செவ்வாய், 7 ஜனவரி, 2014

புதல்வர்

புதல்வர் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மக்கள் என்பது. புதல்வர் தமிழன்று என்பர் தமிழாசான்மார்.

புதல்வர் என்பதன் அடிச்சொல் புது என்பதே. முன் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்போரை நோக்க, புதுவரவுகளாகிய புதல்வர் புதியவர்களே ஆவர். இச்சொல்லை இப்படிப் பிரிக்கலாம்.

புது +  அல் + வ்+ அர்  =  புதல்வர்

அல் என்பது பல சொற்களில் விகுதியாய்ப் பயன்படுவதே. மத்தியக் கிழக்கு மொழிகளில் இது சொல்லின் முன் நிற்கும்.  உதாரணம்:   அல் கைதா.  அல் காதிப்.  அல் கிதாப்.  (al is like  "the" in English)

தமிழில்  பெரும்பாலும் தொழிற்பெயர்  விகுதியாய் வரும்.  காட்டாக: காணல், ஆகல்.

புதல்வர்  என்பதற்கு  நேராக,  தாய் தந்தையரைக் குறிக்கப்  "பழல்வர்"  என்ற சொல் அமையவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : -  அல் சொல்லீ்று  ஆங்கிலத்திலும் உள்ளது:  committal, acquittal. நம் விகுதிகள்  அல்லது  சொல்லீறுகள் பல மொழிகளில் புகுந்துள்ளன.  

செவ்வாய், 24 டிசம்பர், 2013

நிர்ணயம்

இன்று நிர்ணயம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இது தமிழன்று என்று வகைப்படுத்தப்படும் சொல்.

 இதன் தொடக்கமாகிய "நிர்" என்பது "நிறு" என்பதன் திரிபு. நிறு என்பதோ நிறுவு என்பதன் அடிச்சொல்.

ணய என்பது "நயம்" என்பதில் வேறன்று.

இதைப்   பின்வருமாறு விளக்கலாம்.

நிறு > நிறுவு > நிறுவுதல்.

நிறு > நிர். > நிர் நயம் > நிர்ணயம்.

எதையும் நிர்ணயம் செய்வதாவது,  அதை நயமாக நிறுவுதலே ஆகும்.

புதன், 11 டிசம்பர், 2013

Nelson Mandela

இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்

இன்னொரு காந்தியென‌
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்ம‌ரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?


நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற‌
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று  நாட்டுவரோ?

மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க‌
நிறைந்துயரந்த தமிழ்ப் பாவால்  
நின்றுபணிந்தேத்திடுவோம்.