புதன், 24 டிசம்பர், 2008

தமிழ் (குறட்டாழிசை)

தமிழ்

(குறட்டாழிசை)



பரந்த கண்டமாம் பஃ·றுளி யாற்றொடு பாரில் பல்வழிச்
சிறந்து விளங்கிய பைந்தமிழ்!

தான்பல சொற்களைத் தரணி மொழிகட் கீந்து வளர்கெனும்
மேன்மை வழங்கிய பைந்தமிழ்!

கடலும் பொங்கியே கண்டம் விழுங்கிட நிலத்தை இழந்துதன்
உடல்கெ டாதகன் னித்தமிழ்!

நூல்கள் அழிந்தன; கலைகள் அழிந்தன; நொந்த போதிலும்
கால்தடு மாறாக்் கலைத்தமிழ்!

பகைவர் வந்தனர்; பாழ்ப டுத்தினர்; பயமு றுத்தினர்
தகைமை தாழாத் தனித்தமிழ்.



புனைந்த நாள்: 21.1. 08

ஒரு தோட்டத்துப் பூ

ஒரு தோட்டத்துப் பூ.


தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்
தொட்டிட வந்தாய் தோழி
காற்றென அசைத்தாள் என்னைக்
காத்தனள் கொஞ்சநேரம்;
ஆட்டமோ என்னைக்கண்டே
அசையாதே என்றவாறு
பூட்டினாய் விரல்கள் என்மேல்;
பூவெனைப் பறித்தேவிட்டாய்!

வருடினாய் விருப்பம்போலே
வகைகெட மாட்டிக்கொண்டேன்
நெருடினாய் நிமிர்த்திமோந்து
நேர்ஒரே முத்தம்தந்தாய்!
குருடியே` என்றேவையக்
கொதித்திட வலிமையில்லை.
மருள்தரக் கசக்கிப்பின்னே
மாய்ந்திடக் களைந்திடாதே!

எழுதிய நாள்: 27.8.08

தமிழர் வீரம்.

ஏறாத மலைதனிலே ஏறிவெற்றிக் கொடிநாட்ட
தேராச்சிங் களப்படைகள் திரண்டுருண்டு முயல்வனவே!!

மாறாத மரபுடைய மறத்தமிழர் எதுபோதும்
நூறாகச் சிதறடிப்பார்் நுழைபகைவர் படையணியை.்