ஐ என்ற எழுத்து தமிழில் நெடில். இதற்கு உரிய மாத்திரை இரண்டு. வேறுவிதமாகச் சொல்வதென்றால் : கண்ணை இருமுறை இமைக்கும் பொழுது அல்லது காலம் ஆகும். ஐ என்னும் எழுத்து, சொல்லில் முதலில் வரும். எடுத்துக்காட்டு: ஐயனார்., ஐயா என்பன. சொல்லின் இறுதியிலும் வரும்: எடுத்துக்காட்டு: மலை, கலை, தொகை. ல்+ ஐ: லை; க் + ஐ = கை. மெய்யுடன் கலந்து இறுதியில் ஐ நிற்கிறது.
ஒலிநூலின் படி, ஐ என்பது குறுகி ஒலிக்கும் இடங்களும் சொல்லில் ஏற்படும். இந்த வாக்கியத்தைப் பாருங்கள்:
இவன் முன்னர் கலையையும் பழித்தான், பின்னர் நம் நிலையையும் பழித்தான்.
இது வாயால் ஒலிக்கும்போது, "கலயயும்", " நிலயயும்" என்று உங்களை அறியாமல் குறுகிவிடலாம். இது ஒரு குறுக்கமே ஆகும். பேச்சில் குறுகுவது ஒரு பொருட்டன்று. கவிதையில் மாத்திரை அல்லது ஒவ்வோ ரெழுத்தையும் ஒலிக்கும் காலம் முதன்மை பெறுவதால், ஐகாரம் குறுகுவது ஐகாரக் குறுக்கம் எனப்படும். இவ்வாறு குறுகும்போது, இசைமுறிவு ஏற்படாமல் கவிஞன் பார்த்துக்கொள்ளவேண்டும், ஐகாரம் முழு அளவில் ஒலிக்கும்போதும் இதைக் கவனிக்கவே வேண்டும்.
மலை என்ற முழுச்சொல், அம் விகுதி பெற்று, மலையம் என்றாகும். அப்போதும் மலையம் என்பதற்குப் பொருளில் ஒன்றும் வேறுபாடில்லை. இருப்பின், அம் என்பது அழகாதலின், மலையழகு என்று விரித்துரைக்கலாம். எழுதுவோன் மலை என்ற இடம் குறித்தானோ? அல்லாது அதனழகு குறித்தானோ எனின், அழகைக் குறிக்கவில்லை, வெறும் மலையைத்தான் சொல்கிறான் என்றுணர, அம் என்பது வெறும் சாரியை என்று ஆகிவிடும். இது பொருள்கோள் என்பதில் கவனிக்கவேண்டியதாகும். உரையாசிரியன் சிறந்த பொருளை எடுத்துக்கூறுவது என்பதைத் தன் கடனாகக் கொண்டவன் ஆவான்.
மலை, மலையம் என்பவற்றில் மலையம் என்பது மலயம் என்று குறுகுவதுண்டு. இவ்வாறு கவிதையிலன்றி, இயல்பாகவே பேச்சில் குறுகுவதுண்டு. இதற்குக் காரணம் கூறவேண்டின், முயற்சிக் களைப்பு எனல் ஏற்புடைத்து. எனவே, சொல் திரிபடைந்தது. இதுவே உண்மை. இது ஒன்றும் பிறமொழி ஆகிவிடாது. இவ்வாறு திரிந்தபின், மாருதம் என்ற சொல்லுடன் கலந்து, மலயமாருதம் ஆகும்.
இனி இன்னொரு வகையில் சிந்திப்போம். மலை என்று மனிதன் மலையைக் கண்டு மலைத்து நின்றதனால் ஏற்பட்ட சொல் என்பதுண்டு. இருக்கலாம். மல் என்ற அடிச்சொல் வலிமை குறிப்பதால், மல் > மலை என்றும் வந்திருக்கலாம். அப்படி வரவில்லை என்பதற்குக் காரணம் எதுவுமில்லை. மல்> மல்+அ + அம் > மலயம் என்று வந்துமிருக்கலாம். அ என்பது இடைநிலை; அம் ஈறு அல்லது விகுதி. மல்- வல் போலியுமாகும். மலயம் என்பது மலை குறிக்கும் சொல்லே. "ஓங்குயர் மலயம்" என்கின்றது மணிமேகலைக் காப்பியம். மலயம் என்பது மலை.
மலயமாருதம் என்பது அழகிய தமிழ்ச்சொல்லே. ( சொற்றொடர் அல்லது கூட்டுச்சொல். மருவிச்செல்வது காற்று. மரு+து+ அம்> மாருதம் முதனிலை நீண்டு திரிந்த பெயர். மருவு என்ற வினையும் மரு எனபதனை அடியாய்க் கொண்டதே ஆகும்.
பரத்தல் வினை: பர > பார் ( உலகு). பரந்து விரிந்த உலகம் என்பது, வியனுலகம் என்றார் தேவரும் திருக்குறளில். இதுவும் முதனிலை நீண்டு திரிந்து பெயரானதே ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.