வெள்ளி, 31 அக்டோபர், 2025

காண்தாரம் என்பதன் திரிபு

 காண்தாரம் என்ற சொல் எவ்வாறு திரிந்துள்ளது என்பதைக் காண்போம்.

காண்தார நாட்டின் இளவரசி காந்தாரி.  இவள் பாரதக் கதையில் வரும் கதைமகள் ஆவாள்.  

காண்தார நாட்டின் அழகின் காரணமாக அந்நாட்டுக்குக் காந்தாரம் (காண்தாரம்) என்ற பெயர் ஏற்பட்டது.  காணபதற்குப் பல அழகுகளை உடைய நாடு என்ற பொருளில் இச்சொல் அமைந்துள்ளது.  காண் -  காண்பதற்கு  தாரம் - அழகுபல தருவதான நகர்.  காணுதல் தருதல் என்பன இதன் வினைச்சொற்கள்.

மகாபாரதச் சொற்களில் பல தமிழ் மூலங்கள் உடையவை என்பதை முன்னர் எடுத்துக்காட்டி யுள்ளோம்.

காண்தரு அழகுடைய நகர்.  காண்தரு+ அம் > காண்தாரம்.

காண் தரு > காண்தாரி> காந்தாரி.

சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  இச்சொல் வழங்குகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை,

வியாழன், 30 அக்டோபர், 2025

நாமம் நாவு

 நாவு என்ற சொல் நாக்கு என்றபடி  இன்று பேச்சிலும்  எழுத்திலும் வழங்குகிறது.  நாவு என்பது  நா  என்றும் வழங்கும். நாய் என்ற விலங்குக்கும் இச்சொல்லே அடிச்சொல் என்பது புலவர்கள் கருத்து. பரத்தல் என்ற வினையின் அடி பர என்பது.  பர என்பது பார் என்று திரிந்து,  உலகு என்ற பொருளில் உலவுகின்ற சொல். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பார்வையைக் குறுக்கிச் செலுத்திக்  காட்சிகொள்ளாமல் விரிந்து செல்வதுதான்  '' பார்த்தல் '' எனப்படும். கடவுள் என்பவர்க்கு இருப்பிடம் கைலாயம், வைகுண்டம் என்று சொற்கள் இருப்பினும் அவர் ஓரிடத்துக்கும் ஒடுங்காதவர்.  ஆகையால் இவர்க்கும் பரமன், பரப்பிரம்மம் என்றபடி பெயர்கள் அமைந்துள்ளன.

நா என்பதிலிருந்து நாய் என்ற சொல் அமைந்தது போலவே,  பரவலுற விரிக்கப்படுவதற்குப்  பார்>  பாய் என்ற சொல் அமைந்தது. இது போலவே, பழத்திற்கு முந்தியது  காக்கப்பட்டதனால்  கா(த்தல்) > காய்  ஆயிற்று. காய்கள் சில கசப்பு உடையவையாக இருப்பதானால்   கச> கய>  காய்  என்ற சொல் வந்தது.

மனிதன் பிறக்கிறான்,  காலம் செல்ல, இறந்துவிடுகிறான்.  நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்பர். பழங்காலத்தில்,  கொலை என்பதை  ஆங்கில மொழியில் மர்டர் என்று எப்படிப் பெயரிட்டனர்?  மர்ட்ரம் என்பது  கொன்றவனிடம் வசூலிக்கப்பட்ட ஒரு வரி. இதிலிருந்தே  மர்டர் (கொலை) என்பதற்கான சொல் பெறப்பட்டது.  அரசனின் கவனம் இதில் பெயரிடும் அளவுக்கு ஏன் சென்றது என்றால்,  இறந்தவன் அரசுக்குச் செலுத்திய வரி வராமல் கொலைஞன் கெடுத்துவிட்டான் என்பதனால்தான்.  சொல் அமைவதற்குக் காரணம் வரலாறு தொடர்புடையதாகவும் இருக்கலாம்..

