ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

உட்டணம் (உஷ்ணம்)


உஷ்ணம் என்ற சொல்.

உட்டணம்

தணல் >  தணம்

ஒப்பு நோக்குக: திறல் > திறம்.

இவற்றுள் இறுதி லகர ஒற்று மகர ஒற்றாக மாற்றுரு அடைந்தது.

உள்+ தணல்  =  உட்டணல் > உட்டணம் >


உட்டணம் >  உட்ணம்> உஷ்ணம்.



---------------------------------------------------------------------------------------------------
அந்தணர்  என்ற  சொல்லில் நடுவிலுள்ள பதம் "தணல் " என்பதே என்று திருக்குறள்   புதிய உரையாசிரியர் டாக்டர் செல்லையா கருதுகிறார்.   அவர் ஆய்வில் "தணல்"  > >தணம்  > தணர்  அல்லது தணலர் >   தணர் என்று வந்தது என்பார் போலும்.  ஒப்பு நோக்குக   

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கலைவாணர் விளக்க வரிகள்



பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்ப தனித் திரிகள்  உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
நித்தம்  தவம்செய்த குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.

இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் (திறனாய்வு )  என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

அவ்வரிகள் இவை:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

"மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" {என்கிறார் } )1...... புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிறது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,


1 பிறை க்கோட்டுக்குள் உள்ளவை என் இணைப்புச் சொற்கள். 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

அதிகாரி ஊழல்!


கீழுள்ள அதிகாரி ஊழல் செய்து
கிளறியது மேலெழவே வழியில் லாமல்
வாழில்லம் வளம்பண்ணிச் செல்வான் ஆயின்
வாய்மைதனை வேண்டுவதும்  வெற்றுப் பேச்சாம்!
மேலுள்ள மந்திரியின் கண்ணில் பட்டு
மிதிபட்டு மடியாத கலையில் வல்லான்
நூலுள்ளும் நீதிக்கும்  பிறழ்ச்சி தந்து
நுனிக்கொம்பில் கொடிகட்டிப் பறக்கக் கண்டீர்.


மந்திரியும் எதை எதைத்தான் பார்த்துக் கொள்வார்
மாண்புமிக்க அவருக்கும் தோன்றா வண்ணம்
தந்திரரும் கையூட்டில் ஊன்றிப் பெற்றால்
மந்திரியின் தலைக்கன்றோ போகும் கல்லும்?
மந்திரியும் என்செய்வார்!மக்கள் சேர்ந்து
மாற்றிடலாம் மந்திரியை!ஊழல் செய்த
தந்திரியை மாற்றிவிடத் தக்க பாதை
தந்திடுமோ அமைப்பாட்சிப்  போக்குத் தானே


நூல் உள்ளும் =  சட்ட நூல்களின் படி செல்கின்ற.
உள்ளுதல் = எண்ணுதல்,


தந்திரர் என்றது  தந்திரம் உடைய ஊழல் பேர்வழிகளை. தந்திரி என்றும் வரும்.


மந்திரிக்குத்  தேர்தல் வருகிறது  கீழதிகாரிக்குத்  தேர்தல்  இல்லையே  என்றபடி