செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பெண்ணுரிமை




காமுகர் தம்மையே தூக்கிலிட்டால் --- அவர்
காலடி போற்றிப்பின் செல்பவரும்
தோமுறு பாதை  தவிர்த்திடுவார்  --- அதன்
தொல்லை விலங்கை அவிழ்தெறிவார்.

என்றிங் கறிந்தோர் செயல்படினும் --- சிலர்
இயலா ததுவென் றயர்வுறுவார்!
ஒன்றும் செயாமல் இருந்துவிட்டால்--- பெண்டிர்
உலவத் தடையாய்  அமைந்துவிடும்.

குற்றச் செயல்கள் எதுவுமில்லா---- ஒரு
குதூகல ஞாலமோ எங்குமில்லை!
பெற்று வளர்க்கும் குழந்தைகளில்--- சிலர்
பின்னர் நெறியே திறம்பிடுவர்.


அழுகும் பழத்தை அகற்றுவது --- உள்ள
அழகிய நற்பழம் காத்திடவே.
முழுகும் படகில்  பயணித்திடல் --- குற்றம்
இழைப்பவர் தம்மோ டிசைந்திருத்தல்.



புனித மகளிர் கெடுத்தார்க்கு வேண்டாம்
மனித உரிமைக் கொடை.



புனித மகண்மை பொடித்தார்க்கு வேண்டாம்
மனித உரிமைக் குடை.



Notes:

முழுகும் = sinking. 
மூழ்குதல் = முழுகுதல்.. the latter word also means bathing. 
மூழ்குதல் used in written language to denote sinking.

தோமுறு - தோம் உறு - குற்றம் உள்ள.

திறம்பிடுவர் : tiRampu-tal 1. to change; to be over-turned; to be subverted; 2. to sprain; to swerve from, deviate from

பொடித்தல் -  spoil.

மகண்மை =  பெண்மை



வியாழன், 29 ஆகஸ்ட், 2013

Even if successful, troubles will follow

பீழை தரும்

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.


கடிந்த : இக்காலத்தில் இதைக் "கடிந்தவை" என்றே எழுதுவர். கடிந்தவைகள் என்று இரட்டைப் பன்மையாக எழுதுவது விலக்கத்தக்கது.

கடிந்து : விலக்கி.

ஒரார் : ஒருவார் என்பது இப்படிச் சுருங்கி நின்றது. (தாமும்) விலக்கமாட்டார். ஒருவுதல் - விலக்குதல். தம் நடத்தையிலிருந்து அகற்றுதல் என்பதாம்.

ஒருவு என்ற வினைச்சொல்லினின்று "வு" கெட்டது. அதாவது "வு" களையப்படவே, ஒரு என்றாகி, பின் ஆர் என்பது வந்து ஒட்ட, ஒரு+ஆர் = ஒரார் எனப்புணர்ந்த எதிர்மறை வடிவம்.

முடிந்தாலும் : நடைபெற்றாலும். நடந்தேறினாலும்.

பீழை - பீடை. துன்பம். டகரமும் ழகரமும் ஒன்றுக்கொன்று நிற்கவல்ல எழுத்துக்கள்.



சான்றோர் "செய்யாதே" என்று வரையறுத்து விலக்கியவற்றை நாமும் செய்யமாட்டோம் என்று கண்டிப்புடன் விலக்கிவிட வேண்டும், அப்படிப் பின்பற்றி ஒழுகாமல், அவற்றைச் செய்பவர்க்கு, அவர் காரியம் வெற்றியாய் முடிந்துவிட்டாலும், பின் ஒரு நாள்,  (புதைத்துவைத்த பூதம் கிளம்பியது போல ) துன்பங்கள் ஏற்பட்டு  சொல்லவியலாத கட்ட நட்டங்களைத் தந்துவிடும். 

வினைத் திட்பம்

வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய வெல்லாம் பிற.


ஒரு காரியத்தை முடிப்பதற்குரிய உறுதி என்பது மன உறுதியே ஆகும், மற்றவற்றைக் காரியம் முடிப்பதற்குரிய உறுதி என்று சொல்ல வியலாது.