வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சால நித்தியமான சானித்திய நிலை: பொருள்

இன்று அடிக்கடி வழங்காத ஒரு சொல்லை அறிந்து இன்புறுவோம்.  எப்போதும் நம் புழக்கத்திலும் பழக்கத்திலும் உள்ள சொற்களை மட்டும் அறிந்துகொண்டு உறக்கம் மேற்கொள்வதிலிருந்து இது சற்று வேறுபட்டுக் கேட்பாரை மகிழ்வுறுத்தும் என்று எண்ணுகிறோம்.

நாம் தெரிந்தெடுத்துள்ள சொல்:  சானித்தியம் என்பது.  இது செந்தமிழ்போல் இல்லை அன்றோ?

இதில் இரண்டு துண்டுச் சொற்கள் உள்ளன.  இவற்றுள் இறுதித் துண்டினைப் பார்ப்போம்.

இறுதி:  நித்தியம் என்பது.  ஒன்றை நித்தியமென்றால் அது என்றுமுள்ளது என்று பொருள்படும்.

ஒன்று உள்ளது என்றால் உள்ளிருக்கிறது என்பதே அதன் பருப்பொருள். ஒரு பொருளாய் அகத்திருந்தால் அங்கு உள்ளே இருக்கிறது என்போம்.  சுருக்கமாக, அது உள்ளது  என்றும் சொல்வோம்.  அது உண்டு என்பதும் வழக்காகும்.

இப்போது உள்ளது என்பதில் " உள்" என்பதன் பொருள் வலிவற்று நிற்கிறது. ஒரு கடையில் போய் அரிசி உள்ளதா என்றால் :  கடைக்காரனும் உள்ளது என்றால்,  அது உள்ளே எங்கோ இல்லாமல் வெளியிலே ஒரு பெரும் பாத்திரத்தில் இருந்தால்,  " என்ன உள்ளது என்கிறாய், அது வெளியதாய் இருக்கிறதே!"  என்றால்  பொருட்கேடு விளைந்ததுபோல் தோன்றுமே.  உள்ளது என்று நாம் சொல்லும் ஒரு பொருள் உள்ளே இல்லாமல் வெளியிலும் இருக்கலாம்.  ஆகவே உள் எனில் இருக்கின்றது என்றே பொருள்.  இஃது இவ்வாறாக  'என்றும் உள்ளது' என்பதற்கு என்றும் உள்ளிருப்பது என்பது பொருளன்று.

அகடுற யார்மாட்டும் நில்லாது ---- என்றால் நித்தியமானது அன்று,   நிலையானது அன்று என்று பொருள் கூறுவோம்.  நித்தியம் என்றால் நிற்பது என்பது.  நிற்காமல் வீழ்வது, நிற்காமல் ஓடிப்போவது, நிற்காமல் கரைந்துவிடுவது, நிற்கும்போதே ஆவியாகிவிடுவது ----- என்பவெல்லாம் நித்தியம் அற்றவை  ஆகலாம். நிற்கவேண்டும்; அதுவே நித்தியம்.  நில் > நி > நித்து> நித்தியம்  அல்லது நில் > நிற்று > நிற்றியம் > நித்தியம்.  எப்படியானாலும் நிற்பதே நித்தியம். ஓடிப்போவதும் கரைந்துவிடுவதும் சாம்பலாவதும் நித்தியமன்று.

நித்தியம் என்றால் நிற்பது; நித்தியம் என்றால் நிலையானது,

நிலை என்றாலும் நில் என்ற அதே அடியிலிருந்தே சொல் வருகிறது.

நிற்றல் > நித்தல்;  நிற்றம் >  நித்தம்.