பழங்காலத்தில் மக்கள்தம் பிறப்பு இறப்பு பற்றியவை  கல்வெட்டில் பொறிக்கும்   அளவுக்கு முன்மை ( முக்கியத்துவம்) பெறவில்லை. குடும்பத்தார் ஓலைகளில் எழுதி வைத்திருந்திருக்கலாம்.  இது எழுத்துக்கள் உண்டான பின்புதான் இயன்றிருக்க முடியும்.  பெயரிடும் வழக்கம்  அதற்கும் முன்னரே உண்டானது என்பதற்கு நாமம் என்ற சொல் சான்றாகின்றது.  பெயர்கள் நாவினால் அழைத்து உண்டானவை. நாவினால் பலமுறை அழைத்தபின்பு தான் அது நாமம் ஆகிறது.    நா> நா அம் > நாமம்.    அம் என்ற இடைநிலையும்  அம் என்ற இன்னொரு விகுதியும் பெற்ற சொல்லே நாமம் ஆகும்.

சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான்.  ஐரோப்பியர்கள் அதனுடன் உறவு கொண்டாடி,  அதிலிருந்து பல சொற்களை எடுத்துக்கொண்டனர். சீன மொழியை அவர்கள் கவனித்தனர் என்றாலும் அங்குள்ள சொற்களால் வசதியான உறவை அம்மொழியுடன் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பெரிதும் ஓரசைச் சொற்களாய் இருந்ததும் ஒரு காரணம். இதைக் கூறும் இடுகைகள் அல்லது கட்டுரைகள் தொடக்கத்தில் இணையத்தில் இருந்தாலும் இப்போது அவை அங்கு இல்லை.  நூல்களில் கிட்டலாம்.

வீட்டில் உம்மைப் பலகாலும் அழைக்கப்  பயன் தருவதே  நாமம்.  நா> நாமம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 24 அக்டோபர், 2025

துரியோதனன்

துரியோதனன் தான் கல்வி கற்கும் காலங்களில் சிறப்புடையோனாகத் திகழ்ந்ததாகவே தெரிகிறது.  தான் கசடறக் கற்றதுடன், பிறருக்கும் போதித்த பெருமையோன் என்பது தெளிவு.  துரியோதனன் என்ற பெயர் இயற்பெயராகத் தோன்றினபோதிலும்  இது தமிழ் மூலங்களை உடைய சொல் என்பது எமக்குத் தெளிவாய் உள்ளது.  நீங்கள் இதை உடனடியாக ஏற்கவேண்டியதில்லை,  ஆய்வு செய்து ஏற்கலாம்  அல்லது புறந்தள்ளிவிடலாம்.  இவ்வாறு செய்வது உங்கள் ஆய்வுரிமை.

துரியோதனன் கல்வியிற் சிறந்தோன்.  அவன் '' துருவி ஓதுநன்''  ஆவான்.

ஒன்றைத் துருவி துருவிக் கற்று மனத்தில் அமைத்துக்கொள்பவன்.

துருவி ஓதுநன் >  துருவோதுநன் >  துரியோதன >  துரியோதனன்.

பாண்டவர் என்பதற்கும் பாண்டியர் என்பதற்கும் உள்ள ஒலியொற்றுமையை கவனித்துக்கொள்ளுங்கள். உடன்வீழ்க என்று யாம் சொல்லவில்லை.

இதை வேறு யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று யான் அறியவில்லை. அவர்களை மேற்கோள் காட்டவும் எண்ணவில்லை.

ஒன்றை நன்றாகத் துருவி ஆய்ந்து அறிந்தபின்  அவன் அதை  ஓதும் பண்பினன். அவன் அதைப் பின் ஒலிப்படுத்துவான். தன் செவிகட்கும் அவன் ஓதுவான்; பிறருக்கும் ஓதுவான்  ( ஓதுவிப்பான் /கற்பிப்பான்).

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

  

திங்கள், 20 அக்டோபர், 2025

பயம் (அச்சம்) என்ற சொல்.

 இன்று பயம் என்ற சொல்லை ஆய்வு செய்தல் நண்ணுவோம்.

பைம்மை என்பது  இளமைக்காலத்தைக் குறிக்கும்.   பை>  பையன்,  இது இளவயதினனைக் குறிக்கும் சொல்.  இச்சொல் முன் தமிழில் பையல் என்றிருந்து பின்னர் பையன் என்று அன் விகுதி பெற்றது.  லகர ஒற்றால் இறுதி பெற்று, பின்னர்  னகர ஒற்றால் முடியும்  சொற்களில் பையன் என்பதும் ஒன்றாகும்.  பையல் > பையன் ;  

பையல் >  பயல் என்றுமாகும்.   ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியத்தில் சொல்லப்படுகின்றது.  சொல்லாக்கத்திலும் இக்குறுக்கம் நிகழும்.

ஒருவன் பையனாக இருக்கும்போது,  எளிதில் அவனைப் பயமுறுத்திவிடுதல் கூடும். அச்சமின்றி நடந்துகொள்வது எல்லாப் பையன்களாலும் இயலுவதில்லை.   சொற்கள் பெரும்பாலும் பொதுப்பண்பு கருத்தியே அமைபவை. இவ்வாறு,  பயம் என்ற சொல்  அச்சத்தைக் குறிக்கலாயிற்று. இதன் அடிச்சொல் பை  என்பதே.

இதே அடியிலிருந்து  பைத்தியம் என்ற சொல்லும் வந்துள்ளது. இது:

பை -  இளமை குறிக்கும் அடிச்சொல்.

பை+ து >  பைத்து   பொருள்:  இளந்தன்மை காரணமாய் எழுவது.

பைத்து + இ+ அம் > [பைத்தியம்.  இளமையினால் அல்லதூ முதிர்வின்மையால் எழும் மனநோய்.]

''ஆளும் வளரணும்  அறிவும் வளரணும்'' என்று பாட்டில் சொல்வதுபோல்  ஆள் வளர்ந்தும் அறிவு பைம்மை நிலையில் இருப்பதுதான்  பைத்தியம்.

பயில்தல், பயிற்றுதல் என்ற சொற்களும் பைம்மை அடியாகப் பிறந்தவையே.  

பை> பயம் என்பதே  இதன் பிறப்பு.   பயன் என்ற சொல் பயம் என்றும் வரும்.  அதை வேறு சொல்லாகக் கொள்ளலாம்.  இங்குப் பயிர் என்ற சொல்லையும் இணைத்துப் பொருள் சொல்லலாம் எனினும் அதை வேறோர் இடுகையில் செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை,


வியாழன், 16 அக்டோபர், 2025

உலவுதலும் உராவுதலும்.

 லகரம்  சொல்லில் ரகரமாக மாறிவிடும் என்பது நம் பல இடுகைகளில் முன்னர் சொல்லியிருத்தலைக் காணலாம். இம்மாற்றங்களில் பலவற்றை மிக்க நுட்பமாக ஆய்வு செய்தால் இந்தத் திரிபு மனப்பாடமாக மறக்க முடியாததாகி விடும் என்பது தெளிவு.

இவ்வகைத் திரிபு மிக விரிந்த தாக்கமுடையது ஆகும். 

பழந்தமிழில் லகர ஒற்றில் முடிந்த சொற்கள் பலவிருந்தன.  வள்ளல் என்ற சொல் இன்னும் வழக்குடையதாய் உள்ளது. நாளடைவில் அல் என்று முடிந்த மனிதனைக் குறிக்கும் சொற்கள் அல் என்று முடியும்படி இல்லாமல் அர் என்று முடிவெய்தின. இளவல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம் .  தம்பி என்று பொருள்படும் இச்சொல் இறுதி லகர ஒற்றில் முடிந்தது. இதுவும் எப்போதாவது உயர்ந்தோர் (கல்வியாளர்கள்) நடையில் தோன்றி மகிழ்விக்கும்.  தோன்றல் என்ற சொல்லும் மிகப்பெரியோன் என்று பொருள்தருவது.  வேறு பொருள் உண்டாயினும்,  இது லகர ஒற்றில் முடிதலைக் கண்டுகொள்க.

