இந்தச் சொல் பேச்சு வழக்கில் மக்கள் புனைந்த சொல். சொல்லை அணுகும் போதே இது புலவர் புனைவன்று எனத் தெரிகின்றது.
பச்சை + இடி என்ற இரு சொற்களால் ஆனது இது. சை என்பதில் உள்ள ஐகாரம் குறுகி. (கெட்டு ) ச் என நிற்கவே, பச்(ச்+ஐ) > பச்ச் என்றாகி, இடி சேர்ந்து பச்(ச்+இ)டி என்று இணைந்து, பச்சிடி ஆனது. பிறகு வாயொலிக்க வசதியாக, பச்சிடி இறுதியில் பச்சடி ஆயிற்று. ஐகாரத்தின் இடத்தை மாத்திரை (ஒலியளவு ) குறைந்த இகரம் மேற்கொண்டது.
புலவர் நோக்கில், பச்சை + இடி = பச்சையிடி > பச்சயிடி > பச்சடி எனவாகி, ஐகாரம் குறுக. யகர உடம்படு மெய ஏறிய இகரம் ஒழிந்தது என்று கூறுதல் ஒரு கலையே ஆகும்.
சொல்லாக்கதில் பயன்பட்ட சொல், அடி என்பதினும் இடி என்பதே உண்மை நிலையைக் காட்டுவது, ஏனென்றால், இது முன்பு இடித்துச் செய்யப்பட்டவற்றையே குறித்துள்ளது.கெட்டுவிடாமல் இருப்பதற்காகப் பின் சூடு காட்டப்பெற்று, நாளடைவில் வேகவைத்துச் செய்யப்பெறுவ தாயிற்று.
தமிழில் ஐகாரம் குறுகுதல் தொல்காப்பியர் முதலான நம் இலக்கணப் பெரியோர் கண்டு ஓதிய ஒன்றே ஆம்.