ற்ற எனற் பாலதை த்த என்று மாற்றி அழகு கண்டுள்ளனர்,  எனினும் இவையாவும் கிருதப்புதுமை ஒன்றையும் வெளிக்கொணரவில்லை,

நித்தியம் என்றபடி சொல்லமைக்காமல்:  உள் என்பதிலிருந்து தொடங்கி,  உள்> உள்ளி > உள்ளியம் என்றும் அமைத்திருக்கலாம் எனினும் அமைக்கவில்லை. இரு என்பதிலிருந்து தொடங்கி  இரு > இருத்து > இருத்தியம் என்று வந்திருக்கலாம். வரவில்லை. அமைவுறாதன வேறு சுற்றுச்சார்புகளில் எழும் புதிய கருத்துகளுக்குச் சொல்லமைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்,

நித்தியமென்ற சொல்லினழகும் அமைப்பும் அறிந்தின்புற்ற நாம், முழுச்சொல்லையும் அறியத் தயாராய்விட்டோம்.

தயார் என்றாலே தயக்கத்தின் நிறைநிலை என்று பொருள்.  ஒரு படை உடனே போருக்குள் இறங்கிவிடாமல் தயக்க நிறைநிலையில் நின்றிருத்தலே தாயார் நிலை. படைகளும் தமிழரசும் தொலைந்த பின், தயார் என்ற சொல்லிருந்தது; ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று புரியாத நிலையில் தயார் தமிழா என்று ஐயம் ஏற்பட்டுவிட்டது.  தய:  தயக்கம் அல்லது தயங்கிடுதல்;   ஆர்:  நிறைவு;  ஆர்தல் -  நிறைதலே.  தய+ ஆர் . =தயார்.  இது உருதுமில்லை; கிருதுமில்லை,  இந்தோனேசியாவின் பாலிம்பாங்க்  வரை படைநடத்தி, சிங்கப்பூருக்குள்ளும் புகுந்தான், நீல உத்தம் சோழன் என்னும் இராஜ ராஜனின் தளபதி.  அவன் படைகட்கு உத்தரவுகளை உரக்கக் கூவினான்.  எங்கே அவன் பயன்படுத்திய சொற்களெல்லாம்?

யாம் இப்போது தயார்.

நித்தம் என்பதறிந்தோம்.  நித்தியம் என்பதுமறிந்தோம். இனிச் சானித்தியம் அறிவோம்.

சா+ நித்தியம் என்று பிரிப்போமானால் --- சாவு நித்தியம் என்று பொருள்பட்டுப்
பிழைக்கும் என்பதறிக.

சாலவும் நித்தியமானதே சால நித்தியம்; சால் நித்தியம்:  > சானித்தியம்.
சாலுதல்: நிறைதல் சான்றோர்: நிறைந்தோர். 

இது சான்னித்தியம் என்றும் எழுதப்படுவதுண்டு.  தெய்வத்தின்முன்  என்பது இதன் வழக்குப் பொருளாகும்.  சொல்லமைப்புப் பொருள்: மிகுந்த நிறைவு அடைந்த நிலை என்பதாகும். திருமுன் என்பதும் பொருள்.

தெய்வம் தோன்றி நிறைவு தந்த நிலை. மாறாத இன்ப நிலை.

புதன், 1 ஆகஸ்ட், 2018

சொல்லுங்கண்ணே........

சொல்லுங்கண்ணே :

இந்தத் தொடரைப் பிரித்தால் இப்படி வரும்:

சொல்லும் + கண்ணே :    இது கண்ணே சொல்லுவாய் என்று பொருள் தரும்.

சொல்லுங்க  + அண்ணே :   இது அண்ணனாகிய நீர் சொல்லுவீராக என்று பொருள் தரும்.

காள மேகப் புலவர் என்ற பெயரில் " காள "  என்பது கருப்பு என்று பொருள் தரும்.  வேறு சொற்களில் சொல்வதானால்  கருமேகப் புலவர்;  புலவர் கார்முகிலார் எனலாம்.  15ம்  நுற்றாண்டினர்  என்று கருதப்படுபவர். கருமேகம் மழை தருவது.  இவர் அதுபோல் பாக்கள் தந்தவர் . இயற்பெயரா என்று தெரியவில்லை .

சொற்களையும் தொடர்களையும் பிரித்துப் பல்வேறு பொருள் போதரும்படி பாடுவது இவரது சிறப்பாம்.

சில+ எடு +ஐ =  சிலேடை :   ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் எடுத்தல்.  சில = ஒன்றின் மிக்கவை.