இங்கு காட்டப்பெற்றவை சொல்லின் இறுதியில் வரும் லகர ஒற்று. லகர ரகரங்கள் சொல்முதலாக வருவதில்லை.  ( மொழிமுதல் என்பர் இலக்கணியர்).

உலாவுதல் என்பது உராவுதல் என்றும் வந்ததற்கான இலக்கியம் உண்டு என்பதறிக. இத்திரிபு  லகர ரகரத்தது ஆகும்.

லகர ரகரத் திரிபுகள் பிறமொழிகளிலும் காணப்பெறுவது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



திங்கள், 13 அக்டோபர், 2025

இரக்கம் , ரக்கம்> ரட்சம், ரட்சகர் முதலியவை

 மேற்கண்ட (தலைப்புச்) சொற்களை ஆராய்வோம்.

ஒரு பறவைக்கு  அது இடம்பெயர்வதற்கான உதவி உறுப்புகள்  பக்கவாட்டில் அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே.  அதனால் அதற்குப் பக்கி என்ற பெயர் அமைந்தது.  பக்கங்களில் அமைந்தவை என்று இந்தச் சொல்லுக்கு பொருள்.  பகு+ அம் >  பக்கம்;  பகு+ இ >  பக்கி.  இ என்பது ஒரு விகுதியும், இருப்பவை என்பதற்கான முதலெழுத்தாகவும் கொள்ளலாம்.   பக்கி என்ற சொல்லே பின் பட்சி என்று  திரிந்தது.

பக்கி > பட்சி என்ற திரிபு,......  என்பதில்  க்கி என்பது ட்சி என்று திரிந்தது போலவே,  இரக்கம் என்ற சொல்லும்  ரக்க> ரட்ச என்று திரியலானது.  இது சொல்லியலுக்கு ஒத்த திரிபு ஆகும்.  கேரளம் என்ற சொல்  சேரலம் என்ற சொல்லின் திரிபு.  சேரல் என்பது சேரன் எனற சொல்லின் முன்வடிவம்.  க > ச என்றித் திரிபுவகையைக் குறிக்கலாம்.  ச என்பது பின் ட்ச என்று சமஸ்கிருதத்தில் திரிந்து  எளிதாக்கம் பெறும்.  

இரட்சகர் என்றால் இரக்கம் காட்டி உதவுபவர் என்று பொருள். இரக்ககர் என்ற சொல்லே இரட்சகர் என்று திரிந்தது.  அதன்பின் முன்வடிவம் இறந்துபட்டது என்பது தெளிவு. இரக்க அகர் என்பதை இரக்கமுள்ள அகத்தினர் என்று பொருள்கூற வேண்டும்.  அகத்தினர் -  மனத்தினர்.  இரட்ச அணியம் >  இரட்சணியம் > இரட்சண்ய.

மரங்களுக்கு விருட்சம் என்ற சம்ஸ்கிருதச் சொல் வழங்குகிறது.  கிளைகளில் இலைகள் ஏற்பட்டு  விரித்த -   அல்லது விரிந்த நிலையில் நிற்பனவாதலின் இவற்றுக்கு  விரிச்ச < விரித்த என்பதிலிருந்து  விரிச்சம்>  விருச்சம் என்ற பெயர் ஏற்பட்டது நல்ல அமைப்பு.  இது தமிழை ஒட்டி எழுந்த பெயர்தான்.  விரிச்ச என்பது ஊர்வழக்குத் திரிபு.  இது பின் விருட்சம் என்று திருத்தப்பட்டது தெளிவு.

