புதன், 10 மே, 2023

அபேட்சை என்பது

 இனி அபேட்சை என்பது வந்துற்ற விதம் காண்போம்.

ஏதேனும் ஓர் அவா மனத்தினுள் ஏற்பட்டுவிடுமாயின்,  அத்தகு அவாவினுட் பட்ட மனிதன் அதனால்  அலைப்பட்டு விடுகிறான்.

அவா ஏற்சித்தல்   - அவேற்சி > அபேட்சி+ ஐ >  அபேட்சை  ஆகிவிடுகிறது.

சித்தல் என்பது சுற்றல் ( சுத்தல் ) என்பதன் திரிபு.

ஏல் என்பது ஏற்றல் வினை(ச்சொல்).

வகரம் பகரமாகும் என்பதால்,  அவா என்பது  ஏல் என்பதன் முதனிலை ஏகாரத்தினோடும் கூடி, அபே என்று நின்றது காண்க.

இவ்வாறு நோக்க,  அவாவினோடும் செல்லுதல் என்ற கருத்து பெறப்படுகிறது.

இன்னொரு நோக்கில்,   அவா இச்சை என்ற இரண்டும் கூடித் திரிந்து,  அபேட்சை என்று திரிந்து நடத்தலும் இயல்வதே.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 8 மே, 2023

தேர்தல் வெற்றியில் தேன்போலும் வாழ்வு

 கர்நாடகா தேர்தலில் வேட்பாளர் சிலரும் அவர்களின் தாய்தந்தையரும் கூட மக்கள்முன் தோன்றிக் கண்ணீர் வடித்துக்கொண்டு,  தங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.  அரசியல் களத்திலே இருப்போருக்கும்கூட,  வேலையிழப்பு,  ஊதியமின்மை என்பன இன்னல்கள் பலவற்றை உண்டாக்கிவிடுகின்றனவென்பது வெளிப்படையான உண்மையாகும். தேர்தல் வெற்றியென்றால் பல நன்மைகள் கிட்டும். சம்பளத்தோடு கிம்பளமும் கிட்டும்.  அதைக் கூறும் இப்பாடல்  வருமாறு. கிம்பளமும் அழகு என்ற சொல்லில் வைக்கப்பட்டுள்ளது.

வெண்பா:

வேட்பாள ராய்நின்று வெற்றியே பெற்றிடின்

ஆட்பட வேண்டாமே அல்லற்கு  ----   தாட்பட்டு 

மாற்றுக் குழுதன்னைத் தாம்மருவ வேண்டாமே

ஆற்றுப்  படுமா  றழகு.



வேட்பாளர் -  தேர்தலில் நிற்பவர்

ஆட்பட -  ( அனுபவிக்க)

அல்லற்கு  -   அல்லலுக்கு.

தாட்பட்டு -   பிறர் காலில் விழுந்து

மாற்றுக் குழுதன்னை  -  வேறு அரசியல் கட்சிகளில் உள்ளோரிடம்

தாம் மருவ - போய்ச் சேர்ந்து உறுப்பினராகிட

ஆற்றுப் படுமாறு  -   முறையான அரசியலாளராக வழிச்செல்லும்படியாக

அழகு  -   நலங்கள் யாவும் ஏற்படும்.


இது இயல்பான  எதிர்பார்ப்புதான்.  ஆனால் அரசியல் வாழ்விலும் பொருளிழந்தோரும் இழிக்கப்பட்டோரும் கொலைப்பட்டாரும்கூட உண்டு.

அது வேறு விடையமாகும்.

வேட்பாளர் கண்ணீர் வடிப்பது எதற்கு என்பதை இப்பாடல் கூறுகிறது.

மக்கள் சேவையே நோக்கம் என்பார்கள்.  இல்லை,  வாழ்வின் அழகே நோக்கம்.

அதாவது வேட்பாளர் மக்களிடம் வேலை கேட்கிறார்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


சமிஞ்ஞை, சமிக்கை முதலிய சொற்கள்

 முன்னர் நாம் சைகை என்ற சொல்லை ஆய்ந்து கண்டுள்ளோம்.  இதனை நம் நேயர்கள்  வாசித்து இன்புற்றுள்ளனர்.  செய் என்ற சொல் சை என்று திரிதலைப் பற்றி முன்னர் விளக்கியுள்ளோம்.   தொடர்புடைய இடுக்கைகள் இங்குக் கிடைக்கின்றன:

1.  சைகை,   சைதன்னியம்  :  

https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_23.html

2. சைவ உணவு  :

https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_1.html

இவற்றுள்  செய் என்ற சொல்தான்  சை என்று திரிந்தது என்பது தெளிவிக்கப்பட்டது.

செய் என்ற சொல் விளைநிலம், விளைபொருள் என்ற பொருளில் வருவதுண்டு.   எடுத்துக்காட்டு:  நன்செய்,  புன்செய்.  விளைவித்தல் என்பது மனிதனின் செயல்பாடு ஆதலின்,  செய் என்ற சொல் இவ்வாறு சொற்களை உண்டாக்கியது  நாம் உணர்வதற்கு எளிதானது ஆகும்.  செய்கை எனற்பாலது  சைகை என்று மாறியதும்  எளிமையானதே ஆம்.

ஆயினும் சமிக்கை என்பது செய் என்ற சொல்லினின்று தோன்றவில்லை. ஆயினும்  செய்கையைக் குறித்து எழுந்ததே ஆகும். தாம் பிறருக்குச் செய்கையால் இடும் குறியே சமிக்கை ஆகும்.  அதை இவ்வாறு உணரலாம்:

தம் இடுகை >  தம்மிடுகை 

தகரம்  சகரமாய் மாறவல்லது.   இவ்வாறு மாறுதல் பல இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு:  தனி >  சனி. ( தனித்தன்மை வாய்ந்த கிரகம்).  தங்கு> சங்கு.  ( உள் தங்கி வாழும் உயிர்).

வதி ( இடத்தில் வாழ்தல்) >  வசி(த்தல்).

மனத்துட் பதிவு:

பதி > வதி > வசி >  வசியம்.

எனவே:

தம்மி(டு)கை >  ச(ம்)மிக்கை.

வல்லொலியாகிய டு போன்றவை மறையும்.

பீடுமன் >  பீமன் > வீமன்.  ( பீடுடைய மன்னன்).

பீமன் > பீமா.

சம்மிகை என்ற பாலது  சமிக்கை என்று வலித்தது.

இதன் திரிபு:   சமிஞ்ஞை.  இது சமிக்ஞை என்றும் எழுதுவதுண்டு.

சைக்கினை என்பதும் உண்டு.  இது குறுகி சைன்னை என்றுமாம்.

அறிக.  மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.