செவ்வாய், 29 ஜனவரி, 2019

சிவப்பு விளக்கம்

வரலாற்றுக் காலத்துக்கு முந்தியிலிருந்து சிவப்பு என்பது ஓர் அடிப்படை நிறமாகத் திகழ்ந்துவருகிறது.  தமிழரிடை மட்டுமன்று பிற இன்ங்களிடமும் ஒரு பண்பாட்டுக் கூறாக இது நிலவுதல் காணலாம்.   திருமணம் முன்மையான சடங்காகக் கருதப்பட்டமையால்,  சீனா முதலான தேயங்களில் மணப்பெண் முழுமையாகச் சிவப்பினால் அலங்காரம் செய்யப்பட்டுக்  கூடி யிருப்போர்முன் கொண்டுவரப்படுகிறாள்.   அங்கு சிவப்பே மங்கல நிறமாகும்.  இதேபோன்று ஏனைப் பண்பாட்டு நாடுகளிலும் சிவப்பு கோலோச்சியுள்ளது.  
 நாம் சிவப்பு(குங்கும)ப்பொட்டு இடுவதன் காரணமும் மங்கலம் எனற் பொருட்டே. கும் என்பது ஒரு தமிழ் அடிக்சொல். இதற்குச் சேர்த்துவைத்தல் என்று பொருள்.  இதை அறிந்துகொள்ள குமித்தல் என்ற சொல்லைப் பாருங்கள். கும்> குமி. நெல்லைக் குமித்து வைத்தார்கள் என்பார். குமி பின் குவி என்று திரிந்தது, மகர வகரப் போலி.
 மிஞ்சு > விஞ்சு,  மகர வகரப் போலி. நாம் குங்குமம்  இடுவது இந்தக் கூட்டுறவைக் குறிப்பதே. ஆண் பெண் இணைந்த இல்லற வாழ்க்கை.  கும் என்ற அடிச்சொல் இரட்டி வந்து அம் விகுதி பெற்றது: கும்+கும்+அம் = குங்குமம். கும்முதல்:  குமுக்குதல்;  கும்> கும்மி;  கும்> கும்மாளம். இவை இணைந்து செய்தல் அடிப்படைக் கருத்து. 
நாளடைவில் சில குவிதல் = கூடுதற் கருத்தில் சற்று நீங்கி நிற்கலாம். பிற்காலத்து கும் என்பது சிவப்பு என்ற பொருள்டைவு கொண்டது. குமரி என்பதும் திரட்சிக்கருத்து ஆகும்.  இளமையில் உடல் திரட்சியே பெரும்பான்மை.
முழுமுதல் கடவுளான சிவனை,  எடுத்துரைக்கும் நிறம் சிவப்பே ஆகும்.  சொல்லமைப்பும் சிவ> சிவப்பு;   சிவ> சிவ+அம் =  சிவம் என்றிருத்தலை அறியலாம். செங்கதிரோன் என்பதே சூரியனுக்குத் தமிழில் பெயர். வெண்கதிரெனற்பாலது நிலவு குறிப்பதே.  பெண்ணுக்கும் கவிகள் சிறப்பாக ஓதுவன செவ்விதழும் புன்சிரிப்புமாகும்.   
சிவனிலிருந்து தோன்றிய முருகப் பெருமானும் செவ்வேள் என்றே தமிழ் நூல்கள் ஓதுகின்றன. தீமை ஏதுமிலாத அடிகள் செவ்வடிகள்:  இது செ+ அடி =  சே+அடி =  சேவடி ஆகிறது.  செக்கல் செக்கம் என்பனவும் செம்மை நிறமே.   செய்ய தாமரை என்பதென்ன?
நீரால் கழுவப்படும் மலர் கழுமலர்.   இது பின் தன் ழுகரத்தை இழந்து கமலம் என்று ஆனது.  இது அயற்றிரிபில் கமல என்று மாறிற்று;.  இத்தகைய சொற்றிரிபுகள் தமிழின் வளத்தைக் காட்டுகின்றன.
செந்தமிழ் என்பது பிறமொழி விரவாத நல்ல தமிழ்.  செம்மை நிறம் எதைக் குறிக்கிறது கண்டீரோ?  செந்தமிழியற்கை சிவணிய நிலம் என்கிறார் பனம்பாரனார்.  சிவணுதல் என்றால் பொருந்துதல்;  அதுவும் செம்மையாகப் பொருந்தி நிற்றல்.  சி:   செம்மை;  அண் =  அண்மி நிற்றல்.  சி+ அண் =  சிவண் >  சிவணுதல்.   சிறப்பாகப் பொருந்துதல் என்பது சொல்லமைப்புப் பொருள்.
இவற்றையும் படித்து சிவப்பைப் பற்றிய புரிதல்களை விரித்துக்கொள்ளுங்கள்:

மரங்கள் ஆடியது நாட்டியமா உடல்பயிற்சியா?

ஒளிமங்கிய மாலையிலே களிபொங்கிய ஆட்டம்
ஒவ்வொன்றாய் இலைகொம்பு கிளையெல்லாம் கூட்டும்
வளியெங்கும் புகுந்தோடி வழைச்சுறுத்தும்,   சீன
வளைநீரில் மேலெழுந்து வந்தடைந்த  வற்கே;

கலைகளிலே நாட்டியமோ கிளைகளுமே மேவிக்
காட்சியிதைப் படைத்தனவே கைகால்கள் போல
இலைகிளைகள் அசைவும்தான் மரங்களுமே செய்யும்
ஏற்றதொரு உடல்பயிற்சி எனப்புகலல் சாலும்.

அசைவில்லா மரங்களவை உடற்பயிற்சி  கொள்ளும்
அணியில்லை என்பதெலாம் அறியாரின் சொல்லோ?
இசைவெல்லும் மெல்லொலியும் எழுகின்ற தம்மா
இயற்கையழ கிதனையான் என்னென்று சொல்வேன்.


அரும்பொருள்

களி -  மகிழ்வு
வழைச்சு -  புதுமை  fresh
"வழைச்சற விளைந்த" (பெரும்பாணாற்றுப்படை 280)
வழைச்சுற  ( எதிர்ச்சொல்)  வழைச்சற.
கூட்டும் -  நடத்தும்
சீன வளைநீர் -(   தென்)   சீனக் கடல்
வற்கு -   அழகு   (வல்+கு,  வன்மையான அழகு)
ஒரு  -  கவிதையில் ஓர்  எனற்பாலது
ஒரு என்று வரும்.
புகலல் -  சொல்லுதல்.
அணி -  வகை, பிரிவு

வல் + அழகு = வல்லழகு : இதில் லழ என்பது குறைய வல்கு என்றாகும்.
வல் கு என்பவை புணர்த்த வற்கு என்பது இறுதியாம்.  இது இடைக்குறைச் சொல்  ஆகும்.

நீரைக் கழுவிய படி (  தொட்டுக்கொண்டு)  மலர்ந்து நிற்பது  " கழுமலர்",  செந்தாமரை என்பது  செங்கழுமலர் அல்லது செங்கழுநீர்மலர்.  கழுமலர் என்பதில் ழு  மற்றும் ர் என்பவை நீங்க கமல என்றாகும்.  இடைக்குறையும் கடைக்குறையுமான சொல்.  இது பின் அம் விகுதி பெற்றுக் கமலம் ஆகி  தமிழன்று என்று குறிக்கப்பட்டது,  இதன் இடைக்குறை அமைப்பை அறியாமல்தான்.  கமலம் என்பது ஒருவாறு தனிச்சொல்லாக ஏற்றமுற்றுவிட்டது.

தாமரை என்பதும்  நீருடன் தாழ்ந்து அதை மருவி நிற்கும் மலர் எனப்பொருள் தரும் சொல்.  தா :  தாழ் என்பதன் கடைக்குறை.  மருவு என்பதில்  மரு + ஐ என்று சேர்க்க மரை ஆகிறது.  ஆக :   தாமரை.