பரிந்து மணவர்களுக்கு இடப்படுவது பரிட்சை.  பரி + இடு + சுஐ (சை).  பரிதல் - ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்குச் செல்லுக்கின்ற ( பரவுகின்ற)  இரக்க குணம்.  பரீட்சையில் மணவர்களை ஆய்வு செய்தல் பரவும் ஒன்றுதான்.   அது ஆசிரியனிடமிருந்து மாணவனை நோக்கிச் செல்லும் ஓர் ஆய்வுநிகழ்வு.  பரிதல் என்பது இடம்பெயர்தல்  . பரவுதல் இடம்பெயர்தலே  ஆகும்,

ககரத்துக்குச் சகரம் வந்த இடங்களை இவ்வாறே  அறிந்துகொள்க.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.

 

வெள்ளி, 10 அக்டோபர், 2025

கோவிந்தன் என்ற கடவுட்பெயர்

 இத் திருப்பெயரை இப்போது ஆய்வு செய்வோம்.

மாடுகளை விரும்பி அவைகட்கு உதவி அருள் புரிந்தவன் கோவிந்தன். கோ என்பது பொதுவாக மாடுகளைக் குறிக்கும் சொல். இதற்குப் பிற பொருளும் உண்டு.  

கோவிழைந்தான் என்பது (கோவி(ழை)ந்தான் என்று)> கோவிந்தான் என்று இடைக்குறைந்து,  கோவிந்தன் என்று குறுகிற்று என்பது பொருத்தமான விளக்கம் ஆகும். ழை என்ற ஓரெழுத்துக் குறைந்த இடைக்குறைச் சொல்.. வட வழக்கில் ன்  என்ற மெய்யும் விடப்பட்டது.  அன் விகுதி அங்கு இல்லை.

இவ்வாறு குறுக்க, கோவிந்தன் என்ற சொல் பிறந்து,  கோவிந்த்  ஆனது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்.

பகிர்வுரிமை.



திங்கள், 6 அக்டோபர், 2025

துப்பு என்னும் வழக்குச் சொல் மற்றும் இலக்கியச் சொல்

 துப்பு என்பது '' பல்பொருள் ஒருசொல்.''  இதன் பொருள்களில் உளவு, உளவாளி என்றும் பொருள் உள்ளது.  இது மனிதனைக் குறிக்கும்போது, உளவன் என்று அன் விகுதி பெற்றும் வருதலை உடையதாம்.  

இது அகம் என்னும் சொல்லுடன் சேர்ந்து துப்பகம் என்றுமாகும்.  துப்பு, அ , கு அம் என்னும் பகவுகளை இணைத்து உண்டான சொல்.  அகம் என்பதை சொற்பகவாய்க் கொள்ளாமல் விகுதி மற்றும் இடைநிலைப் பகவுகளாகக் கொண்டு,   அ -  அங்கு, கு - சேர்ந்து அல்லது கூடி, மற்றும் அம் - அமைதல் பொருளதான விகுதி என்றும் கொண்டு,  அங்கு சேர்ந்து அமைவது என்று பொருள்கூற, அது வழக்கில் உண்ணும்போது சோற்றில் முன்னர் ஊற்றப்படுவதான நெய்யைக் குறித்தது என்று கொள்ளல் அதன் வழக்குப் பொருளுடன் சரியாகின்றது. 

துப்பன் என்பது ஆற்றல்லுள்ள மனிதனைக் குறித்தது.   து என்பது முற்செலவு குறிக்கும் சொல்லாகையால், எதிலும்  முன்செல்பவன் வலியோன் என்று பொருள்பயந்து நிற்கிறது. அரசன் செல்லுமுன் முன்சென்று அறிந்து வருவோன் ஒற்றனாதலின், அது ஒற்றனையும் குறிக்கும் சொல்.

