இந்தக் கவிதை சிலவிடத்து விடுகதைபோன்றிருக்கும். எனினும் ஊன்றிப் படித்தால் பொருள் தெளிவாகும். உங்கட்கு உதவ, சிறுதலைப்புகள் உள்ளன. இவை பொருள்விளக்கமாக இருக்கும் என்பது எம் நம்பிக்கை.
விளக்கம் வேண்டுவோர் பின்னூட்டம் செய்க.
உக்கிரேன் நாட்டு நிலை
உக்கிரேன்
தரையின் மட்டம்
கொட்டமே
இல்லா வட்டம்.
விற்கிறான்
வாங்கு கின்றான்
வீதியில்
காண்போமில்லை!
வைக்கிறான்
வெளியில் காலை
நடக்கிறான்
யாரும் இல்லை!
ஒக்கநிற் போர்வி
ழைந்த
உன்னதம்
இதுவே தானோ?
இந்தியா பெற்ற ஆதரவு
ஆறென
முறைகள் தப்பி
பார்புகழ்
காவல் எய்தி,
பேரொடும்
இந்தி யாதாம்
பிடித்ததோர்
பிணியின் நீங்கி
நேர்பட
நிற்கும் தெம்பை
உருசியா
தந்த தென்பார்.
கூறுவர்
இதையும் உள்ளம்
கொள்வது
கடனாய்க் கொள்வர்.
தெம்பு - வலிமை
கடனாய் - கடமையாய்
கொள்வர் - ஏற்றுக்கொள்வர்.
போர்முனைக் காட்சிகள்
போர்முனை தன்னில் கண்கள்
புலப்படச் சிறுசு வர்கள்,
யாருமுன் இருந்த மக்கள்
யாங்கணும் காணற் கில்லை.
தேர்ந்தவர் செய்வி ழாக்கள்
தினமுமே நிகழ்ந்த நாட்டில்
ஊர்ந்தன பிணப்பு ழுக்கள்
உலகுக்கு நேரக் கேடாம்.
யாருமுன் - யாரும் முன்
தேர்ந்தவர் - திறமை உள்ளவர்கள் ( விழச்செய்வதில்)
நேரக் கேடு - கெட்ட காலம்.
( நமக்குக் காலம் என்பது உலகுக்கு நேரம் )
சண்டைநிறுத்தம்:
உக்கிரேன்
உருசியா போடும்
உக்கிரச்
சண்டை பார்த்தால்
எக்கரை
நடப்ப தேனும்
எம்மனம்
கவலை கொள்ளும்.
தக்கதை
அமர்ந்து பேசித்
தகுதியில்
ஒத்துப் போக
ஒக்குமோர்
வழியே தானும்
ஊர்ந்துமே
வரினும் நன்றே.
ஊர்ந்துமே - மெதுவாக
அமைதி வருக
விரைந்தினி
வருக என்றால்
சுரந்தது
மெலவே தோன்றும்
வருந்தரு
ணத்தே வந்து
வண்ணநல்
லெண்ணம் வந்தால்
அருந்திறல்
உடையோர் என்றும்
அவனியன்
னாரைப் போற்றும்.
பெருந்துணை
அமைதிப் பெண்ணே
பிறழாது
வருவாய் நீயே.
சுரந்தது - வெளிப்பட்டது. அமைதி எண்ணம்.
மெலவே: மெல்லவே. ( தொகுத்தல், அதாவது சொல்லைச் சுருக்குதல்)
அவனி - உலகம் ( அ + அன் + இ) வகரம் புணர்ச்சியில் தோன்றிற்று.
( உங்களுக்கு அண்மையில் இருப்போர் உலகத்தினரே.
அ = அங்கு; அன் - ( இது அண் என்பதன் ஒரு வடிவம்) அருகில்,
இ - இது இருப்போரையும் இடங்களையும் குறிக்கும்.)
இந்த "அன்" என்பது அன்பு என்ற சொல்லில் உள்ளது, காண்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.