செவ்வாய், 11 அக்டோபர், 2011

எருமைக்கு விருது

பொறுமைக் கெருமை! பொய்யாமோ என்சொல்?
அருமையில் அஃதொப்ப தில்.

கண்டாலும் தன்வழியே போமெருமை தன்னாலே
உண்டாமோ யாதும் இடர்?

பாரூட்டும் பால்தந்து நல்லெருமை! அவ்விலங்கால்
சீர்பெற்றார் செந்தமிழர் காண்!

கடித்த கொசுவையும் கண்டுகொள்ளா உள்ளத்து
எடுத்த தெருமை விருது.

செயற்பால தவ்வெருமை போற்றல் ஒருவற்
குயற்பால தோரும் கொசு.

Elephants யானை

கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
காணலாம் காண்பீரே சென்று.

அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
கூன்படாக் கொள்கை இது.

ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
யானும்நம் பாவலரோ டிங்கு.

BIRTH DEFECTS

உடற்குறை ஏதுமின்றி -- இந்த
உலகிற் பிறந்துவிட்டால்,
தவக்குறை இல்லையென்று - நாம்
தனிமகிழ் வெய்திடலாம்.

வலிப்பு வளிமுடக்கு --இவை
வந்து துயர்படுவார் -- தமை
நினைப்பினும் நெஞ்சுமிக --ஒரு
நிகரிலாத் துன்புறுமே

பிறவியில் ஓர்சிறுவன் -- அவன்
பிற்பட இக்குறைகள்,
இறைவன் நிறுவினனோ --அதற்கும்
யாதுரை காரணமோ?

வளி - வாயு. முடக்கு - கைகால் முடக்கு.