இது ஓர் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட ஒரு சிறு கவிதை. அதை அப்போது வெளியிடவில்லை. காரணத்தைப் பதிவு செய்து கொள்ளவில்லை. இப்போது கண்டெடுத்தபடியால், இங்கு வெளியிடுகிறோம். சீனர்களில் ஐலாம் வகுப்பினரே பெரும்பாலும் "காப்பிக்கடை" வைத்திருக்கிறார்கள். காப்பியைக் "குளம்பி" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
கவிதை வருமாறு:
சீனர் குளம்பியாம் காப்பி ----- கொஞ்சம்
சீனியைக் கூட்டிப்பால் சேர்த்தது வாங்கி,
யாம்குடித் தேம்சுவை சொல்வேம் ---- அதை
யாண்டுமென் பானமென் றேநனி கொள்வேம்.
கருப்பின் நிறத்ததித் தேறல் ---- இதைக்
கார்ப்பமென் சொல்லினால் குறிப்பதை ஓர்தல்.
வெறுப்பது கொண்டிடு வீரோ ---- அது
கறுப்பெனும் காரணம் கண்டிடு வீரோ?
பற்பலர் நல்லினம் கூடும் --- நல்ல
பண்புடன் வாழ்சிங்கைப் பார்புகழ் நாடு!
நற்சுவை3க் கார்ப்பமே செய்தார் ---- அவர்
நனி தரு ஐலாம் குலத்தினர் ஆவார்.
கார்ப்பம் குடிப்பது தீது ---- என்று
கழறிடும் மேதகு காட்சியர் வாது,
வாய்ப்புக் கிடைக்கின்ற போது --- வாயில்
வைத்துக் குடித்திடு வார்பாங்கி லேது.
பொருள்
தேறல் பானம் ஒருபொருட் சொற்கள்.
கார்ப்பமென் சொல் - கார்ப்பம் என்னும் சொல்.
யாண்டும் - எப்போதும்
ஓர்தல் - யோசித்தல்
நாடு - நாடுங்கள்
வாது - வாதிடுதல்
பாங்கில் - இடத்தில்
நனி - நல்லபடி
ஐலாம் - ஒரு சீனப் பிரிவினர்
கார்ப்பம் - காப்பிக்கு நாம் கூறும் இன்னொரு புதிய பெயர்.
இது பாயசம் என்பதுபோல் அம் விகுதிபெற்றது. கார் - கருப்பு.
குலம் - CLAN
பற்பலர் நல்லினம் -- நல்லினத்தாராகிய பற்பலர்
கழறிடும் - சொல்லிடும்.
மேதகு - மேலான தகைமை உடைய
குளம்பி - காப்பிக்கு உள்ள மொழிபெயர்ப்புச் சொல்.
ஏம் விகுதி பெற்ற சொற்கள்: குடித்தேம், கொள்வேம்.
கொள்வோம் என்பது கேட்பாரையும் உட்படுத்திய வினைமுற்று.
குறிப்பு:
காப்பி பற்றிய இன்னொரு கவிதை:
https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_14.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்