சனி, 1 அக்டோபர், 2022

கிழவர்களுக்கே உரிமை இளைஞனுக்கோ இல்லை

 எந்தச் சொல் எதற்காகப் புனையப்பட்டதோ,  அந்தப் பொருளிலே அது காலமும் கடந்து தொடர்ந்து வழங்கிவிட்டால்,  கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வுகளில் அதுவும் ஒன்று என்று துணிந்து  எடுத்துக்கூறலாம். தேவதாசி என்ற சொல் இறைவனை வணங்கி வாழும் பெண்களுக்கு என்று உண்டாக்கப் பட்ட சொல் என்றாலும்,  பின்னாளில் அதன் அமைப்புக்கு ஒவ்வாத பொருளில்  அது பேசப்பட்டது.  

வேசி என்ற சொல்கூட,  வேய்ந்துகொண்டவள் என்ற பொருளில்தான் அமைந்தது. யகர சகரப் போலியில்,  வேயி என்றபாலது வேசி என்று திரிந்தது. தமிழன்று என்றும் தவறாக எண்ணப்பட்டது.  ஒப்பனைகள் பல செய்து, அரிய சேலை முதலிய துணிகளை அணிந்துகொண்டிருப்பவள் தான் வேசி. அவ்வாறு அணிந்துகொண்டிருந்த பெண்டிரை,  தவறாகக் கருதி,  விலைமாது என்று எண்ணி,  வேசி என்றனர் என்பது தெளிவு. இப்போது அந்தப் பொருளில்தான் வழங்கி வருகிறது. இவற்றை எல்லாம் கேட்டு கவலைப் பட்ட ஒரு தமிழன் விபசாரி என்ற சொல்லைப் படைத்தான்.  விரிந்தும் (வி ) பரந்து ம்  ( ப) ஒழுகி, ஆடவர்களைச் சார்ந்து வாழ்பவள் என்ற ( சார் + இ ) பொருளில் இச்சொல் வந்தாலும்.  இதை அறியாமல் இதையும் தமிழன்று என்று சொல்லிவிட்டனர்.

அதனால்தான் தொல்காப்பிய முனிவர் சொன்னார் :  "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா "  என்று;  அவர்  கவனமாகவே  நூற்பா இயற்றினார். சொல் நூலும் மொழிநூலும் அறியாமல் உனக்கு விளங்காது என்றுதான் இதற்குப் பொருள். விளக்கவேண்டாம்! ஒரு சொல்லின்பால் கொஞ்சமாவது விளக்கு வெளிச்சம் பட்டால்தான், அது விளங்கும் ( ஒளி வீசும்).

வாயி என்பது வாசி எனத் திரிந்தமை போலவே,  வேயி என்பதும் வேசி ஆனது.

வாய் என்றால் இடம்.  இடத்திலிருப்போன் வாயி.  அது வாசி ஆயிற்று.  ஆகவே, சென்னைவாசி என்றால்,  சென்னையாகிய இடத்தவன் என்பதுதான். தோன்றும் வாய் என்றால் அது தோற்றுவாய்.  தோன்றும் இடம்.  ஆரம்பம்.  தொடக்கம்.

தோய்த்த மாவில் சுடும் அப்பம் தோய் > தோயை > தோசை.  யகர சகரப் போலி.

இவ்வளவும்,  சொல்லும் பொருளும் திரிந்துவிடுதல் நடைபெறுவதுதான் என்று உணர்த்தவே கூறினோம்.

கிழ என்றால் உரிய என்று பொருள். கிழம் + அன் > கிழவன்.  இதற்குப் பொருள்:  உரியோன் என்பதுதான்.  கிழவி  என்றால் உரிமை உள்ளவள்.  இவை எல்லாம் முதுமை காட்டும் சொற்களாய்த் திரிந்துவிட்டன.  கிழார் : இது வேளிர் பட்டப்பெயர்.  ஆலங்கிழார்,  மூலங்கிழார்  என்பன எடுத்துக்காட்டுகள். பயிர்த்தொழில் முதலாளிகள் என்னலாமா?   சனிக்கிழமை என்பதில் கிழமை என்றால் ( சனிக்கு) உரிய நாள் என்பது.  கிழான் என்பது வடமாநிலங்களில். கிஸான் ( கிசான்) என்று திரியும். 

