புதன், 20 பிப்ரவரி, 2013

Moon trapped by gravity of earth

 நிலமகள்  நீள்கவர்ச்சி நேர்ப்பட்ட  நிலவும்
உலவும் சுழல்சுற்றின் உண்மை ---சொலவும்
அறிவியலார் முன் நிற்க ஆங்குப்பா வல்லோர்
 நெறிவியக்க நீங்கிற்றே காண்


இதன் பொருள் :நிலமகள்  -  பூமியின்,  நீள் கவர்ச்சி -நீண்ட இழுப்புச் சக்தி ;
நேர்ப்பட்ட  -  வழிப்பட்ட ;  நிலவும் - சந்திரனும் ;  சுழல் சுற்றின் = சுழன்றுகொண்டும்  சுற்றிக்கொண்டும்;   உலவும் உண்மை -  நடைபெறுகின்ற தென்ற சரியான நிலையை ;  சொலவும்  = சொல்லவும் ;  அறிவியலார் = விஞ்ஞானிகள்  ; பா வல்லோர் -  கவிவாணர்கள் ;  நெறி  = பாடும்  முறைகள் ; வியக்க -  நாம் வியக்கும்படியாக ; நீங்கிற்றே காண்  -  அவறிவியலார் வழியினின்றும்  நீங்கிச் செல்கின்றதே , காண் = கண்டுகொள்ளுங்கள் 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

.the nature of moon

தண் பாலாய் வானில் தகதகக்கும் தட்டனைய
மண்கோளும் ஆகுமே மந்த நிலா ---பண்பாடும்
வண்கவிகள்  வாய்ப்பட்டு நின்றோம்   வரைபாவின்
நுண்ணெறிகள் நூற்றின்  மிகும்

தண்பாலாய்  =  பால் நிறத்தில் ' தட்டனைய - ஒரு தட்டுப்போல் தோன்றும்;
மண்கோள்  - மண்ணாலான உருண்டை; மந்த - குறைந்த ( ஒளி ')
பண்பாடும் = பாடல்கள் இயற்றும்; வண்கவிகள் = சிறந்தகவிகள்;
வாய்ப்பட்டு - இடத்தில் அகப்பட்டு; நுண்ணெறிகள்  - நுட்பமான வழிகள்;
நூற்றின் = நுற்றின் பலவாய்.

 கவிகள்  நிலவினைப்  புகழ்ந்து பாடுகிறவர்கள் .  நாம்  அவர்களின் வாய்ப்பட்டு நிற்கின்றோம்  வாய் = இடம் . அதாவது  அவர்களின் கற்பனை வலைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்  அவர்களின் பாக்களில்  பற்பல சொற்பயன்பாட்டுத் தந்திரங்களை அவர்கள் கையாளுகின்றார்கள் ஆகவே வரைபாவின் நுண்ணெறிகள் நூற்றின் மிகும் எனப்பட்டது 


பூமி உதயம் The rising earth



நிலவில்போய் நின்றிமை பூக்கவிப் பூமி
புலர்வதும் என்னே பொலிவாம்  --- சிலவாகும்
இத்தகு ஓவிய   இன்காட்சி  ஒத்தவொன்று
மெத்தக் கவின்விளைப்ப தின்று.


இமைபூக்க  = பார்க்க;  பொலிவு = அழகு; புலர்வது = உதயமாவது
இன்று = இல்லை. கவின் - அழகு.

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பூமியின் உதயத்தின் அழகை காட்டுகின்றன. இதை இப்பாடல் எடுத்துச் சொல்கின்றது.

பூமி உதயம்