பெண்கள் அடிமைப்பட்டதும் விடுதலையும்.

பெண்ணாதிக்கம் அல்லது பெண்வழி  நிறுவாகம் நடப்பிலிருந்தது என்பதைத் தமிழ்மொழி காட்டுகிறது என்பதை முன்னரே நாம் குறித்திருந்தோம். இதைத் தெளிவாக ஆள்  என்னும் ஆட்சி குறிக்கும் சொல் விகுதியாகிப் பெண்பாலைக் குறிப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

பெண்ணடிமை மிக்குவந்த பிற்காலத்திலும் பெண்கள் தெய்வங்களாக்கப் பட்டுச் சென்றுவிட்ட அவர்களின் ஆட்சி ஒருவாறு நினைவு கூரப்பட்டது காண்கிறோம்.  ஆதிபராசக்தி, பராசக்தி, பல்வேறு தெய்வத் துணைவிகள்  ஆகியோர்  இதையே வலியுறுத்துகின்றனர்.  பெண் இல்லாமல் ஆண் தெய்வங்களும் இயங்கா என்பது தத்துவம் ஆகும்,

இதன் தொடர்பில் நீங்கள் படிக்கவேண்டிய  இடுகை:


இலங்கைப் புலவர்களும் பெண்ணடிமையை  எதிர்த்துள்ளனர்.  ஞானப்பிரகாச அடிகளின் மாணவர் ஆசிரியர் பண்டித  சேகரம்பிள்ளையாரின் ஒரு குறள் வெண்பா: 

சாதிசமம்  அக்கொடுமை தானெண்ணார் பெண்ணடிமை
ஆதிப் புதியஉல கார்

என்பது அதுவாகும்,  இதுவும் அவர் வெளியிட்ட  மாத  இதழ்தோறும் குறிக்கப்பெற்றது. (1938).  பெண்கள் விடுதலைக்காகப் பலர் குரல் கொடுத்தனர்.

பெண்களை இழிவுபடுத்திய வரிகள் மனுவில்(  மனுசாத்திரத்தில் )  உள்ளன. இவை பிற்கால இடைச்செருகல்களாக இருக்கலாம். இடைச்செருகல்களுக்குத் தப்பிய பழைய நூல்கள் எவையும் உளவா என்பது ஐயத்துக்குரியதே ஆகும்.

பெண்ணை ஆணின் விலாவிலிருந்து கடவுள் படைத்ததாக விவிலிய நூல் கூறியிருப்பினும்  வரலாற்றில் பெண்கள் குமுகாயத்தை வழிநடத்தினமை தெளிவே ஆகும்.  ஒரு முன் படைப்பின் உதவியின்றி எதையும் படைக்குமாற்றல் உள்ளவர் கடவுள்.

பிற்கால நூல்கள் அல்லது செருகல்கள் பெண்டிருக்குச்  சமயத் தலைமை அளிக்க மறுத்துவிட்டது.  ஒரு பிராமணப் பெண் பிராமண ஆடவனுக்கு இணையாக வைக்கப்படாதொழிந்தாள்.

ஆதிக்கடவுள் ஆதிபராசக்தியே ஆகும், இது மக்கள் மதக்கொள்கை.

பதி என்னும் சொல் பெண்ணை மணந்து அவள் இல்லத்தில் பதிவானவனையே  ஆதியில் குறித்தது. பின்னர் இச்சொல்லுக்குப் பொருள் உயர்பு ( ELEVATION ) நிகழ்ந்து  பதி என்போன் தலைமை உடையோன் என்ற நிலை உருவானது, ஒன்றில்  பதிவதென்றால் தனக்குப் பெரிதான ஒன்றில் பதிவதே ஆகும் என்பதுணர்க. தளத்தில் உட்பதிந்திருப்பவனே தளபதி.  பதி தலைவன் என்பது சொற்பொருளன்று; அஃது பெறப்பட்ட பொருளே.1

புதுமைக்கவி பிற்காலத்தில் மாதரை இழிவுபடுத்தும் மடமையைக் கொளுத்தினான்.

1  derived meaning.  Not etymological meaning.

Will edit.