சீடன் என்ற சொல்லைப் பற்றி இன்று சிந்திப்போம்.
சிந்தித்தல் என்றாலே ஒரு குடத்திலுள்ள நீரை சிறிது சிறிதாகச் சிந்துவது போல மூளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணருதல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும் வெளிக்கொணரக் கொஞ்சம் நேரமும் ஆகலாம். ஆர அமர எண்ணிப்பார்த்தல் என்றும் இதனைக் குறிக்கலாம். இப்படிச் செய்வது சீடனுக்கு நல்லது. அவன் கற்றுக்கொள்ளவும் உணர்ந்து போற்றவும் வாய்ப்புகள் அதிகம் கிட்டும்.
சீடன் சிறிது சிறிதாகக் குருகுல வாசம் செய்யவைத்து ஆசானால் வளர்க்கப் பட்டு முழுமைப் படுத்தப்படுகிறவன். ஆனால் சீடன் குரு சென்றுவிட்ட பிற்காலத்தில் சீடனும் ஒரு குருவாகித் தனக்குச் சீடர்களை வைத்துக்கொண்டு புகழும் பெறக்கூடும். அவன் இன்னாருடைய சீடன் என்று சொல்லப்பட்டாலும், குருவின் மறைவுக்குப் பின் அவருக்கு இணையாகக் கூட எண்ணப்படுபவன். குரு இருந்த இடத்தில் அமர்வதால் அவருக்கு இணையாகிவிடுகிறான் சீடன். குரு செய்தவை அனைத்தையும் சீடன் செய்வான்.
ஆகவே சீடன் என்றால் அவன் ஈடன் என்பவனே. ஈடு> ஈடன் ( ஈடு+ அன்), > சீடன். அமணர் என்ற சொல் சமணர் என்று வருவது போல் ஈடன் என்ற சொல் சீடன் என்று திரியும். அகர வரிசையில் உள்ள பல சொற்கள் சகர வரிசையினவாகத் திரிந்து வழங்கு இயல்பு. ஆடி என்பது சாடி என்று திரிந்து பின் ஜாடி என்றும் வந்தது காண்க. ஆலை> சாலை என்பதும் கருதத் தக்கது. சோறு ஆகிவிட்டது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதாவது முடிந்து விட்டது என்ற பொருளில் இது வருகிறது. ஆனால் ஆகு> சாகு என்பது பின்னர் உயிர் உடலில் இல்லை என்பதைக் குறிக்க வருகிறது. பொருள் சற்றே திரிந்துவிட்டது. முடிதற் கருத்து இன்னும் அங்கு இருக்கின்றது.
ஈடன் என்ற சொல்லுக்கு வலியோன், திடமானவன் என்று பொருள். இதுவே பின் சீடன் என்ற திரிந்து குருவிற்கு ஈடனாவன் என்ற பொருளில் வழங்கி, பின்னர் சீடன் சிஷ்யன் என்று திரிந்து வழங்குகிறது. இது சீஷன் > சிஷ்யன் என்று குறுகியிருத்தல் இயல்பே ஆகும். நாளை குருவுக்கு ஈடாகுபவன் என்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக