ஞாயிறு, 29 ஜூலை, 2012



பணிப்பெண் அன்பும் சேவையும்.



an affectionate  maid....


என்கால் தன்மடி மீதுவைத்தாள்
இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
தன்கால் மொத்தடி பட்டதுபோல்
தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.

சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
அன்னை மூவராய் ஆனதினால்
அதைத்த நோவதும் போனதன்றோ!

அன்பினர் யாரும் எட்டநின்றால்
ஆன வலியெலாம் கிட்டவந்து
பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
அன்பினர் குறுகிடில் விட்டகலும்

இரவில் வலியும் ஏறிடுமோ
என்பால் தோழியும் கூறிடுவாள்
வருவது வரட்டும் என்செய்வது
வைத்தியம் என்பது பின்செய்வது


வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
மொத்தடி - மொத்து அடி.
அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
கிட்ட - பக்கத்தில். அருகில்.
பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
அன்பினர் - அன்பு உடையோர்

குறுகிடில் -  நெருங்கி வந்தால் 

திங்கள், 23 ஜூலை, 2012

பாஷாணம்

நஞ்சு அல்லது உண்ணக் கொல்லும் பொருள்  பலவகை, சில பச்சையாகவே உண்டு  சாவினை  வரவழைத்துக் கொள்ளும்  திறம்  தருவதாம்  இதற்குரிய சொல் :

பச்சைநஞ்சு என்பதாம்,

 பச்சைநாவி  என்பது இன்னொரு நஞ்சின்  பெயர் .(aconite)

இனி பாசாணம் (பாஷாணம் ) என்ற சொல் எங்ஙனம்  அமைந்தது.?

ஆணம் என்பது  குழம்பு போல்  காய்ச்சப்படுவது.

பசுமை +  ஆணம் =  ; பாசாணம் .>  பாஷாணம். (இங்கு  முதனிலை நீண்டுள்ளது )

(இன்னோர் எடுத்துக்காட்டு  பசுமை + இலை = பாசிலை.)

அதாவது பச்சிலையை அவித்தெடுத்த நஞ்சு அல்லது  நஞ்சுக் குழம்பு என்பதாம்.

 இப்போது இது பொதுப்பொருளில் வழங்குகிறது,    


  காய்கறிக் குழம்பைப் "பச்சைக் கறி "  என்பது மலையாள வழக்கு.    


பாஷாணம் என்ற சொல் சமஸ்கிருத அகரமுதலியில் காணப்படவில்லை.





Poison என்ற ஆங்கிலச் சொல், ஒரு குடிக்கும் நீர்ப்பொருள் என்று பொருள்படும் சொல்லினின்று வந்ததாகக் கூறுவர்.:-


(potion, ,  a portion of a drink,  a drink in general.


குடிக்கத் தரப்படுவது (=gift)  என்று பொருள்தரும் சொல்லிலிருந்து பல ஐரோப்பிய மொழிகளில் இதற்குச் சொல் அமைந்துள்ளதென்பர்.


தமிழில் " பச்சிலை",  "வேகவைத்தல்" முதலிய கருத்துகளின் அடிப்படையிலேயே சொல் அமைந்துள்ளது.



மலாய்மொழியிலும் பல தமிழ்ச்சொற்கள் வழங்குகின்றன.
பாசாணம் குறிக்கும் ராச்சூண் என்னும் மலாய்ச்சொல்,
அரைச்சுண் (அரைச்சு உண்) என்பதன் திரிபு போல் தோன்றுகிறது. இது மேலும் ஆராய்வதற்குரியது. தற்கொலை செய்துகொள்வோருள், பச்சிலைகளை அரைத்து உண்டு மாண்டவர்கள் பலர்.
Poison  என்ற ஆங்கிலமும் பாசாணம் ("பாyசாண்") என்பதனோடு சற்று ஒலியொற்றுமை உடையதே.
இவற்றைப்பற்றி இங்கு ஏதும் கருத்துக் கூற முற்படவில்லை.






வியாழன், 19 ஜூலை, 2012

சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"



பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் ருவின் முல்லையொடு கஞல,
வாடை வந்ததன் தலையும்  நோய் பொரக்
கணடிசின் வாழி தோழி தொண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.


கொல்லன் அழிசியார், குறுந்தொகை  240.

இவ்வழகிய பாடலின் பொருளை  இனி நோக்குவோம்.




அருஞ்சொற்பொருள்


புதல் - புதர். பனிப்புதல்:  பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர்  இவர்ந்த = பற்றி  ஏறிய.  பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி.  கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.
ஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.
வெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த.  முல்லை - முல்லைமலர். கஞல = செறிய.  வாடை = வடக்குத் திசையினின்றும்  வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. *தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,
கடல் ஆழ் - கடலில் மூழ்கும்.  கண்டிசின்  =  காண்பாயாக .


இவர்தல்- (கொடியைக் குறித்து இச்சொல் பயன்படும்போது, மிக அடர்த்தியாகவும் உயரமாகவும் அக்கொடி மேலேறுதலை உணர்த்தவல்லது.  கண்டிசின் - காண்பாயாக என்பதாம். இசின் என்ற இடைச்சொல் இப்போது வழக்கில் இல்லை.  சில ஆய்வாளர்கள் இதை கங்கையாற்றுப் பகுதிகளில் வழங்கும் எழுத்துமுறையற்ற ஒரு திராவிட மொழியில் வழங்குவதாகக் கூறி யிருந்தனர். இக்குறிப்பு தற்போது என்னிடமில்லை.


