ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

மரம் சாய்த்தலும் சாதித்தலும்

சாதித்தல் என்பது சாய்த்தல் அடிப்படையில் மரம்வெட்டும் பழங்குடியினரிடம் வழங்கித் தமிழேறிய சொல் என்பதை யாம் முன்னர் சிலமுறை வெளியிட்டுள்ளோம். பிற குடியினருக்கு மரவேலை இல்லை. தச்சர் என்போர் வெட்டிக் கொணர்ந்த மரத்தைச் சரிசெய்வோர் ஆவர்.

இயலாத ஒன்றைச் செய்து முடித்திடலாம் என்று போய் அதில் தோல்வி கண்டவனை " போனாயே, சாய்க்க முடியவில்லையோ?" என்று கேட்பதை நீங்கள் கூர்ந்து கவனித்திருக்கலாம்.

சாய்த்தல் > சாய்தித்தல் > சாதித்தல்.  இங்கு யகர ஒற்று கெட்டுச் சொல் அமைந்தது.

இவ்வாறு யகர ஒற்று மறைந்த இன்னொரு சொல்:

வாய்> வாய்த்தி > வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்பவன் அல்லது ஆசிரியன்).. ஆர் விகுதி இணைப்பது பணிவு காட்டுதற்கு.

இதை விரித்தெழுதிய இடுகை, வெளியிட்டுள்ளேம்.

ஆங்கிலத்தில் "கோர்ஸ்" என்ற சொல் கடலில் கலம் செலுத்துவோர் வழங்கிய (nautical term) சொல்.  அதுபோல் இது மரம் சாய்த்தோர் வழங்கிய சொல். பிற்காலத்தில் பொதுவழக்கில் வந்து விட்டது.

இதுவும் காண்க.

ஒற்று மறைந்த சொற்கள்)

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_29.html 

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஆத்திகம் ஒரு மறு‌ நோக்கு

ஆத்திகம் என்னும் சொல்லை இன்று மறுநோக்கினுக்கு உட்படுத்துவோம்.

முன் வெளியிட்ட இடுகையில் ஆசு திகம் என்னும் இருசொற்களால் இக்கூட்டுச் சொல் ஆக்கப் பெற்றதென்று கூறியதில் மாற்றமொன்றில்லை.
ஆனாலும் ஆசு என்பதன் அடிச்சொல் ஆக்கம் குறிக்கும் "ஆதல்" என்ற வினைச்சொல்லே
.
ஆசு என்னும் தொழிற்பெயரைப் பயன்படுத்திச்‌ சொற்புனவைக் காட்டாமல்,  ஆ என்னும் வினையைக் காட்டினும் விளைவு ஒன்றேயாகும். ஆத்திகம் என்றே உருக்கொள்ளும். உலகின்கணுள்ள பல்வேறு ஆக்கங்களில் பற்றுக்கோடும் ஒன்றாதலின் அவ்வாறு சொல்வனைதலும் ஏற்புடைத்தே ஆகும். ஈண்டு இறைப்பற்றையே நாம்  பற்றுக் கோடு என்று முன்கொணர்தலின் சொல்லின் மையக் கருத்து அதுவே‌ என்பதனைக் கவனத்தினின்றும் குறுக்கிவிடலாகாது.

திகம் என்பது   திகைதல் என்ற சொல்லினின்று வருகிறது.  திகைதலாவது தீர்மானப்படுதல். உறுதிப்பட்டு நிலைத்தல்.  " விலை திகைந்தது" என்ற வாக்கியத்திற் காண்க.  திகை+ அம் = திகம் என்பதில் ஐ மறைந்தது (கெட்டது என்பர் இலக்கணியர்).  (திக்) + அம் = திகம் ஆகும்.

ஆஸ்தி = சொத்து.    ஆஸ்திகம் (ஆத்திகம்) என்பது ஆஸ்தி  என்பதிலிருந்து வந்ததென்பது பொருந்தவில்லை.

சொத்துச்சேர்ப்பதும் ஆக்குவதே.  ஆஸ்தியுடையான் ஆக்கம் உடையான் என்பதறிக.   ஆக்கு > ஆக்குதி > ஆ(க்கு)தி >  ஆ(ஸ்)தி   என்ற சொற்புனைவே அது.

மற்ற சொற்கள்: திகம் என்னும் ஈறு அறிக.

திகு > திக்கு ( திசை).
திகை > திசை.  க- ச போலி.  இதுவும் திசை என்னும் பொருள்.
திகு > திகழ் > திகழ்தல் ( ஒளிவீசுதல்)
திகு + அள் = திங்கள்  ( நிலா).  ஓளிவீசுவதான நிலா.  மெலித்தல் விகாரம்.
திகு > திகிரி  ( சூரியன் , ஒளிவீச்சு)  பல்பொருட் சொல்,
திகு > திகை > திகைதி  ( நாள் தீர்மானித்தது),  திகைதி> திகதி > தேதி.
திகு> திகை > திகைத்தல் (  திசையைத் தேடுதல்,  ஆகவே  மயங்குதல்).

