செவ்வாய், 22 மார்ச், 2022

பரிதாபப் பன்றி.

வெண்பா 

வனவிலங்கு பன்றியெதிர்  வந்தபெண்மேல் மோதி

மனங்கலங்கக்  காயம்  உறவும்----- சினங்கொண்டார்

காக்கும் பணியினர் கண்டுபிடி கொல்லெனவும்

சேர்க்குமிடம் சேர்த்தார் அதை.

குறள்வெண்பா

யாவும் அறியா வனப்பன்றி   யாங்குசென்றாய்?

பாவமே எப்படியும் பார்


ரக்கம் எழுமே எனதுமனம் பன்றி

உறக்கமே கொள்வான மேல்.


முழுக்கதையை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.


Wild boar that knocked over woman at Yishun caught and put down

அழகும் அழகின்மையும்


 

அழகற்ற பொருள்மேலோர் ஒளிசென்றி ணைந்தால்

அதுதானும் அழகொன்று பெறலாகும் மிளிரும்;

அழகுள்ள பொருளென்னில் அழகோடும் அழகே,

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ஐயம்

இழையாது மயக்கற்ற தலைதன்னில் கண்டாய்.

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்

பிழையென்று சொல்வார்தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே தம்பீ


இது எண்சீர் விருத்தம். பொருள் வருமாறு:

அழகற்ற பொருள்மேலோர்  ஒளிசென்றி ணைந்தால்  --   ஆழகில்லாத பொருள் ஒன்றின் மேல், ஒளிசென்று விழும்போது,

அதுதானும் அழகொன்று பெறலாகும்  -  அவ்வழகு குன்றிய பொருள் அழகைப் பெற்றுவிடுகிறது;  மிளிரும்; --- அதுவும் ஒளிவீசத் தொடங்கிவிடுகிறது.

அழகுள்ள பொருளென்னில்  - அழகான பொருள்மேல் ஒளி சென்று படியுங்கால், அழகோடும் அழகே,  --  அங்கு அழகோடு அழகு சேர்ந்து மிகுந்த அழகு உண்டாகிறது;

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ---  இவ்வாறு அழகுடன் அழகு இணைவது ஒரு மகுடத்தின்மேல் இன்னொரு மகுடம் வைத்தது போன்றது;  ( இரண்டடுக்கு மகுடம்.)

ஐயம் இழையாது =  சந்தேகம் ஏற்படா நிலையில்; 

மயக்கற்ற தலைதன்னில்---  தலை மயக்கம் இல்லாமல்  

கண்டாய். -இதைக் கண்டுகொள்வாய்; (ஐயமும் அஃது இன்மையும் தலைக்குள் உள்ள மூளையில் உண்டாவதால். "தலை தன்னில்" எனப்பட்டது.)

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்--  இதுதான் அழகு,  இது அழகல்ல (அழகன்று)  என்று சொல்வதெல்லாம்; 

பிழையென்று சொல்வார்---  ஒருவிதப் பிழை என்று கூறுவாரும் உளர்; தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே --  ஒருவரின் அபிப்பிராயம் என்ற முடிபும் உள்ளது, 

தம்பீ  - விளி.

படத்தில் அழகற்ற பொருள்கள் என்று கருதப்படுபவை விளக்கொளியில் மின்னுகின்றன,

அறிக மகிழ்க.

மெய்ப்பில் பிழை காணப்படவில்லை.  எனினும்
மீள்பார்வை செய்யப்படும்.



திங்கள், 21 மார்ச், 2022

நல்லெண்ணம் போர்களைத் தவிர்க்கும்.

 பங்காளிச் சண்டைகள் நடக்கின்ற  போது

பக்கத்தில் உள்ளாரும்  படுகுத்தல் செய்வார்.

எங்கேனும் இப்புவியில் எதனாலோ ஓடும்

இதுபோலும் செய்கைகள் நமக்காகும் பாடம்!

மங்காத நல்லெண்ணம் மயக்கற்ற மூளை

மாநிலத்து நாடுகளில் நிலைகொள்ளும் நாளில்

தங்காது  பேரழிவு தடைகொள்ளும் தீமை

தாரணியும் ஓரணியில் சீர்பெறவே காண்பீர்.


பங்காளி - முன் ஒன்றாயிருந்து பிரிந்தோர்

படுகுத்தல் -  சண்டையைப் பெரிதாக்குதல்.

ஓடும் - நிகழும்

தாரணி - பூமி.

மயக்கற்ற - தெளிவான