புதன், 24 ஜூன், 2020

இலடாக்கு (Ladakh)


இங்குள்ள தாளிகை வலைத்தளத்துக்குச் சென்று, அதில் உள்ள படத்தைப் பார்த்தபின் கவிதையையும் பிறவற்றையும் வாசிக்கவும்:

https://www.hindustantimes.com/india-news/india-china-hold-diplomatic-meeting-on-border-stand-off-in-ladakh/story-wrnl1LQZ1UTOdItWRJrMvL.html?utm_source=browser_notifications&utm_medium=Browser&utm_campaign=notification


நிலவின் படமென உலவுமென்  கண்கள்;
கண்களை உறுத்தும் கருமுகப் பாறை;
பாறையின் பாங்கினில் பயிர்களோ இலவே;
இலர்சிலர் உளர்; இல்  அடாஆக்கு மலையே.


அந்தாதிப் பாடல்.

உரை:

என் கண்கள் இது நிலவின் படமோ என்று
அப்படத்தில் மேல் உலாவுகின்றன;
அந்தக் கருமுகம் காட்டும் பாறைகள் கண்களை
உறுத்துகின்றன.
எந்தப் பயிரும் அங்கு முளைக்கவில்லை;
சில ஏழைகள் பக்கத்தில் உள்ளனர்.

இது இலாடாக்கு மலை.

இல் = வீடுகள்' (வீடுகளுக்கு)*
அடா = அடுத்துக்கூட வர இயலாமல்;
( கொடிதானமுறையில் )*
ஆக்கு = இயற்கை ஆக்கிய; 
மலை.

*இப்படி உரைப்பினும் ஆகும்.

இல்+ அடா+ஆக்கு = இலாடாக்கு!!.
(பயன்பாடற்ற நிலப்பகுதி
என்பது.)

எ-டு:

அடு > அடி. (தொழிற்பெயர்).  அடுத்துவரலால் அடி என்ப.

மெய்ப்பு பின்.

திங்கள், 22 ஜூன், 2020

இன்றைய கொரனா நிலைமை


கொரனாக் கொல்நோய்,  பரவும் முடிமுகி!
வருவார் வாய்ப்புகள்  கருதுக குன்றுதல் ;
தெருவிற் பனையும் அருகிய நிலையே!
முருகிழந் ததுவே முதுபே ருலகே.


உரை:


கொரனாக் கொல்நோய்  -  கொரனா என்னும்
உயிர்க்கொல்லி நோய்;

பரவும் முடிமுகி! -  இது தொற்றிப் பலரையும்
பீடிக்கும்,  மணிமுடி வடிவில் தெரிவதாம் நோய்
நுண்மி;

வருவார் வாய்ப்புகள்  கருதுக குன்றுதல்  - 
கடைகள் பொதுமக்கள் வருமிடங்கள் எல்லா
வற்றிலும் வரத்துக் குறைந்துவிட்டது; தொழில்
வாய்ப்புகளும் குறைந்துவிட்டன;


தெரு   விற்பனையும் அருகிய நிலையே! - 
தெருவில் இருக்கும் கடைகள் கூட மிகக்
குறைந்துவிட்டன, இதுவே நிலை.

தெரு விற்பனை;  தெருவிற்  பனை என்று
ஓசைப்பொருட்டு வகையுளி.
தெருவில் வளர் பனைமரத்தைக் குறித்திலது.


முருகிழந் ததுவே முதுபே ருலகே. - இவ்வாறு
இவ் வயதாகிவிட்ட பெரிய  உலகம் தன் அழகை
இழந்துவிட்டதே!

என்றவாறு.





முடி - மணிமுடி,  முகி - முக உருவம். (கொரனா)
முருகு - அழகு. இதை வேறு பாடல்களில் மகுடமுகி
என்றும் குறித்துள்ளேம்.


நிலைமை விளக்கும் கவிதை.

திருத்தங்கள்:
இதில் கொரனா என்னும் முடிமுகி நோயினால்
என்பதை "கொரனாக் கொல்நோய்,  பரவும் முடிமுகி!"
என்றும்  "வருவார் குன்றினர் வாய்ப்புகள் குன்றின"
 என்பதை வருவார் வாய்ப்புகள் கருதுக  குன்றுதல் 
என்றும் மாற்றியுள்ளோம். 

பரவும் முடிமுகியையே கொரனா கொல்நோய் என்று
உலகம் சொல்கிறது என்பது முதல்வரி..


எதுகைகள்:

கொர,  பர,  வரு,  கரு,
தெரு,  அரு,  முரு.

மோனைகள்

கொரனாக் கொல்நோய்!
வருவார் வாய்ப்புகள்  
முருகிழந் ...முதுபே 

என்பவற்றில் மோனைகளைக் கண்டுகொள்க.

மெய்ப்பு பின்.


அதிகாரம் (நூற்பிரிவு)

அதிகாரம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.
இங்கு நாம் கவனிப்பது நூலதிகாரம். அதாவது நூலில்
பிரிவுகளாக வரும் அதிகாரங்கள். முன் இதை 
அதி + காரம் என்று பிரித்துப் பொருள்கூறுவதுண்டு.


அத்தியாயம் என்ற சொல்லுக்கு இங்குப் பழைய 
இடுகைகள் தந்துள்ள பொருளைச் சார்ந்தே இதை
விளக்கப் புகுவோம்.


அற்று > அத்து. இது பேச்சு வழக்கிலும் இயல்பான
திரிபாகும்.


இகு இது இங்கு என்பதன் ஙகர ஒற்று நீங்கிய
இடைக்குறைச் சொல்.  எடுத்துக்
காட்டு  இன்னொன்று: 

ஓங்கு > ஓகு > ஓகம் என்பது போலுமே.

ஆரம் : இது ஆர்தல் என்னும் வினையில் அம் 
சேர்ந்த தொழிற்பெயர். நிறைவு என்பது 
இச்சொல்லின் பொருள். இச்சொல்லுக்கு
வேறு பொருட்களும் உள. சூழ்தல் அல்லது
சுற்றி இருத்தலும்  ஆகும்.


அத்து = முடிந்து,
இகு = இதே இடத்தில் அல்லது நூலில்
ஆரம் = நிறைவாகுவது.


அத்தியாயம் ஒவ்வொன்றும் முடிந்து முடிந்து 
தொடங்கித் தொடங்கி  நிறைவாகுவதுதான். ஆதலால் 
பொருள் பொருத்தமாக உள்ளது.


அத்து இகு ஆரம் > அத்திகாரம் , மீண்டும்
இடைக்குறைந்து அதிகாரம் ஆகிறது.

தமிழ்மொழி முழுவதும் இவ்வாறு சொற்களைத்
தொகுத்தலும் குறைத்தலும் மிகுதி. விழிப்ப
நோக்கின் விரியும் அறிவு; புரியும் நிலைமை.

என்னில் -  எனில்,  தன்னில் - தனில்;
முக்கண்ணா போற்றி -  முக்கணா போற்றி.


அத்தியாயம் என்பதில் த் என்ற ஒற்று
வீழவில்லை. இதில் வீழ்ந்துள்ளது. இது
சொற்சுருக்குக்கும் இனிமைக்கும் ஆகும்.


சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்
என்பதில் த் என்னும் ஒற்று வீழ்ந்துள்ளது. 
லகரம் ரகரம் ஆயிற்று. இவை பல 
சொற்களில் காண்புறும் நடைமுறைகளே.


தட்டச்சு:  சரிபார்க்கப்பட்டது. 23062020