ஒரு செடிக்கு உரிய இடம் அது வேரைக் கீழிறக்கும் ( மண்ணிற் செலுத்தும்) தரைதான்.  கிழங்கு என்பதும் வேர்தான். கீழிருப்பது.  கீழ் > கிழங்கு.  உரிமைப் பொருள் தாவரங்களின் வளர்ச்சிகளால் ஏற்பட்டது. நிலத்தில் நிலைகொள்வதுதான் எல்லா உரிமைகளிலும் மூத்த உரிமை.  கிழவர்களை கிழவியரை  மூதுரிமையர் என்ற புதுத்தொடரால் புகழவேண்டும்.

இந்த உரிமைக் கருத்து இளையர், இளைஞர் என்ற சொற்களில் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

புதன், 28 செப்டம்பர், 2022

கெளிறும் சனியன் பிடித்த நாரையும்.

கெளிறு என்பது ஒரு  மீன்வகை. இதற்கு ஓர் அழகான தமிழ்ப் பழமொழியும் உண்டு.   சில தலங்கள்  பாடல் பெற்றவை என்று அறியபடுதல் போல  இஃது ஒரு பழமொழி பெற்ற மீன்.  அந்தப் பழமொழி  யாதெனின்:  " சனியன்பிடிச்ச நாரை,  கெளிறைப் பிடித்து விழுங்கினது " என்பதுதான் அது.   கெளிறு என்பது செயப்படுபொருளாய் வருகையில்  "கெளிற்றை" என்று இரட்டித்தல் வேண்டும். ஏன் ஐ விகுதி என்றால் அது விழுங்கியது விழுங்கலாகாத மீனை.  சனியன் பிடித்ததால்தான் அது அம்மீனை விழுங்கிற்று என்பதாம்.

தமிழ்ச் சொற்கள் பிறமொழிக்குச் சென்றால், திரிபு அடைதல் இயல்பு.  அஃது படாமல்,  மலாய் மொழிக்குச் சென்ற இந்த மீன் பெயர்,  "கெலி" என்று மட்டும் வருகிறது.  கெளிறு தொண்டையில் மாட்டிக்கொள்ள,  நாரை படாதபாடெல்லாம் பட்டிருக்கும்.  

நரிக்குக் கொக்குப் பிடிக்கத் தெரியாதது போல, நாரைக்கும் கெளிறு பிடிக்கத் தெரிவதில்லை.  நாய்க்கும் கொசுவைப் பிடிக்கத் தெரிவதில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

சனி, 24 செப்டம்பர், 2022

கிழமைகளில் இறைவன் - [சனிக்கிழமைக் கவி]

 பற்றனெங்கு வணங்குகிறான் அங்கெல்லாம் வருவார்

பற்றனெப்போ பணிகின்றான் அப்பொழுதில் உருவாய்

உற்றுவரும்  உளதாகும் ஆற்றலவர் இறைவன்

எற்றோயாம் அவர்பாதம் பணிவின்றி உறைதல்?       1


பற்றன் -  பத்தன் - பக்தன். பற்றுதல் உடையோன்.

எப்போ - எப்போது,  இது கடைக்குறை, இறுதி -து நீங்கியது, பேச்சுவழக்கிலும் உளது.

ஆற்றலவர் - ஆற்றல் அல்லது சக்தி உடையவர்.

எற்றோ - என்ன?

உறைதல் - உலகில் இருத்தல்.


சரிவில்லா  நற்கிழமை  சனிக்கிழமை அலதோ?

புரிவில்லா  நாளதிலே  புலர்வில்லை பொழுதே

நெரிவில்லா நல்வாழ்வு நினைந்தடைக தொழுதே

கரைவில்லா  நலமாகும் கடந்துறைக பழுதே.


சரிவு -  வாழ்க்கை நிலை இறங்குதல், குறைதல்.

அலதோ -  அல்லவோ(பன்மை), அன்றோ.(ஒருமை)

புரிவு -  செயலாற்றுதல்.  முயற்சி

புலர்வில்லை - விடியல் இல்லை

நெரிவு  -  துயர்படுங்காலம்

கரைவு --செய்த முயற்சிகள் வீணாதல்.


அறிக  மகிழ்க

மெய்ப்பு பின்னர்