நாலடியார் அல்லது நாலடிநானூறு என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்.
மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
கைத்துண்டாம் போதே கரவா தறஞ்செய்க
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
இந்தப் பாடல் என்ன சொல்கிற தென்பது.................
மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
யாமிளையம் - நான் இன்னும் இளைய வயதினன் தானே!
மற்றறிவாம் நல்வினை - (இப்போதே எனக்கு ஏன் இந்த நல்வினை (தீவினை) பற்றிய ஆராய்ச்சி! நேரம் வரும்போது அதுபற்றிக் கவனிப்பேன்! தெரிந்துகொள்வேன்.
என்னாது - என்றெல்லாம் சொல்லிக்கொண்டிராமல்.....
இதுதான் முதல்வரியின் பொருள். மற்ற வரிகள் புரிந்திருக்கும்....
மேற்கண்ட நாலடிப் பாட்டில் அடுத்த வரிக்கு என்ன பொருள் என்று நினைக்கிறீர்கள்?
கைத்துண்டாம் போதே கரவா தறஞ்செய்க
அதாவது கை துண்டானபோதே உடனே அறஞ்செய்க என்றா சொல்கிறார்கள்?
என்னதான் பொருள் ?
கைத்து : கைப்பொருள் (பணம், அல்லது செல்வம்)
உண்டாம் போதே: உண்டாகும், அதாவது உள்ள போதே;
கரவாது : இல்லை என்று சொல்லாமல்,
அறஞ்செய்க: தருமம் (பிறருக்குத் தருதல்) செய்க;
(ஈதல், தருதல், கொடுத்தல் நுண்பொருள் வேறுபாடு உண்டு. இங்கு அதைக் கவனிக்கவில்லை).
இது இரண்டாம் வரியின் பொருளாகும்.
ஒரு சாவு வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
"இவன் (செத்துப்போனவனர்) சின்னப்பயல். நான் பார்த்து இவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தேன்! உடம்பை ஒழுங்காப் பார்த்துக்கொள்ளவில்லை" என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார். சொன்ன பெரியவருக்கு 80, போய்விட்டவருக்கு 61 தானாம். இப்படி உலகத்தில் பல நிகழ்வுகள். பழுத்த பழமானவர் இருக்க, இளங்காயானவர் இறந்துவிடுகிறார். ஆகவே நாம் நல்லதைச் செய்யக் காத்திருக்கக் கூடாது. அறச் செயல்களை நினைத்த போதே செய்துவிட வேண்டும்.
ஒரு மரத்திலே இளங்காய்கள், தின்னப் பக்குவமானவை, மற்றும் முத்திப்போனவை என்று பல வகை தொங்கிக்கொண்டிருக்கின்றன. கடுமையான காற்று விரைந்து வீசுகின்றது. அதிலே இளங்காய் விழுந்துவிடுகின்றது. முத்திப் போனது இன்னும் தொங்கிகொண்டுள்ளது. அது போல மனித வாழ்வும்.......
என்கிறது இப்பாடல்.
அடுத்த இரண்டு வரிகளுக்கும்:
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
தீவளியால் : விரைந்து வீசும் காற்றின்காரணமாக; முற்றியிருந்த : முத்திப்போன; கனியொழிய : பழத்தை விட்டுவிட்டு; நற்காய் : உதிராமல் மரத்திலேயே இருக்கவேண்டிய நல்ல காய்; உதிர்தலும் உண்டு : கீழே விழுதலும் உண்டு,
தீ : விரைந்து வீசுகிற. தீவிரம் (தீயின் விரைவு) என்ற சொல்லமைப்புக் காண்க. தீவளி : அனல்காற்று என்பது அவ்வளவாகப் பொருந்தவில்லை. இங்கு விரைவுப்பொருளே பொருந்துவது.
o-o-o-o-o
lupdated 24.8.13)