பொருள் என்னும் சொல் ஒரு பகாப்பதம் அன்று. இஃது ஒரு தொழிற்பெயர் போல உள்விகுதி பெற்றமைந்த சொல். இதன் அடிச்சொல் பொரு என்பதே.
உள் என்னும் விகுதி பெற்றமைந்த சொற்கள் தமிழிற் பல. சில சொல்வோம்: கடவுள், இயவுள், அருள், நருள், செய்யுள் ( செய் என்னும் வினைச்சொல் அடி), பையுள், ஆயுள் ( ஆ(தல்) ) உறையுள் எனக் காண்க.
வினைச்சொல்லும் விகுதி பெறும்; அல்லாதனவும் விகுதி பெறும். அல்லாதன விகுதி பெறா என்னும் விதி இலது அறிக.
தமிழர் அணுகுண்டு என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்து எவன் தலையிலும் போடவில்லை என்றாலும், அணுவை அறிந்திருந்தனர். பொருட்களெல்லாம் அணுக்கள் இடையற அணுக்கமாக அடைந்து நின்று இயல்கின்றன என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அணுவியலைத் தனிக்கல்வியாக அவர்கள் வளர்க்கவில்லை போலும், எனினும் இதை அறுதியாய் உரைக்க இயல்வில்லை. இதற்கான ஏடுகள் இருந்து அழிந்துமிருத்தல் கூடும். இருந்து, அடுத்து இலங்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுமிருத்தல் கூடும். நூல்கள் இலாமை யாது காரணம் என்று இற்றை நாளில் கூறவியலாது.
பொரு என்ற அதே அடிச்சொல்லில் பிறந்து "பொருந்து" என்று வினையாய் அமைந்த சொல் நம்மிடை உள்ளது. எல்லாப் பொருட்களும், தம்மில் தூள், தூசு, பகவுகள், அணுத்திரள்கள், அணுக்கள் என்பன பொருந்தி நின்றதனால் அமைந்து உலகில் இலங்குபவையே ஆகும். ஒரு பொருளாய் ஒன்று இலங்குதற்குக் காரணியாவது, இவ்வணுக்கள் பொருந்தி நின்றமையே ஆகுமல்லால், மற்றொன்றில்லை. இதனின்று பொருந்தியமைவு எனற்பாலது நன்கு அறியப்படும்.
பொருவு என்ற வினை ( ஏவல் வினை) பொரு என்ற அடியினெழுந்ததே ஆகும். ஒத்தல் நேர்தல் நிகழ்தல் என்ற பொருளில் இச்சொல் இன்னும் உள்ளது. பழம்பாட்டுகளில் இது வந்திருந்தாலும், இற்றை நாள் எழுதுவோர் பாடுவோரிடை இச்சொல் வழக்குப் பெற்றிலது என்று முடித்தலே சரியாகும். கம்பனிலிருந்து சின்னாள்காறும் இச்சொல் நிலவி வழங்கியிருத்தல் கூடும். உன்னைப்போன்ற அறிஞர் என்று சொல்ல விழைந்தோன், உன்னைப் பொருவு அறிவுடையோர் என்று கூறினாலும் பொருளதுவே ஆகும்.
புரைய என்ற உவம உருபு தொடர்புடையது. புரைதல் வினை. பொரு> புரை.
பொருவு+ உள் > பொருவுள் என்றமையாமல், பொரு+ உள் > பொரு+ (உ) ள்> பொருள் ஆகும். தேவையற்ற உகரத்தை விட்டமைத்தனர். இதேபடி அமைந்த இன்னொரு சொல்: அரு + உள் > அருள் ஆகும். இதில் உகரம் கெட்டது என்று இலக்கணபாணியிற் சொல்லலாம். இற்றை மொழியில், உகரம் களைந்தெறியப் பட்டது என்க.
தெர் > தெரி.
தெர் > தெருள். (தெருள் மெய்ஞ்ஞான குருபரன் என்ற சொற்றொடர் காண்க)
தெரு என்பது போவார் வருவார் யாவும் தெரியச் செல்லும் பாதை. பிறபொருளும் கூறல் ஆகும்.
பொருள் என்பதே போலும் பொருளில், பொருக்கு என்ற சொல்லும் வழங்கும். பொருக்கற்றுப் போயிற்று என்றால் பொருளில்லாமற் போயிற்று என்பதே. பொருக்கு என்பதில் கு விகுதி. அடிச்சொல் பொரு என்பதாம். வழியிற் கிடக்கும் பொருக்குகளைப் பார்த்து விலகிச் செல் என்பதில் இது அமையும். காய்ந்த மண்ணுக்குப் பொருக்காங்கட்டி என்பதுண்டு. மண்ணாங்கட்டி என்பதும் அது.
தோல் காய்ந்து வெடித்தல் பொருக்குவெடித்தல் என்று வழங்கும்.
பொருக்கு என்பது ருகரமிழந்து, பொக்கு என்று குன்றும். இடைக்குறைக்கு நல்ல எடுத்துக்காட்டு.
பொருக்கு எனற்பாலது இடைக்குறைந்து பொருகு என்றாகி சோறு குறிக்கும்
பொருக்கு > பொக்கு > பக்கு: இது சோறு முதலியவற்றின் அடிமண்டை. ( அடியில் மண்டியிருப்பது அல்லது உறைகுழைவு )
இவற்றிலிருந்து பொருள் என்ற சொல்லின் திறம்கண்டீர்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
௳றுபார்வை செய்யப்பட்டது 13112022 0906