க   நிகழ்ந்திடவே.,                                            (செடியிற்)

தகைத்தல்  =  இளைத்தல், களைத்தல் .
தழுக்கும் -  செழிக்கும்.
சொற்கு  -  சொல்லுக்கு 
ஆடி  -  கண்ணாடி 
சோர்வில்  -  சோர்வு இலாத 
இணர்த்தும் -  நெருங்கச்  செய்யும் 
இலகு  - விளங்கும் 
தக்க   -  தக்கவை .