துப்புரவு என்னும் சொல்லிலும் துப்பு உள்ளது.  துப்பு, உரு, அ, வு என்பன பகவுகள்.  வு என்பது விகுதி.  துப்பு - முன்னர், உரு -  தெளிவாகி, அ என்பது அங்கு என்று குறிப்பது.  ஆகவே, எல்லாவற்றிலும் முன்னர் அங்கு நிற்பது என்றால் அது தூய்மைதான்.  தூய்மை என்ற சொல்லுமே முன்வரு தன்மையையே குறித்து எழுந்த சொல்தான்.  ஆகவே கருத்தொற்றுமை உள்ளது காண்க. பண்டைத் தமிழர் தூய்மையை வெகுவாகக் கொண்டாடியது இதிலிருந்து தெரிகின்றது.

துப்புரவு என்ற சொல் துப்பரவு என்றும் வரும்,  அரவு என்பது அருமை என்று கொள்க. அரு+மை > அருமை;  அரு+ வு > அரவு.  ரு என்பதிலுள்ள இறுதி உகரம் ரகரமாயிற்று,  இது திரிபு.   தூய்மையே அருமையானது என்பது இதன் சொல்லமைப்புப் பொருளாகிறது.

துப்பற்றவன் என்றால்  முன் நிற்கும் தகுதி அற்றவன் என்று கொள்க.

அரக்கு  என்பதும் பொருள். இன்னும் இச்சொல்லின் பொருளை அகரவரிசைகளில் முழுமையாக அறிந்துகொள்க.  எல்லாம் முன்மை காட்டும் பொருட்களே  ஆகும். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்னும் குறளும் காண்க.

துப்புதல் என்ற வினை முன் கொணர்ந்து எச்சிலை உமிழ்தல் என்ற பொருளுடன் அறியப்படுகிறது.  ஆகவே து என்பதற்கு முற்செலவே பொருள். உமிழ் என்ற சொல்லிலும் உ என்ற உகரத்திற்கு முன் என்பதே பொருள்.

இவ்வாறு அறிய இதன் பொருண்மை எளிதாகிவிடுதல் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஆலிங்கனம் தமிழ் மூலம்

 ஆளை இங்கு அணை அம் என்ற சொற்களை அல்லது வாக்கியத்தைத் திரித்து இணைத்தாலும்  ஆலிங்கனம் என்ற சொல் வந்துவிடும்.  இவ்வாறு இணைக்கும்போது  உட்பகவுகளைத் திரிக்காமல் இருத்தல்  இயல்வதில்லை. ஆளை என்பது ஆலை என்று மாறிவிடும்.  இங்கு என்பதை இணைக்கையில், ஆலை + இங்கு > ஆல்+இங்கு என்று மாறி,  ஆலிங்கு என்று வரும். ஐகாரக் குறுக்கம் என்பது தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது.. பண்டைக் காலத்தில் கவிதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டன. ஐயை என்ற சொல்லுடன் ஐ என்ற வேற்றுமை விகுதியைப் புணர்த்தினால்,  பலுக்கும்போது  ஐயயை என்று ஒலித்து, நடுவு இடத்து யை  என்பது ய என்றாவது காண்க. இவண்  ஆளை இங்கு என்பது ஆள்+ இங்கு என்றாகி   ஆளிங்கு > ஆலிங்கு என்றாம்.

இனி அணை என்பது  அனை> அன்  என்று ஐகாரம் முற்றும் தொலைந்துவிடும். இவ்வாறு ஐகாரம் வீடுற,  அனம் என்று வருதல் எளிதாம்.  ஆகவே  ஆல் இங்கு அன் அம் என்று தோற்றமுற்று,   ஆலிங்கனம் என்று எளிதாம் என் க.

இது இன்னொரு வகையிலும் உருவாக்கம் பெறலாம். இது முன் எழுதப்பட்டது. அதனை ஈண்டு காண்புறுவீர். 

ஆலிங்கனம் என்பதற்கு இன்னொரு முடிவு:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_28.html

இந்த இடுகையைச் சொடுக்கி, இன்னொரு வகை விளக்கத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை  உடையது.