சனி, 5 அக்டோபர், 2019

மும்முரம் -எழுத்து பொருள் திரிபுகள்.

ஒருவன் ஒருமுறை செய்வதை மூன்று முறை விடாமற் செய்தானென்றால் அவன் அதில் மும்முரமாக ஈடுபடுகிறான் என்று ஊர்மக்கள் எடுத்துக்கொள்வர்.

மும்முரம் என்பது ஈடுபாட்டின் அகலத்தை அல்லது விரிவினைக்  குறித்து வழங்கினாலும்  அந்தச் சொல்லெழுந்ததோ தடவைகள் மூன்று என்ற கருத்திலிருந்து தான். தடவையினின்று செயல் விரிகை காட்டினமையால் பொருள் சற்றே  திரிந்து  அது திரிசொல்லாயிற்று. இது பொருட்டிரிபு ஆகும்.

அத்துடன் சொல்லும் திரிந்தது காணலாம்.

மும்முறை -  மும்முரம்.

முறை என்பது  மு+(ற்+ ஐ)..என்று எழுத்துப்பிரிப்பு அடையும்.

இதில் ஐகாரம் விலக,  முற் என மிஞ்சும்.

ற் என்னும் வல்லொலி நீங்க  ஆங்கு ரகர ஒற்று இடம் கொள்ளும்.

இப்போது   இருப்பது  முர் என்பதே.

இதில்  அம் விகுதி புக,   முரம்   ஆகும்.

இதற்கு ஓர் உதாரணம் காட்டுதும்.

வீறு  என்ற மனத்திட்பம் குறித்த சொல் அம் விகுதி பெற்று  வீரம்  ஆனது காண்க.  அது வீறம்  என்று வரவில்லை.  வீறு என்பதும் வீரு என்று வடிவம்கொள்வதில்லை.  வீரு எனின் அஃது செந்தமிழியற்கை வழுவிற்று.
வாய்ப்பேச்சில் நீண்டொலிக்க விலக்கில்லை.

வீர் என்பதே அடி, அடியினின்று செலின்  வீர்+ அம் = வீரம்  ஆகும். வீர் என்பதும் விரைவுடன் தொடர்புடைச் சொல்.

ஐகாரக் குறுக்கத்துக்கு எ-டு:   தீ + விரை + அம் >  தீ + விர் + அம்  = தீவிரம்.

விரை என்பது தன் ஐகாரமிழந்து விர் என்றே சொல்லாக்கத்துள் நின்றது.

இத்தகு திரிபுகளால்  மும்முரம் பொருட்டிரிபும் எழுத்துத் திரிபும் உடைத்தாயிற்று.

இச்சொல் ஒரு பகுதியே காரணத்துடன் நின்றமையின்  காரண இடுகுறி ஆயிற்று. பொருள் விரிந்து செயல் அகலத்துடன் அதனில் ( செயலின்) ஆழ்ந்த ஈடுபாட்டையும் இப்போது குறிக்கும்.

மும்முறையே அன்றிப் பன்முறைச் செயலும் குறிக்க விரியும். ஈண்டு மும்மைச் சொல் பொருளிழக்க நேர்ந்தது.

மும்முறம் என்றே விட்டிருப்பின் பொருட்கேடுறுதல் காண்க.
அறிவீர் மகிழ்வீர்.




பிழை புகின் திருத்தம் பின்.
கண்ட இரு பிழைகள் திருத்தம் பெற்றன.7.10.19  காலை.



கருத்துகள் இல்லை: