புதன், 16 ஜூலை, 2014

வைகுதல் வைகுண்டம்

வைகுண்டம் என்பது  ஓர்  இனிய சொல். இது இறைவன் உறைவிடம் என்று  பொருள் படும். சிவ பெருமானுக்கு கைலாயம் இருப்பதுபோல் விண்ணனாய
பெருமானுக்கு வைகுண்டம் உறைவிடம் எனப்படும்.

வைகுண்டம் என்பது எப்படி அமைந்தது என்று காணலாம்

வைகுதல் என்பது வசித்தல் ,  வாழ்தல் . தங்குதல் என்று பொருள்தரும் .

உண் என்ற சொல் பல பொருள் தருசொல்.  உண் என்பதற்கு  ஒத்துப்போகின்ற,   இசைவான,  பொருந்திவருகிற என்றும் இச்சொல் அமைப்பில் பொருள் கூறலாம்.(1)  (2)

தம் என்பது ஒரு விகுதி. இது து மற்றும் அம்  என்பவற்றின் சேர்க்கை.

வைகு + உண் + தம் = வைகுண்டம்     இறைவனார் தங்குதற்குரிய இடம் என்பது சொல்லமைப்புப் பொருள். ,  சொல் வழக்கில் பொருளும் அதுபற்றிய சிந்தனைகளும் விரிந்து,  புதிய வரையறவு  பெறுதல் தேவைக்கு ஏற்ப ஆகும்.

இச்சொல் ஒரு காரணப்  பெயர்.

இனி இது வைகுந்தம் என்றும் மெலியும்    கடின ஒலிகளாகிய  "ண்ட " மாறி,  மெல்லெழுத்துகள் பெறும்.


=============================================================

1. to harmonise with, to be agreeable to

2 உண் என்பதன் அடிச்சொல்  உள் என்பதுதான்.  இதைப்   பின்  ஓர்  இடுகையில் விளக்குவோம்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

இலாயம் (குதிரை தங்கிடம்)


மனிதனுக்கு வீடு இருப்பதைப்போலவே,   அஃறிணையாகிய பிற அணிகளுக்கும் (பிற அணி = பிராணி(கட்கும்)) தங்கும் இடம் அல்லது தங்கிடம் உள்ளது. வீட்டு விலங்குகட்கு பெரும்பாலும் இதை மனிதனே கட்டிக்கொடுக்கிறான். மாட்டுக்கொட்டகை, இலாயம், நாயுறைவு முதலியவை உதாரணங்கள்.

இப்போது இலாயம் எப்படி அமைந்த தென்பது காண்போம்.


ஆயம் என்ற சொல்லுக்குப் பல பொருள். இங்கு அதன் பொருள் வேறு.

இல் + ஆய + அம்.

அதாவது இல்லமாக ஆவது என்று பொருள்.

இந்தச் சொல்லில் பெயரெச்சம் இடைபடு சொல்லாய் நின்றது.  (ஆண்டு+ இ = ஆண்டி என்பதில் வினை எச்சம் கொண்டு சொல் அமைந்தது ).

எச்சவினைகளிலிருந்து  சொல் அமைதல் காட்டுவர் சமஸ்கிருத ஆய்வாளர். ஆங்குக் காண்க.

திங்கள், 14 ஜூலை, 2014

சிவனாரின் இருப்பிடமே

கைலாசம் சிவனாரின் இருப்பிடமே ‍‍--- அது
சீனத்தின்  அரசின்கைப் பொறுப்பிடமே!---எந்த‌
நாட்டவர்க்கும் இறைவன் நம் சிவனாரே, ---அவர்
சீனாவுள் குந்தினதால் முனிவாரோ?

பாதுகாப்புக் குறைவான பாரதமோ--- விட்டுப்
பறந்துவிட்டார் சீனரிடம்  சீரிதமே!‍ --- இடர்
ஏதுமின்றி இருக்கின்றார் சீனரிடம் ‍‍---நின்றே
இரங்கிடுவார் பத்தியில்லாக் கூனரிடம்.

எங்கிருந்தால் என்னவெங்கள் சிவனாரே---- ‍‍அவர்
எங்களுக்கே எந்த நாளும்  பரிவாரே
அங்கிங்கே எனாதபடி உறைவாரே----  இன்பம்
ஆதலினால் யாவருக்கும் தருவாரே.