வியாழன், 26 நவம்பர், 2020

தனிமையில் கிடந்து இறந்தவர்கள்

என்பொடு தோலுமாய் இளைத்த உடம்பினர்

எண்பது போல்பலர் எண்ணிடு அகவையர்

பண்புடை யவர்கள் பாவம் ஒற்றையாய்

நண்பர் உறவினர் யாருமி  லாதவர்


நகர்களில் நாட்களைக் கழித்தோர் இவர்கள்

பகர்வதும் இலர்தம் துயர்தரு தனிமை;

புகர்மலி மானிட வாழ்க்கை! ஒருநாள்

தகர்ந்துயிர் நமற்குத் தந்துல ககன்றனர்.


போயபின் ஆரும்  அறியாப் புகுதியாய்

மாயவிவ் வாழ்வில் மயங்குல கசங்காச்

சாயுறு கூடாய்க் கிடந்தனர், சாவினை

வாய்கொடு சொல்வார் வையகத் தில்லை.   


தனிமைத் துன்பம் முடிவிலும் தொடர்வது;

மனிதன் சாவில் இணைந்திடு பின்பும்

புனிதமும் புனலா டுதலும் வேண்டுமே;

இனையதோர் காப்பும் இனிவரல் நாடுவம்.


உள்ளார் தனியெனில் உள்ளவர்  கூடி

மெள்ள அவரை மன்பதை புகுத்தித்

தள்ளா அணைப்பினில் தகையுறக் கூட்டிப்

பிள்ளைகள் போலும் பிழையற நின்றும்


இறுதிக் கருமமும் இனிதாய்ப்

பெறுகபின் செல்கெனப் பீடுறச் செய்வமே.  


பகர்வதும் -  சொல்வதும்

இலர் - இல்லை 

நமன் - எமன். நமற்கு - எமனுக்கு.

புகர்மலி -  துன்பம் நிறைந்த;

புகுதி -   நிகழ்வு, சம்பவம்.

அசங்கா(த) - (இரங்கி) அசையாத 

சாயுறு கூடாய் - இறந்த (சடலமாய்)

வாய்கொடு சொல்வார் - அறிவிப்பவர்கள்

தனிமைத் துன்பம் - ஆதரவின்றி வாழும் இடர்

முடிவிலும் -  இறந்துவிட்ட பின்னரும்

புனிதமும் புனலாடுதலும், - சடங்குகளும் பிணம் குளிப்பாட்டுவதும்

இனையதோர் காப்பு - இத்தகைய ஒரு காவலுடைய சூழல்

நாடுவம் -  நாடுவோம்.

உள்ளார் தனியெனில் உள்ளவர் கூடி - தனியாக வாழ்ந்து வருந்துகிறவர்களைப் பக்கத்தில் வாழ்பவர்க்ள் ஒன்றுசேர்ந்து;

மன்பதை புகுத்தி -  சமூகத்துக்குள் கொண்டுவந்து;

தள்ளா அணைப்பினில் - (இத்தகு தனியவர்களை) விலக்கி விடாமல் உதவிக் கரம்   நீட் டி      உடன் சேர்ந்து;

பிள்ளைகள் போலும் - ( பிள்ளைகுட்டி இல்லாதவர்கள் ஆகையால்)

நாமே பிள்ளைகள் போலச் சுற்றி நின்று;

இறுதிக் கருமம் -  இறுதிக் கடன்களை [முடித்து அவர்

உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வோம்.]


இதுபற்றிய ஒரு துன்பச் செய்தியைக் காண

கீழ்க்கண்ட தொடர்பினைச் சொடுக்கவும்: 


https://theindependent.sg/remains-of-elderly-woman-dog-found-in-condo-unit-over-a-year-after-she-was-last-seen/


எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும். 

விந்தை

 இச்சொல்லைப் பார்ப்போம்.

இது ஓர் இடைக்குறை சொல். எனினும் அதன் மூலச்சொல் வழக்கிறந்துவிட்டது. ஒரு செடியில் பூத்தது, உலரத் தொடங்கி விழுந்து மறைந்தபின், புதிய மலர்கள் தோன்றிப் பார்ப்போரை மகிழ்விக்கின்றன. மொழியின் ஒரு நீண்ட உலக ஓட்டத்தில் சொற்களும் இவ்வாறே மறைந்துவிடுகின்றன. இயற்கை ஒலியைத் தன் செயற்கை முயற்சியினால் அமைக்கும் சொற்களும் விதிவிலக்கு ஆகமாட்டா. ஆங்கிலோ செக்சன் மொழியிலிருந்த எத்தனையோ சொற்கள் இன்று வழக்கில் இல்லை.  " மர்ட்ரம்" என்பது ஒரு தண்டத்தின் ( அபராதத்தின்) பெயர். ஒருமனிதனைக் கொன்றுவிட்டால் அரசன் அதைக் கொன்றவன்மேல் விதித்தான். அதிலிருந்து கொலை என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் " மர்டர்" வந்தது.  ஆனால் இற்றை ஆங்கில மொழியில் " மர்ட்ரம்" இல்லை. அஃது ஒரு வரலாற்றுச் சொல் ஆகிவிட்டது. அறிஞர்தம் வரலாற்று ஆய்வில் இது வெளிப்படுகிறது.

விந்தை என்ற சொல்லின் மூலச்சொல் வியந்தை என்பது.  இந்த வியந்தை என்ற சொல்லின் ஓர் எழுத்து அல்லது ஒலி மறைந்தது.  அது யகரம்தான்.  வியப்புக்குரிய ஒன்றுதான் விந்தை.  வியன் > வியந்தை > விந்தை ஆயிற்று. விந்தை என்பதற்கும் விந்து என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. இதை அறியாமல் விந்தை என்ற சொல்லைப் பகுதி, விகுதி என்று பிரித்தால் அது  முட்டாள்தனம் ஆகிவிடும். இத்தகைய சொற்களைத்  தொல்காப்பியப் பேராசான் திரிசொல் என்று வகைப்படுத்தினார்.

இடுக்கண் > இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்றானதுபோலவே. இக்கட்டு என்பது திரிசொல் ஆதலின் அதில் பகுதி அல்லது முதனிலை அதன் உருவில் அங்கு இல்லை.

ஆங்கிலம் "வொண்டர்" என்பது ஜெர்மானிய " wundran" என்பதிலிருந்து அறியப்பட்டாலும்,  அதற்கப்பால் எங்கிருந்து வந்ததென்பது மேலை ஆய்வாளர்க்கு எட்டவில்லை. அவர்கள் சுமேரிய, எலு, போனிசிய மொழிகளைத் தேடிப்பார்க்கவில்லை. சுமேரியத் தமிழ்த் தொடர்புகளை அறிந்திருக்கவில்லை. (மயில்)  தோகை என்னும் தமிழ் யூதத்தொன்மத்தில் உள்ளதை டாக்டர் கால்டுவல் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது.  பண்டை மயில்தோகை நண்ணிலக் கிழக்குக்கு ( மிடல் ஈஸ்ட் நாடுகட்கு) தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியானதை இது காட்டுகிறது. நாம் சொல்வதன் உள்ளுறைவு யாதெனின்  விந்தை - வொண்டர் ஒலியணுக்கம் ஆகும்.

ஆங்கில மற்றும் இந்தோ ஐரோப்பியம் தமிழ்ச் சொற்களின் ஒப்பீடு ஏறத்தாழ இருபது ஆண்டுகளின்முன் இணையத்தில் வெளியிடப்பட்டது.  அது இப்போது கிட்டவில்லை. இணையப் பதிவின் இருப்புக்கும் பணம் செலவாகிறது. அச்சிட்டு வெளியிட்டனரா என்பதை அறியோம்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் - பின்பு கவனம்.


கௌபீனம் என்ற கோவணம்.

கோவணத்தைக் கௌபீனம் என்றும் சொல்வதுண்டு. இடைச்சுற்றுக் கயிற்றில் ( அரைஞாண் ) இருபக்கலும்  கோத்து அணியப்படுவதால் அது கோவணம் எனப்பட்டது.  

கோத்தல் என்பது வினைச்சொல்.

கோ+ வ் + அணம் = கோவணம்.  வ் என்பது உடம்படுத்தும் இடைநிலை. அணம் என்பது விகுதி அல்லது இறுதிநிலை. அணி+ அம் என்பதும் அணம் ஆகும்.

சொல்லை மிகுத்து இன்னொரு சொல் படைப்பதற்கு உதவுவது விகுதி.  மிகுதி என்பது விகுதி என்றானது.  மிஞ்சு என்பது விஞ்சு ஆனதுபோலுமே இது.

கோவு + அணம் = கோவணம் எனினும் இழுக்காது.

இனிக் கௌபீனம் என்பது.

இவ்வரையுடை,  முன்னே கோத்துப் பின்பக்கமும் செல்வதால்:

கோ > கௌ.

பின்னு + அம் =  பின்+ அம் = பீனம்.

பீனம் என்பது பின்னுதல் என்ற வினைவடிவம் (பின்) முதனிலை பீன் என்று நீண்டு, அம் விகுதி பெற்று பீனம் ஆனது.

கோபீனம் > கௌபீனம்.

காக்கும் பின்னுகை என்ற பொருளில் கா+பீனம் > காபீனம்> காவுபீனம்> கௌபீனம் எனினும் இழுக்காது. காபீனம் - வினைத்தொகை.  காவுபீனம் இருதொழிற்பெயரொட்டு.