இனி, நீசம் , நீசன் என்ற சொற்களையும் ஒப்பீடாக நீச்சன் என்ற சொல்லையும் காண்போம்.
இதில் உள்ள நீ என்ற அடிச்சொல், "ஏற்புடைமையின் நீங்கிய" என்று பொருள்தருவதாகும், நீ என்ற முன்னிலை ஒருமையும்கூட, " பிறனின் நீங்கிய முன்னிற்பவன்" என்ற பொருளுடையதாய் இருக்கிறது. இதைச் சொல் லமைப்புப் பொருளுடன் கூட்டுவித்து வரையறுத்து உரைப்பதாயின், " பிறனின் நீங்கியோய்!" என்றுதான் சொல்லவேண்டும். இவ்வாறுகூறவே, நீக்கப் பொருள் முற்போந்து நீ என்பதன் பொருள் தெளிவாய் வருமென்பதறிக.
ஆ என்பதிலிருந்து ஆசு என்ற தமிழ்ச்சொல் பிறந்தவாறே, நீ என்பதிலிருந்து நீசு என்ற அடிச்சொல் தோன்றுகிறது. சு என்பதொரு விகுதி. இவ்வாறு சு விகுதி அமைந்து வழக்கத்திலுள்ள ஒரு சொல் "பரிசு". பரிந்து தருவது அல்லது பரிவுரையின்பேரில் தரப்படுவது. நீசு என்ற அடிச்சொல் முழுச்சொல்லாய் வழக்குப் பெறவில்லை, (அல்லது அவ்வாறு வழக்குப்பெற்ற நூல்கள் இன்று எமக்குக் கிடைக்கவில்லை. ) அதனை இன்று நீசன் என்ற அன் விகுதிபெற்ற சொல்லினின்றே அறியமுடியும். ஆனால் காத்தற்குரியது என்று அமைப்புப் பொருள் போதரும் காசு என்ற பணம் குறிக்கும் சொல், சு விகுதியுடன் தமிழில் நன்கு வழக்குப் பெற்றுவிட்டது. இதற்கு நாம் நன்றி தெரிவிப்பது பணநாதன் என்போனுக்கே ஆகுதல் காண்க.
இவைபோலமைந்த இன்னொரு சொல்: ஊசு. ஊ என்பது முன்னிருப்பவற்றில் முதலில் களையப்படும் பொருள் என்ற அர்த்தமாகும். இங்கு சு என்பது வினையாக்க விகுதியாய் வருகிறது. ஒருகூடை பழங்களில் ஊசுவதே முன்னர் களையப்படுவது. அதனால்தான் ஊகாரத்தில் இச்சொல் தொடங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இனி இதிலிருந்து ஊன் என்ற உடல் அல்லது தசை என்று பொருள்படும் சொல்லும், முன் களைதற்குரியது என்ற பொருளதே. உயிர் எங்கு சென்றது என்பதை அறியாத நிலையில், ஊன் - அதாவது உடல் முன்னர் எரியூட்டப்படும் அல்லது புதைவுறும். இவற்றின் அடிப்படைப் பொருள் "முன் களை" என்ற என்பதே. காட்சிக்கும் முன்னது, களைதற்கும் முன்னது இவ்வுடலாம். தமிழ்ச்சொற்களின் பொருள் அறிந்து இன்புறுக. நூல் செல்வதற்கு முன் ஆடைக்குள் சென்று நூலை நுழைப்பது - உ > ஊசி ஆகிறது.
பூசு என்ற வினையினின்று பூசணம், பூஞ்சனம் என்ற சொற்கள் வந்துள்ளன. பூசி மெழுகியதுபோல் அல்லது உள்ளிருந்து பூத்ததுபோல் தோற்றம்.
இங்கு சு என்று இறும்2 சில சொற்களைக் கவனித்தோம்.
நீசம் - நீச்சம் என்றும் இச்சொல்லைப் பலுக்குவர்.
நீச்சாள் என்ற சொல்லுக்கு நீந்தும் தொழில் அல்லது பழக்கமுடையோன் என்
று பொருள். ஏற்புடையோருள் நீங்கியோன் என்ற பொருளுடைமை காணக்கிடைத்திலது. நூல்களிற் கிடைப்பின் பின்னூட்டம் இடுக.
நீச்சன் நீந்துவோன் என்றும் பொருள். நீச்சு - நீச்சல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்,
மேலும் அறிக:
நீசம்;
https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post_10.html
2. இறும் - முடிபு கொள்ளும், முடியும்