ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கண்ணுக்குள் காதலி


கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே 
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.

போராட்டம்

கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.

புக்கார்  -  புகுந்தார் ;  ஆழி  - கடல் ,

போராட்டத்தில் ஈடுபடுவது துன்பம்  தருவது என்பது  கருத்து 
 புகை  என்றது கண்ணீர்ப்புகையை ,

புதன், 20 பிப்ரவரி, 2013

thumb drive fault

விரலகை வென்பது வேலைசெய் யாமல்
வரவிய லாதுபோ யிற்றே == பரல்களாய்
நீங்கள் வரைந்தவை நின்றன நேர்த்தியாய்!
தேங்குதல் உற்ற பிற,

அண்மையில் எனது தம்ப் டிரைவ்  (or flash drive) என்னும் விரலகைவு கெட்டுவிட்டதால் நானெழுதியவை பல தொலைந்துவிட்டன, இதன்காரணமாக  ஒரு கவிதை அரங்குக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. அதைப் பற்றிய பாடல் இது.

வரவிய லாதுபோ யிற்றே என்பதை  வர இயலாது  போயிற்றே என்று வாசிக்கவும்  வெண்பாவின் அசை சீர் காட்டுவதற்காக  இப்படி எழுத
நேரிடுகிறது. ( வகையுளி)

 விரல் அகைவு என்பதில் அகைவு என்பது    :   அகைத்தல்  drive.

இதில்  "நீங்கள் " - வேறொரு  கவிஞரைக் குறிப்பது,

பரல்  என்பது சிறு கல், விதை முதலியவை குறிக்கும் . விலையுயர்ந்த  கற்களையும் குறிக்கும். மணிப்பரல் என்றும் பொருள்படும்.