செவ்வாய், 11 அக்டோபர், 2011

god and earthquake

மலர்கள் குலுங்கினால் -- இங்கு
மனமகிழ் வாக்கும் ஒருநிகழ்வாம்;
மலைகள் குலுங்கினால் -- அஃதிம்
மன்பதை மாய்க்கும் குலைநடுக்கம்.

(வேறு சந்தம்.)

அறிவெழு பூங்காவெனும் -- புகழ்
ஆர்ந்தெழும் யப்பான் நிலத்தினிலே;
செறிவுறு மண்பிளந்தே -- மக்கள்
செத்தனரே துன்பம் உறப்பலரே.


பூவெனத் தந்துவந்தான் -- இறை
பூமியைப் பொன்றாத மக்கள்குலம்,
மேவி மகிழ்வுறத்தான் -- பின்னும்
பூவெனவே எண்ணிக் குலுக்கினனோ?

commentary.
தந்துவந்தான் - தந்து உவந்தான்; தந்து
மகிழ்ந்தான்.
ஆர்ந்தெழும் - நிறைந்து எழும்;
செறிவுறு = solid
யப்பான் = ஜப்பான்.

பூமியைப் பூவாக மக்களிடம் தந்தான் இறைவன். அதனால்தானோ, அப்போதைக்கப்போது பூவைக் குலுக்குவதுபோல, பூமியையும் இறைவன் குலுக்கிவிடுகின்றான், ஏற்படும் சேதங்களை மறந்தானோ?

உலகத்தை "மலர்தலை உலகம்" என்பதுமுண்டு. தலை = இடம

எருமைக்கு விருது

பொறுமைக் கெருமை! பொய்யாமோ என்சொல்?
அருமையில் அஃதொப்ப தில்.

கண்டாலும் தன்வழியே போமெருமை தன்னாலே
உண்டாமோ யாதும் இடர்?

பாரூட்டும் பால்தந்து நல்லெருமை! அவ்விலங்கால்
சீர்பெற்றார் செந்தமிழர் காண்!

கடித்த கொசுவையும் கண்டுகொள்ளா உள்ளத்து
எடுத்த தெருமை விருது.

செயற்பால தவ்வெருமை போற்றல் ஒருவற்
குயற்பால தோரும் கொசு.

Elephants யானை

கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
காணலாம் காண்பீரே சென்று.

அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
கூன்படாக் கொள்கை இது.

ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
யானும்நம் பாவலரோ டிங்கு.