புதன், 29 அக்டோபர், 2008

புணர்ச்சி விதிகளும் சொல்லாக்கமும் - 2

*


நகு+அம் = நகம் என்று வரும் ஆகவே நக்கத்திரம் என்று வராது என்பது சரியான வாதம் அன்று. இதற்கு ஐராவதம் மகாதேவன் நகு+அம்= நக்கம் என்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது மட்டுமன்று, கீழ்க்கண்ட என் எடுத்துக்காட்டுக்களையும் கண்டு தெரிந்துகொள்ளவும்:

பகு+ ஐ = பகை (பக்கை என்று வரவில்லை).
ஆனால்:
பகு+அம் = பக்கம்!! (பகம் என்று வரவில்லை).
வேறுபாடு நோக்குக:
தக்குதல்: தக்கு+அம் = தக்கம்.

நகு+ஐ = நகை.
ஆனால்: நகு+ அல் = நக்கல் (சிரிப்பு).
நகு+அல் = நகல்.(சிரிப்பு).

இப்படிப் பல.
இதை எல்லாம் ஆய்வு செய்து பின் குறை சொல்லட்டுமே!

புதன், 22 அக்டோபர், 2008

கூரையா விழுந்தது?

கூரை விழலாம் விழுந்தநாள் தொட்டு அசை
சீரைத் தளையைச் சிறப்புடனே --- ஆரணியே
சேரக் கவிபாடச் செய்தமை ஓருங்கால்
யாரே கவலைகொள் வார்.

[இளங்கவி ஒருவர், எழும்புமுன் கூரை விழுந்துவிட்டது...ஆகையினால் களத்திற்கு வர இயலவில்லை என்பதுபோல் பாடலொன்று புனைந்திருந்தார். ஆனால் கூரையினால் அவர் "பாதிக்கப்" பட்டதாகத் தெரியவில்லை. இப்பாடல் அவருக்குப் பதிலாக அமைந்து, கூரை விழுந்ததும் கவி பாடத் தொடங்கி விட்டீர், இனி யார் கவலைப்படுவார் என்று வினவுகிறது.]

செவ்வாய், 21 அக்டோபர், 2008

கொடிய விலங்குகள்..............

கொடிய விலங்குகள் கொல்தொழிற் காட்டில்
விடிய விடிய விழித்துக் --- கடிகாவல்
முன்கொண்டு தாமே முனைப்போடு வாழ்ந்திட்ட
வன்மைசேர் காலத்தில் மாண்டோரும் --- பன்மையோர்!
ஒண்மை அறிவியல் ஓச்சும் அரசுயர்
தன்மை உடையவிந் நாளிலே -- புன்மைசேர்
குண்டுகளால் துன்பக் குறுநேர்ச்சி தம்மினால்
பண்டுபோல் மாண்டோரும் பல்லோராம் --- என்றுமே
மாளவே பற்பல காரணங்கள் அல்லாமல்
மாளுதலில் மாற்றமென் றொன்றில்லை --- கேளுமே!
போவ துறுதி! புதுப்புதுக் காரணங்கள்!
நாவில் தவழ்சொல்லும் நல்லதே -- மேவினோ,
ஆவதோர் குற்றமும் ஆங்கில்லை நோவதேன்?
கூவுக தேவனின் பேர்.