திங்கள், 28 ஜனவரி, 2019

வேற்றுமை வித்தியாசமான கதை

வே என்ற எழுத்துக்கும் ( வேகாரம் )   வி என்ற எழுத்துக்கும்  (  விகரம் )  உள்ள ஓர் ஒலித்தொடர்பினை இப்போது கண்டு இன்புறுவோம்.

வேதம் என்ற சொல் வித் என்னும் சொல்  லடிப்படையில் தோன்றியதென்று  ஏறத்தாழ சில நூற்றாண்டுகட்கு முன் சொல்லியிருந்தனர்.  அதனை இன்றும் பலர் மகிழ்வுடன் சுட்டிக்காட்டுவதுண்டு.

வித் >  வேத்    :  வேத் + அம் = வேதம்  என்றனர்.

இவர்கள் இப்படிக் கூறக் காரணம் நாம் இங்குக் கூறியவாறு இவ்வொலிகள் திரிதொடர்புடையன என்பதே.

வேறு,  வேற்றுமை என்ற சொற்கள் தமிழில் உள்ளன.

அதே பொருளுடைய இன்னொரு சொல்:  வித்தியாசம் என்பது.

இங்கும்  வே > வி தொடர்பு நல்லபடியாகப் பளிச்சிடுகின்றது.  ஆதலின் திரிபு வகையை ஒரு விதி அல்லது முறைப்படியானது என்று சொல்வது சரியானதே.

திரிபுமுறை சரி என்றாலும் அடிச்சொல்லாகத் தரப்பட்டது சரிதானா என்பது இன்னொரு கேள்வி.  அதற்குள் நாம் இப்போது செல்லவில்லை.

வே < வி;  வே > வி. இரண்டும் முறைப்படியானவை.

வேறு > வேற்று >  வேத்து > வித்து

வேறு என்பது சொல்லின் உரு வேற்று என்று இரட்டிக்கும்: அதை வேற்றுமை என்ற சொல்லில் கண்டறிவது ஒன்றும்  கடினமில்லை.

வேற்று என்பது வேத்து என்று ஊர்ப்பேச்சில் திரியும்.  வேற்று ஆள் என்னாமல் வேத்தாள் என்று பேச்சில் சொல்வதால் இது தெரியக்கூடியதுதான். இதை அறியவும் பெரிய மூளை வேண்டியதில்லை.

வேத்து என்பது வித்து என்று மாறுவது  மேற்சொன்ன விதிமுறைகளுக்குள் அடங்கிய ஒன்றுதான்.  அதிலும் நமக்கு  ஒரு கருத்துவேற்றுமை இல்லை.

வித்தியாசம் என்பதில்   இ - யாசம் என்பவற்றைக் கவனிப்போம்.

ஆயது = ஆனது.

ஆய+  அம் =  ஆயம்   ( ஆனது )

வித்தி  என்ற முதற்படிச் சொல்பகுதியில்  வித்து என்பது வித்தி என்று மாறியது.

வித்து ஆயம் என்றால் நன்றாக இல்லை.   எச்சச் சொற்களில் வருவதுபோல அதை வித்தி  ஆயம் என்பது நன்று.   விரும்பு என்ற சொல் எச்சமாகும்போது விரும்பி என்பதுபோலும்   சொல்லு என்பது சொல்லி என்று வருவது போலும் ஓர் அமைப்பு இது.   ஆய என்பது வினைச்சார்பான அமைப்பு ஆதலின் இகரம்
பொருந்துகிறது.  வித்தி  ஆய  என்பது மிக்க நன்று.

இனி  யகரம்  சகரமாகும்.  எடுத்துக்காட்டு:  நேயம் >   நேசம்;  வாயில் > வாசல்.

இங்கு  வித்தி ஆய என்பது வித்தி ஆச என்று மாறுகிறது. அப்புறம் இவற்றைப் புணர்த்தினால் வித்தியாச என்றாகிறது.   அம் விகுதி சேர்த்தால்  வித்தியாசம் ஆகிறது.



திரிபு விதிகள் முழுமையாகப் பின்பற்றப் பட்டுள்ளன என்பதைக் கண்டு மகிழலாம். இதை முறையாக விளக்கியுள்ளோம்.


எழுத்துப்பிழைத் திருத்தம் பின்.