வெள்ளி, 18 மார்ச், 2022

உயிரைப் பணயம் வைத்து வேலைசெய்தல்.

 https://theindependent.sg/helper-without-safety-harness-seen-cleaning-exterior-of-window-of-high-rise-flat/

சில வேலையாட்கள் விபத்து நிகழ்ந்துவிடக் கூடிய நிலையில் தங்கள் கடமையை ஆற்றுகிறார்கள் என்பது இப்போது பரவுசெய்தி  (வைரல்)  ஆகிவருகின்றது.  மேலுள்ள தொடர்பினைச் சொடுக்கி இந்தச் செய்தியை வாசித்துக்கொள்ளுங்கள். உங்கள் உறவினர் யாரும் வெளிநாட்டில் வேலைசெய்துகொண்டிருந்தால் சொற்ப ஊதியத்திற்காக இத்தகைய வேலைகளைச் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்துவது நன்று.

சொந்தப் பாதுகாப்பு எப்போதும் முதன்மையாக இருக்கவேண்டும்.

இதில் வெளிவந்துள்ள படத்தில் இந்நிகழ்வு தெளிவாயிருக்கிறது.

வியாழன், 17 மார்ச், 2022

இறப்பும் ஏற்பட்ட வரப்பும்--- கடவுள்செயல்

 போனவர்கள் போய்விட்டார் என்று சொல்லி

இருப்பவர்கள் வருந்துகின்ற உலக விந்தை!

ஆனஒரு செயல்தன்னால் போன மாந்தன்

அவ்வாறே திரும்பிவர அறிந்தோ மில்லை.

தீனர்பெருஞ் செல்வரென வேறு  பாடு

தெரிந்திடவும்  இதிலேதும் முடிவ தில்லை;

காணுமொரு ஞாலத்தின் கதியைத் தானே

கடவுளியக் கம்மெனலும் காட்சி யன்றோ?


போனவர் - இறந்தவர்

இருப்பவர் - வாழ்கின்றவர்

தீனர் - ஏழைகள்

ஞாலம் - உலகம்

கதி - செல்வழி

காட்சி - கண்ட உண்மை 

வரப்பு  - எல்லை

இறப்பு - மரணம்


தீனர் என்ற சொல்:  https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_22.html

தின்பதற்குத் தேடுவதையே ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செலவிடுவானாகில் அவன் தீனனே.   அவன் வாழ்வில் உண்பதே முதலாகின்றது. மற்றும் தின்னுதல்  -  தீனி என்ற சொற்கள் விலங்குபோல உண்ணுதலைக் குறிக்கும்.  விலங்குணவு உண்ணும் மனிதனையும் குறிக்கும். ஏழ்மை என்பது அடிப்படைத் துன்பமாகும்.

திங்கள், 14 மார்ச், 2022

ஆதரவு தேடிய இலை தொலைந்தது

 [செடி, இலை, வேலி இவைகளும் ஆடும் இந்த புதுக்கவிதை நாடகத்தில்

நடிக்கின்றன.  இலை - உக்கிரேன்;  அது முளைத்த இடத்தைச் செடி என்றேன், 

ஆடு-   இரசியா?   இந்த வருணனை சரியா?  எனக்குத் தெரியவில்லை. வேலி - 

உலகின் பாதுகாப்புத் தரும் நாடுகள்.   புதுக்கவிதை ஆதலால்,  எதுகை 

மோனைகள் குறைந்தன.  நான் புதுக்கவிதை எழுதியது குறைவுதான்.  

நன்றாய்  இருந்தால்  நுகர்ந்து மகிழ்க. சரியில்லை என்றால் பின்னூட்டம் 

செய்க.  முளைத்த இடம் ருசியாவின் பக்கம்.   ஆதலால் ருசியாதான் செடி 

என்கிறீர்களா.  அப்படியானால்  ஆடு - நேட்டோ நாடுகளா?  எது சரி?]


மோனைகள் கொஞ்சமே.

அந்தச் செடியில் முளைத்துள்ளேன்,

அதிலுள்ள இலை நான்.

என்றன் இடம்நோக்கி வருகிறதே,

அறிந்தேன் அது ஓர் ஆடு.

என்னை மென்று விழுங்கிவிடும்,

பின்னே நான் இங்கில்லை.

தனியாய் இயங்கும் எனது சுதந்திரம்

பறிபோகுமே, பறிபோகுமே!


நடந்து போகையில் உங்கள் கண்முன்

கிடந்து ஆடும் இலைநான்

என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்! என்னை

நீங்கள் காப்பாற்றுங்கள்.

இன்னொரு பிற அணி வயிற்றினில் கரைந்து

காணாமல் போகும் நாள் வந்ததோ.

தனிமை வாழ்வு, இனிமை வாழ்வு,

எனதின்ப வாழ்வு நிலையாததோ?


தனியாக இலையாய் யார்க்கும் நிகராய்

மணிபோல் சொலிப்பது நானே

இனிமேலும் அதுவே வாழும் கனா

பாரதி பாடிய சுதந்திரக் கனா.


உக்கிரேன் என்ற நிலையும் கவிழ்ந்தது

இலைநான் என்ற வாழ்வும் கரைந்தது.


என் குற்றம்தான் என்ன?

ஒரு வேலியைத் தேடி விரைந்தது.