அப்பன் இறைவனாக அம்மையும் ஆமென்றே
ஒப்புர வூட்டினரே ஊர்மக்கள் ---எப்புறமே
நோக்கினும் நற்சம நன்னிலை நோச்சொலால்
தாக்கினும் தக்கதிந் நாடு.
மங்கையர் தம்மை மகிழ்வுறுத்தும் சொற்களோ
எங்கும் பிறதொடர்கள் இன்மைகூர் --- பங்கமோ
நம்நாட்டில் மட்டுமோ நானிலம் மேவியதோ
பண்பாட்டில் வந்ததோ பாழ்.
இப்பாக்கள் பெண்ணியம் பற்றியவை. இறைவனை அப்பனாக கொண்ட மக்கள், அம்மையாகவும் கொண்டு வணங்கி வருகின்றனர். இது நெடுங்காலமாகத் தொடர்வது.
ஒப்புநிலை (சமத்துவம்) வித்தில் உள்ளது, இன்னும் முழுவளர்ச்சி அடையவில்லை என்றுசொல்லலாமா?
தாய்நாடு, தாய்மொழி என்பனவெல்லாம் ஏய்ப்பு என்பர் அறிஞர் சிலர். அது எதனால்? இத் தொடர்களுக்கு மாற்றுத் தொடர்கள் இன்மையினாலா? இந்தியாவில் மட்டுமோ? உலகம் எங்கணுமோ? காரணம் பண்பாட்டில் வந்த சீர்கேடோ? இது இரண்டாவது பாவின் கேள்வி.