கண்டு+ ஈகு + இன்  = கண்டீகின் > கண்டீசின்  கண்டிசின்   எனத் திரிந்திருக்கலாம் என்பர். ஈதல் = ஈகுதல், தருதல் பொருள்.  காண்க, காண்தருக என்பன  ஒத்த பொருள்  உடையன  எனலாம்., . 



தெள் - தெளி - தெளிவு.





தெள் - தெள்ளு,   தெள்ளுதமிழ்.
தெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)




தெள்+மை = தெண்மை.= தெளிவு.
தெண்மை+ திரை=  தெண் திரை = தெண்டிரை.




மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே என்பது.


தலைவியின் வீட்டிலிருந்து பார்த்தால் காதலர் வதியும் நெடுங்குன்றம் மாலையில் செஞ்சுடரோனின் ஒளிவெள்ளத்தில் அழகு மிளிரநிற்கின்றது.  மணி - அழகு, ஒளி என்பது பொருள். அவர் மணி நெடுங் குன்றம் : காதலர் வாழும் அழகொளி வீசும்  நெடிய  சிறு மலை. அவர் அருகில் இல்லாவிடினும், அவ்வழகிய நெடுங்குன்றையாவது நோக்கிய வண்ணம் தலைவி தன் மனத்தை ஆற்றிக்கொண்டிருந்திருப்பாள் .    .மாலை போகப்போக, இரவின் இருள் கவியக்கவிய, மலை மறைந்துவிடுமே! அவரும் இங்கில்லை. கண்டு மனங்களிக்க அவரது மலையும் மறைந்துவிட்டால், இத்துன்பத்தை எங்ஙனம் தாங்கிக்கொள்வது. இப்போது இரவு வருவதுதான் பெருந்துன்பமாகிவிட்டது. மாலை மாலையாகவேயாவது இருந்துவிடக்கூடாதா?


மாலை  என்பது  ஒளி யும்  இருளும் கலக்கும்  நேரம்  ஆகும் . இங்கு  மாலை  என்றது  இந்த  நேரத்தின்  விளிம்பைக்  குறிக்கிறது ,  மால் > மாலை.


தோழியிடம், "அதோபார், அந்த மலை மாலையில் மறைந்துவிடுமே....!. ""ஒளி குன்றக் குன்ற மலையும் கொஞ்சம் கொஞ்சமாக மறையுமே"  என்கிறாள் 


மாலையில் அவன் வாழும் மலைகூடக் கண்ணுக்கு மறையக்கூடாதா? அத்துணைக் காதலா? புலவர்  அழிசியாரின் பாடல் வெகு"ஜோர்" என்றுதான் சொல்லவேண்டும். என்னே நம் சங்க இலக்கியங்களில் வரும் காதற் சித்திரங்கள்.....





இனிப் பாடலின் முழுப்பொருளையும் காண்போம்.


குளிர்ந்த புதரில் பற்றி ஏறியுயர்ந்த அவரைப் பசுங்கொடி  கிளியலகினை ஒத்த ஒளிவீசுகின்ற பல மலர்களைத் தாங்கி நிற்கிறது.  வடக்கிலிருந்து வாடைக் காற்று  (குளிர்காற்று) வீச,  காட்டுப் பூனையின் பல்போன்ற முல்லை மலர்கள் அவரைப் பூக்களுடன் சென்று செறிகின்றன.   இயற்கையில் இவை இங்ஙனம் ட்கலந்துறவாடவே, எதிர் தோன்றும் மலையில் வாழும் காதலன் அருகில் இல்லாமையால், தலைவியைப் பிரிவுத்துயர் வருத்துகிறது.  போகட்டும், அவருடைய அழகிய ஒளிசெய்யும்  சிறு மலையையாவது  பார்த்துக்கொண்டே துயரை ஆற்றிக்கொண்டு    இருந்துவிடலாம் என்றால் மாலை வந்துவிட்டது. கடலில் கலம் மூழ்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடி ஆடி உள்ளிறங்கி மூழ்குதல் போல, மலையும் இருள் கூடக்கூட மறைந்துவிடும். தோழி, அவர் வாழ்க,நீயும் யாவரும் வாழ்க! இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன்? காதலெனும்  நோயுடன் அன்றோ நான் போராடிக்கொண்டிருக்கிறேன்....."
{நோய்  பொர   என்பது  புலவரின்  தொடர் .} 




என்பது தலைவி கூற்று.


நோய்  எனை  வந்து  வருத்துகிறதே .....என்பது பொருள்   பொருதல்  = சண்டை இடுதல் என்றும் பொருள்படும் சொல்,  காம  நோய்  அவளுடன்  போராடுகிறது  என்பது  பொருத்தமான உரை.  வாட்டுகிறது  என்றும் கூறலாம் .. காம நோய்க்கு  அவள்  ஒன்றும்  பலியாகிவிடவில்லை  என்பது  நன்கு தெரியும்படி """'பொ ர "  என்றார்  புலவர்.


அந்த மலை மறைவதுபோல, அந்தக் கலம் மூழ்குவதுபோல தலைவியும் துயரில் மூழ்கி வாடை தரும் குளிரில் வாடுவதுபோல் வாடி,
துன்பமே உருவாகிவிடுவாள்..... பாவம்....