திகு என்ற அடிச்சொல் பல்வேறு நுண் பொருட் சாயல்களைத் தன்னுட் கொண்டது.  இவற்றுள் ஒளி என்ற பொருட் சாயலை மேற்கொண்டு திகு + அம் = திகம் எனினும்  " ஆக்கத்தின் ஒளி"  (தரும் வழி ) என்று பொருளுரைக்கினும் அதுவும் ஏற்புடை த்து என்று வாதிடுதல் கூடும்.  இதேபோல் திகு = திசை என்று கொள்ளினும் "ஆக்கமுடைய மார்க்கம்" என்ற பொருள் தந்து   நலமே காணக் கிட்டுவ தாகும்.  ஆகவே பொருள் மலிந்த
ஈரடிச் சொற்களை ஈண்டு நாம் எதிர்கொள்கின்றோம் என்பதை மனத்      துக்கண்     நிறுத்தவே இஃது ஒரு பல் பிறப்பிச் சொல் என்பது தெளிவு பெறும்.


நாளடைவில் சொற்கள் பொருள்விரிவடைவது இயல்பு.  காரணங்கள் உளவாக, பொருள்விரியும்.  எ-டு: திகழ்வது சூரியன்;  சூரியன் வட்டம், ஆகவே வட்டமென்பது பெறுபொருள். (derived meaning).

இதுவும் காண்க.

ஆத்திகம் http://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_28.html

தட்டச்சுப் பிறழ்வுகள் காணின் சரிசெய்யப்பெறும்.
You may also help by pointing out. 

திருத்தங்கள்: பெறும் என்பது பேறும் என்று பிறழ்ந்தது --
திருத்தம் செய்தோம்.  29122020




.

வியாழன், 23 ஏப்ரல், 2020

ஜென்மாவும் சென்மமும்

ஆங்கில அறிவோ தமிழறிவோ கூட இல்லாத படிக்காதவர்களை அண்டி, அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வது  ஆய்வுக்கு உதவும். ஆனால் இப்போது கல்வியறிவு ஓரளவு பரவிவிட்டதாலும் ஓரமைம்பது நூறாண்டுகளின் முன் இவர்கள் எப்படிப் பேசினார்கள், என்பதைத் தொகுத்துவைக்க யாரும் முன்வரவில்லை என்பதாலும் இவை இப்போது மறைந்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். இவ்வாறான தொகுப்புகள் கிட்டவில்லை.. சில குறிப்புகள் கிட்டலாம்.

உரையாடல்களும் நகருக்கு நகர் வேறுபடுவனவாய் உள்ளன.

சிங்கப்பூரில் பண்டிருந்த தமிழர்கள், சில் மலாய்ச் சொற்களை மொழிபெயர்த்த விதம் வியக்கத் தக்கதாய் உள்ளது.  இவற்றைப் பாருங்கள்:

மலாய்                                                 மொழிபெயர்ப்பு.
போத்தோங்க்    பாசிர்                    மண்ணுமலை  (மண்வெட்டு மலை )
ஜபாத்தான் மேரா                            சிவப் பாலம் (  சிவப்பு என்பதில் பு விடுபாடு,)
கம்போங் கப்பூர்                               சுண்ணாம்புக்  கம்பம்
கொலம் ஆயர்                                   தண்ணீர்க் கம்பம்
புக்கிட் தீமா                                          ஈயமலை 
சுங்ஙாய் காலாங்                              செங்கமாரி ஆறு
கண்டங் கிருபா                                  மாட்டுக் கம்பம்

கம்பம் என்பது  சிற்றுர்  (பொருள்) .  கம்போங் என்பது மலாய். மேல்  இவற்றில் சில நேரடி மொழிபெயர்ப்பாய் இல்லை.

இதிலிருந்து பண்டைத் தமிழர்கள் பெரும்பாலும் சொற்களைக் கடன்வாங்கிப்  பேசுகிறவர்கள் அல்லர் எனலாமா? ஆங்கில அறிவு மேம்பட்ட காலை இது மாறிவிட்டது.

பிறவி என்று பொருள்படும் ஜன்மம் என்பதற்குச்  சிற்றூரார் சென்மம் என்றுதான் சொன்னார்கள் என்று தெரிகிறது.  செல்+ ம் + அம் =  சென்மம், சென்றுவிடுவது,  அழிந்துவிடுவது என்பதாம்,  ஜன்ம என்பது பிறப்பையும் சென்மம் என்பது முடிவையும் காட்டின. இவை இருவேறு சொற்கள் என்பது தெளிவு, ஆனால் அவை ஈடாய் வழங்கின.

செல்லுதல் நடைபெறுவது:  1. உயிரானது கருவினுள் செல்லுதலும் அதை உயிர்ப்பித்தலும்;   2.  பின்னர் உயிர்த்த கரு வளர, அது முற்றிக் குழந்தை ஆகி, கருவினின்று வெளியுலகிற்குச் செல்லுதல்,  இது இரண்டாவது செல்லுதல்,  3. முதுமையில் உடலினின்று பிரிந்து அகண்ட வெளியில் செல்லுதல். இதைத்தான் சாவு, மரணம் என்று சொல்கிறோம்   4. மறுபிறவி உளதாக, இன்னொரு கருவினுள் புகுந்து உயிர்த்தல்.

இவ்வாறு ஒவ்வொரு கட்டமும் ஒரு "செல்"  ஆகிறது.  இந்தச் செல்களில் கருவிலிருந்து குழந்தையாகி வெளியுலகிறகுள் புகுதலின்பின் அவ்வுடலை விட்டு ஏகுதல் ஏற்பட ஒரு சென்மம் ஆகிறது. ஆதலின் சென்மம் என்று சிற்றூரான் சொல்வது சரியானது என்று உணர்க. 

தட்டச்சு பிறழ்வு பின் கவனம்பெறும்.